Filed Under:  பி.எம்.கமால் பக்கம்

அருள் வேட்டல்-பி. எம். கமால், கடையநல்லூர்

23rd March 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

அருள் வேட்டல் 

(பி. எம். கமால், கடையநல்லூர் )

 

வித்தகன் உன்திருப்  புத்தகத் தத்துவம்
விளங்கிட அருள் புரிவாய் !
நித்தமும் மொத்தமாய் நின்திருப்  பெயரையே
நினைந்திட அருள் புரிவாய் !
உத்தமத் திருநபி  உளத்தினில் என்னுளம்
உறைந்திட அருள் புரிவாய் !
பித்தனாய் உன்னையே பற்ரிடப் பரமனே
பெரிதுமே எனக்கருள்வாய் !

நோயினில் படுத்துடல் நொம்பலப்ப  டாமலே
நோயிலா வாழ்வருள்வாய் !
பாயினில் படுத்திடும் போதிலும் உன்பெயர்
பரவிடர்க  கருள்புரிவாய் !
சேய்எனை உன்திருக் கலிமாவே தாலாட்ட
செய்தெனக் கருள்புரிவாய் !
போய்விளை யாடும்புல் வெளியிலும் மனமொத்
துருகிட அருள்புரிவாய் !

தரையெலாம் முசல்லாவாய்த் தந்தவன் உன்னையே
தலைவ ணங்கிட அருள்வாய் !
கரையிலாக் கருணையின் கடலான உன்திருக்
கருணையா லருள் புரிவாய் !
குறைவிலா வாழ்வெனக் கொடுத்துநீ  உன்னருள்
கொண்டெனக் கருள் புரிவாய் !
மறைவிலாப் பிறையென மஹ்மூது நபிதந்த
மன்னவா எனக்கருள்வாய் !

மரணத்தின் வாயிலில் மன்னவா! உன்திருக்
கலிமாவி  னாலருள்வாய்  ! 

இரணத்தின் ஒவ்வொரு இடுக்கிலும் உன்னருள் 
                     இருந்திட அருள் புரிவாய் !
சிரமத்தில் நீவந்து கைகொடுத் தெனையாண்டு 
                     கைதூக்கி அருள் புரிவாய் !
மரம்அற்றுப்  போகாமல் வேராக நீவந்து 
                     கிளைஎலாம் கனி யருள்வாய் !

பாலையில் விதைக்கின்ற பாவிநான் நீவந்து 
                      பயிராக்க அருள் புரிவாய் ! 
சோலைநீர்ச் சுனையாக சுவனப் பூமலராக 
                      சூழவந் தருள் புரிவாய் ! 
காலையில் விழித்தெழ கடைமைகள் முடித்திட
                       கருதி எனக் கருள்வாய் !
மாலையில் இரவினில் மன்னவா! உன்நினை 
                      வோடிருக்க வும்அருள்வாய் !

கனவினில் நபியினைக் கண்டுமு ஸாபஹா 
                       கொடுத்திட அருள் புரிவாய் ! 
நினைவினில் நெஞ்சினில் நித்தமும் ஸலவாத் 
                       நினைந்திட அருள் புரிவாய் !
உணவினைக் குறைத்துஉன் நினைவினைப் பெருக்கிட 
                       உள்ளத்தில் அருள் புரிவாய் ! 
பணமிலா ஏழையாய்ப் படைத்தவா! உன்னருட் 
                       பணத்தினைத் தந்தருள்வாய் ! 

உப்புநீர்க் கடலிந்த உலகத்தில் மீனாக 
                       உருவாக எனக் கருள்வாய் ! 
ஒப்புவமை இல்லாத ஓரிறையே! எந்தன் 
                       உள்ளத்தில் வந்தருள்வாய் !
தப்பிநான் சாத்தானின் சதிவலையில் வீழாமல் 
                       தயவுடன் எனக்கருள்வாய் !
அப்பிடும் இருளழுக் கைவெளுத் துளத்தினில்
                        அருளொளி தந்தருள்வாய் !

மாசிலா எண்ணமும் மருவிலாச் செயலுமென்
                         மனத்தினில் தந்தருள்வாய் !
தூசிஇவ் வுலகமென் றெண்ணிடும் உளத்தினை 
                         துய்யனே ! எனக்கருள்வாய் !
ஆசிகள் தந்தெனை ஆதரித் திடும் நபி 
                         ஆதர வெனக் கருள்வாய் !
பாசிகள் பாவமாய் நிறையுமிக் குளத்தினில்
                          பாதங்கள் காத்தருள்வாய் ! 

மூச்செனும் கயிற்றினில் மூலவ னேயுனை 
                         மணியாகக் கோர்த்தருள்வாய்!
பேச்செலாம் உன்புகழ் பேசிட நாவினில் 
                          மொழியாக வந்தருள்வாய் ! 
கூச்சலும் குழப்பமும் கொண்டஇவ் வுலகினில் 
                          மௌனமாம் மொழியருள்வாய் !
மேய்ச்சலில் ஆடுநான் மேய்ப்பவன்நீ  பசும் 
                            புல்வெளி தந்தருள்வாய் ! 


பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை