என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம்? – 12
19th June 2012 · 0 Comments
மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள்
உலகில் கோடிக்கணக்கான மக்கள் உண்ணும் புரத சத்துள்ள முக்கிய அசைவ உணவாக மீன் உள்ளது. எனவே, அதிக மீன் உற்பத்தி தேவையாய் இருக்கிறது.
எனவே செயல்திறனுள்ள பணிக்குழு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு உதவ துறைசார்ந்த அறிவும், தொழில்நுட்ப திறனும் உள்ள நபர்கள், விஷயங்களை கற்று தருவதற்கான ஆலோசகர்கள், மீன்வள மேம்பாட்டு திட்ட இயக்குனர்கள் ஆகியோர் தேவைப்படுகிறார்கள்.
மீன்களை பிடித்தல் அல்லது பெருக்குதல் போன்ற பணிகளைக் கொண்ட இதை, ஒரு தொழில் என்றும் சொல்லலாம் அல்லது துறை என்றும் சொல்லலாம். உணவளித்தல், பதப்படுத்தல், கடல் உணவுகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பணிகள் போன்றவை இந்த மீன்வளத் துறையில் அடங்கும்.
இத்துறைக்கு தேவைப்படும் கல்வி தகுதிகள்:
நீங்கள் பள்ளி படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை முடித்த பிறகு, இளநிலை பட்டப்படிப்பில் பி.எப்.எஸ்சி. படிக்க வேண்டும். மாநில விவசாய பல்கலைகளில் மெரிட் அடிப்படையிலும், இருக்கும் இடங்களின் அடிப்படையிலும் வாய்ப்பு கிடைக்கும். வேறு மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு, ஐ.சி.ஏ.ஆர்(இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்) நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையிலும், உதவித் தொகைகளின் அடிப்படையிலும் சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும்.
பி.எப்.எஸ்சி படிப்பானது, மேரிகல்ச்சர், மீன் தொழில்சார் நிறுவனம், உள்நாட்டு மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்று. இளநிலை பட்டப் படிப்பை முடித்தவுடன், மேற்படிப்பை தொடரலாம். மேற்படிப்புகளுக்கு, மத்திய கல்வி நிறுவனங்களில் இடம்பெற, ஐ.சி.ஏ.ஆர். நடத்தும் அகில இந்திய அளவிலான தேர்வை எழுத வேண்டும்.
இத்துறைக்கு தேவைப்படும் பண்புகள்:
கடல்சார் உலகைப் பற்றிய ஆர்வமும், அறிவும் இருக்க வேண்டும். கிரகிக்கும் தன்மையும், பொறுமையும் இருக்க வேண்டும். மேலும் கடினமாக உழைப்பதற்கு உரிய பக்குவமும், பொறுப்புணர்வும், தன் பணியின் மீதான காதலும் இருக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள்:
பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையையும், பல துறைமுகங்களையும் கொண்டிருப்பதால் மீன்சார் தொழிலில் இந்தியாவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்தியாவில் ஏராளமான ஆறுகளும் உள்ளன. அரசு மற்றும் தனியார் துறைகளில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன. கள அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள், மாநில அரசு துறைகளில் மீன்வள உதவி மேம்பாட்டு அதிகாரி, மீன்வள எக்ஸ்டென்சன் அதிகாரி போன்ற பணி நிலைகள் உள்ளன.
மேலும், கடல்சார் உற்பத்தி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்(எம்.பி.இ.டி.ஏ), இந்திய மீன்வள சர்வே(எப்.எஸ்.ஐ), உலக சுகாதார நிறுவனம்(WHO) போன்ற நிறுவனங்களில் அதிக பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும் சுய தொழிலுக்கான வாய்ப்புகளும் உள்ளன. மீன் உணவு தயாரிப்பு, மீன் உணவு விற்பனை, மீன் பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற தொழில்களை சுயமாகவே மேற்கொள்ளலாம். இத்துறையில் உள்நாட்டை தவிர, வெளிநாடுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
மீன்வளத் துறை சார்ந்த படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:
1.Tamilnadu Veterinary and Animal science university – Chennai-7
2.Fisheries college and Research Institute ,Tuticorin-628008
3.Bharathiyar University , Coimbatore
4.Tamil Nadu Agriculture University – Coimbatore
5.Central Polytechnic, Chennai,
6.Trust Institute Of Fisheries Tech & Engg, Thiruthani
7.Madurai Kamraj University( Research)
8.Andhra University
9.Central Institute of Fisheries education – Mumbai
10.Central Institute of Fisheries Technology – Kochi
11.College of Fisheries – Mangalore
12.Goa University
13.Indira Gandhi Agricultural university – Raipur
–தொகுப்பு :நண்பன்
தொடர்புடைய செய்திகள்
By Nanban
Readers Comments (0)
Comments are closed.


