கடையநல்லூரில் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுமா?
15th June 2012 · 0 Comments
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பார்ந்த கடையநல்லூர் .org வாசகர்களே…
இந்தக் கட்டுரை யாரையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதல்ல, மாறாக.. புரிந்து கொண்டு ‘உண்மை’ தான். அல்லது, ‘சரி’ இல்லை, ‘தவறு’ என்றோ? நீங்கள் எதை மனதில் கொள்கிறீர்களோ, அதை இதன் கீழ் படியச்செய்யுங்கள். பறந்து விரிந்து புரிந்து கொள்ளும் உங்களின் உள்ளங்களை நானும், நீங்களும் அறிந்து கொள்ளக்கூடும் என்பதால் உங்கள் முன் வேண்டுதல் வேண்டி பதிவு செய்கிறேன்…
—————————————————————————————————-
தொழுகைப்பள்ளியின் மைக்கில் ஜனாஸா தொழுகைப்பற்றி அறிவிப்பு செய்திருந்ததால் அறிவிக்கப்பட்ட சரியான நேரத்திற்கு குறிப்பிட்டு கூறியிருந்த பள்ளிவாசலுக்கு சென்றிருந்தேன்.
ஜனாஸா கொண்டு வரப்பட்டு மக்களின் வரவுக்காகவும் சலாம் சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் சபுவில் காத்திருந்தேன். ஜனாஸா தொழ வைக்க இமாம்கள் யாரும் முன்வராத நிலையில். வபாத்தானவரின் மகன் ஒருவர் மைக்கை எடுத்து தலையில் பொருத்திக் கொண்டு தொழ வைக்க முன்வந்தார். சின்ன வயதானாலும், தந்தையின் ஜனாஸாவை முன்னின்று தொழவைப்பதில் ஒரு மன தைறியமும். தொழவைக்க கூடிய ஒழுக்கமும், தொழ வைக்க போதிய மார்க்க அறிவும் வேண்டுமே, என்பதை நினைத்து தொழ வைக்க துணிந்த அவரை நினைத்து எனக்குள் பெருமை பட்டுக் கொண்டேன்.
இந்த சின்ன வயதில் தந்தையின் ஜனாஸா தொழுகையை முன்னின்று தொழவைப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்று எனக்குள் தோன்றினாலும, அவர் தொப்பி போடாத நிலையில் இருக்க, முன் ஸபுவில் நின்றிருந்த ஒருவர் முன் வந்து கர்ஷீப் ஒன்றைக் கொடுக்க, அதை வாங்கி தலையில் கட்டிக்கொண்டார்.
ஒழுச்செய்து வருபவர்களை கவனித்து, சலாம் சொல்லப்படும்வரை தொழுகைக்காக காத்திருக்கும் மரபு நம் ஊரில் கடைபிடித்து வந்திருப்பதால் சலாம் சொல்லட்டும் என்பதற்காக வந்தவர்களில் சிலர் ஊர் வம்பை பேசிக் கொண்டிருந்த நிலையில் சற்றும் எதிர் பாராமல் மைக்கில் பேச ஆரம்பித்தார் அவர்.
வழக்கமாக ஜனாஸாவுக்கு உரியவர்கள் தொழுகை நடத்தும் போதும், அல்லது இமாம்கள் தொழவைப்பதற்கு முன்பாக ஜனாஸாவுக்கு உரியவர்கள் இமாம் நிற்க்கும் பகுதிக்கு வந்து, மையத்தானவர்களை உறவு முறை கூறி அன்னாரின் வகைக்காக மன்னிப்பு கேட்பதும், அன்னார் பட்ட கடனுக்கு தாம் பொருப்பேற்பதாக கூறுவது வழக்கம் என்பதால், அது போன்ற வார்த்தைகளை கூறிவிட்டு “அல்லாஹ{ அக்பர்” என்று ஜனாஸா தொழுகையை ஆரம்பம் செய்துவிட்டார்.
ஆங்காங்கே கூடிப்பேசும் வாடிக்கையை கொண்ட நம் மக்கள். பெரும்பாலும் சலாம் கூறப்பட்டபின் தொழுகையின் விளக்கங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு தொழுகைக்காக ஸபுவில் நின்று பழக்கப்பட்டவர்கள் திடீரென்று தக்பீர் கட்டியதும் அவசர அவசரமாக ஸபுவில் வந்து இணைந்தார்கள். முறையாக மூன்று தக்பிர் கட்டியது வரை பொதுவான நேரங்கள் அனுசரிக்கப்பட்டாலும், நான்காவது தக்பீர் கட்டி நீண்ட நேரத்திற்கு பிறகு சலாம் கொடுத்தார் ஜனாஸாவை தொழ வைத்தவர்.
“இவன் என்ன தொழ வைத்தான், என்ன ஓதினான். இவனுக்கெல்லாம் இங்கே தொழுகை நடத்த ஏன் அனுமதியளித்தீர்கள். தொழுகை என்றால் என்ன என்று தெரியாதவனையெல்லாம் ஏன் இங்கு கொண்டு வந்து மையத்துக்கு தொழ வைக்க வேண்டும். நேராக மைய்யவாடிக்கு கொண்டு போக வேண்டியதுதானே, இவர்கள் இஷ்டம் போல் தொழுகை நடத்த வேண்டும் என்று விரும்பினால் தொழுது கொள்ள வேண்டியதுதானே. பிறகு ஏன் அறிவிப்பு செய்கிறார்கள்” என்றெல்லாம் பொங்கி எழ ஆரம்பித்து விட்டார்கள்.
சில நேரங்களில் சில பள்ளிகளில் நடக்கின்ற இப்படிப்பட்ட சில பிரச்சினைகளால், பெரிய விபரீதங்கள் நடந்தேறி இருக்கிறது. கண்ணியம் காக்கப்பட வேண்டிய அல்லாஹ்வின் பள்ளியில் சிலரின் நடவடிக்கையால் சல சலப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல் கல கலப்பும் ஏற்பட்டு போலீஸ் கேஸ் என்றெல்லாம் போய் வருகின்ற நிலமையெல்லாம் நம் ஊரில் நடந்திருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம்? இது போன்றவைகள் இனி நடக்காமல் இருக்க. சொந்த பந்தங்களாகவும் சம்பந்தம் செய்து கொண்டவர்களாகவும் இருக்கின்ற நாம். இரு தரப்பினராக. இல்லை பல பிரிவினராக பிளவு பட்டு இருப்பதால் நிகழுகின்ற நிகழ்வுதான் இது. இதுபோன்ற நிகழ்வுகள் நம் ஊரில் எத்தனையோ நடந்தேறிய போதிலும். இது போன்ற பொறுமையில்லாத.. பொறுத்துக்கொள்ள முடியாத நிகழ்வுகள் இனி நிகழ வேண்டாம் என்றோ, நிகழக்கூடாதென்றோ இதுவரை யாரும் நினைத்ததாகவோ, தடுக்க முயற்ச்சி எடுத்ததாகவோ தெரியவில்லை!
கடையநல்லூருக்கு ஏன் இந்த அவல நிலை!. இந்த அவல நிலை நம் அனைவருக்கும் இன்னும் எத்தனை காலங்கள் தொடர் கதையாய் தொடர இருக்கிறது, என்றெல்லாம் தெரியவில்லை. இதற்கெல்லாம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி, குதற்கமாக பேசிக் கொண்டே அலைந்து கொண்டு இருக்கிறோம்.
ஒரு வீட்டில் தகப்பன் சுன்னத்வாதி, மகன் தவ்ஹீது வாதி. தகப்பனார் வபாத்தாகி விட்டால் மகன் தவ்ஹீது முறைப்படி ஜனாஸா தொழுகை நடத்துகிறார். குடும்பத்தார்களோ? அல்லது சுன்னத்து ஜமாத்தைச் சார்ந்தவர்களோ அதை தடுக்கவில்லை! காரணம் அங்கு மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.
சில மகன்கள். குடும்பத்தை அனுசரித்து தவ்ஹீது முறைப்படி தொழுகையை மட்டும் முடித்துக்கொண்டு வெளியாகி விடுகிறார். பிறகு சுன்னத் பிரகாரம் பாத்திஹா ஓதி துவாச் செய்யப்பட்டு. ஹத்தம் ஓதி, கல்கி சொல்லி வீடுகள்வரை வந்து கை கொடுக்கப்படுகிறது.
இதுபோன்றவைகளில் ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்தும் சகிப்புத்தன்மையுடனும், பொறுமையுடனும் நடந்து கொள்வதால். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் முடிந்து விடுகிறது. ஆனாhல் இது போன்றவைகளில் விட்டுக் கொடுக்காமல், நான் பிடித்த முயலுக்கு மூன்று காலென்றும், தொழுகைப்பள்ளியென்றுகூட பாராமல் ‘இரண்டில் ஒன்றை பார்த்து விடுவோம்’ என்று அக்கம் பக்கத்து ஊர்களில் எல்லாம் அரைகூவல் விடுத்து ஆட்களை திரட்டிக்கொண்டு முரன்பாடு கொள்ளும்போது. பிரச்சினைகள் ஏற்பட்டு பிரபல்லியமாக்கப் படுகிறது.
பொதுவாக நாம் அனுசரிக்கப்பட வேண்டிய விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வும் அவனுடைய அருமைத் தூதர் எம்பெருமானர் ரசூலேக்கரீம் முஹம்மது ஸல்லல்லாஹ{ அலைஹிவ ஸல்லம் அவர்களும் சொன்ன, செய்து காட்டிய வழிமுறைகள் மட்டுமே ஆகும்.
இவர்கள் சொல்வதுதான் சரி என்றோ, இல்லை அவர்கள் சொல்வது சரியில்லையென்று நாம் எந்தக்கருத்தையும் ஆமோதிக்கத் தயாராக இல்லை. எந்தப் பிரச்சினையானாலும், அசலான நியாயமான விஷயங்களை பொதுவாகவும், பொறுமையாகவும் கையாளப்பட வேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.
பொதுவாக தகப்பனாருக்கு மகன் தொழ வைப்பது தவறில்லை என்பதுதான் நியாயம். அதுவே மிகச்சிறந்தது. ஆனால் மகனுக்கு கண்டிப்பாக தொழுகை நடத்த முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். இதற்காக அவர் ஆலீம் படித்திருக்க வேண்டும் ஹாபீஸ் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே நேரம் அரபியின் சொற்கள். இழையளவுகூட பிசகாமல். இடங்களைப் பொறுத்து. நீட்டியும் சுருக்கியும் உச்சரிக்கப்பட வேண்டும் என்பது மிக அவசியமும், கட்டாயமும் ஆகும்.
அல்ஹம்து சூராவில் வருகிற வாக்கியங்களில். ‘அன்அம்த அலைய்ஹிம்’ என்ற வார்த்தையை ‘அன்அம்து அலைய்ஹிம்’ என்று உச்சரித்தால். சொற்கள் நேர் எதிர்மறையான பொருளைக் கொhள்கிறது. ‘அன்அம்த என்ற ‘த’ வின் உச்சரிப்பில் ‘புரிந்தாயோ’ என்றும். ‘து’ வில். ;புரிகிறோம்;’ என்று பொருள் படுவதாய் உஸ்தாத்கள் விளக்கம் தருகிறார்கள். அதாவது புரிந்தாயோ என்று நாம் இறைவனிடம் வேண்டுவதற்கும். ‘புரிகிறோம்’ என்று நாம் கொடுப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் என்று சொல்கிறார்கள்.
இப்படி அரபு எழுத்துக்களில் உச்சரிக்கும் பாங்கு இருப்பதால் சொற் பதங்களை முழுமையாக உச்சரிக்கத் தெரிந்தவர்கள் மாத்திரமே தொழ வைக்க வேண்டும் என்பது கட்டாயம். அதுதான் நியாயமும். அதுகூட தெரியாதவர்கள். ஏதோ தகப்பனாருடைய ஜனாஸா தொழுகையை மகன் தொழ வைக்கலாம் என்பதற்காக மட்டும் தொழ வைப்பது எந்த வகையில் நியாயம்?.
குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்களால் ஒரு குறிப்பிட்ட சாகிபுவை வைத்து ஜனாஸா தொழவைப்பது ஒரு சாரருக்கு பிடிக்கவில்லையென்றால். அந்தந்த தொழுகைப்பள்ளியின் இமாம்களை வைத்து ஜனாஸா தொழுகை நடத்த வேண்டியதுதானே?
ஜனாஸா தொழ வைப்பதில் பிரச்சினைகள் உருவாகிற நிலையில் உள்ள வீட்டைப்பற்றி, உறவுகளைப்பற்றி ஜனாஸா, பள்ளிக்கு கொண்டு வருவதற்கு முன்னால் குடும்பத்தார்களால், அல்லது முக்கியஸ்த்தர்களால் ஒரு முடிவை ஏற்படுத்திக்கொண்டு தொழுகை நடத்தவிருக்கும் உரியவரிடம் உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டியதும், ஜனாஸா தொழுகையின்போது தொழ வைப்பவரின் விபரத்தை மூத்தவர்கள் முன்னின்று அறிவிக்க வேண்டும் என்ற அவசியத்தை ஏன் மறந்து விடுகிறார்கள்.
இன்று நம் ஊரைப் பொருத்தவரை காலம் காலமாக அதாவது குழந்தைப் பருவத்தில் இருந்தே தொழுகையை கடைபிடித்து தொழுது வருகிறவர்கள் பாதிப்பேர் என்றால். மீதி அநேகம் பேர். அரபுநாட்டில் இருக்கும் மகன், மருமகன் வேண்டுகோளுக்கு இணங்கியும். ஊரில் தக்லீப் ஜமாத்தார்களின் கட்டாயத்திற்கு ஆளாகியும், தொழுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அனைவரும் ஒரே பள்ளியில் ஒரே இமாமின் பின் நின்று தொழுகிறோம். ஆனால் அவரவர்களின் செயல்பாடுகளையும், சிந்தனையையும் ஆழமான இறையச்சத்தையும் கொண்டே அவரவர்களின் தொழுகைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. யாருடைய தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அல்லது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுபற்றி யாருக்கும் தெரியாது என்றாலும்.
அவரவர்களின் உடல் சுத்தம், உடை சுத்தம், ஒழுச்சுத்தம், உள்ளம் சுத்தம் ஓதுதல் சுத்தம் போன்ற வற்றால் தன் தொழுகையின் மீது தன்னம்பிக்கை இருக்கும் என்பது உண்மை. இப்படி இருக்கிற நிலையில் இமாம்கள் சில நேரங்களில் ஓதுவதையோ, ரூக்குவையோ, ஸஜ்தாவையோ மறந்து விடும்போது. எடுத்துச் சொல்கிறோம்… எரிச்சல் படுகிறோம், கவனத்துக்கு கொண்டு போகிறோம், கவலைப்படுகிறோம்.
இறந்து போகிறவர்களின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வதால் நன்மைகள் என்பதையும், அன்னாரின் ஹக்கில் துவாச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் பல வேலைகளையும், பயணத்தையும் விட்டு பள்ளிக்கு வந்து காத்திருக்கும் போது.
அறிவிப்பு நேரத்தை அரைமணி நேரம். ஒரு மணிநேரம் மகன் வருகிறான். மருமகள் வருகிறாள் என்று காலம் கடத்துவதையும், கொண்டுவரப்படுகிற ஜனாஸா உரிய முறையில் தொழத் தெரிந்தவர்கள் இருந்தும். தொழ வைக்கத் தெரியாதவர்களால் தொழவைத்து. வந்தவர்களை உதாசீனப்படுத்துவதையும் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும் என்று சிலருக்கு புரியவும் இல்லை, புரிந்து கொள்ள முயற்ச்சி செய்வதும் இல்லை. இப்படிப்போன்றவர்களால் ஏற்படுகிற பிரச்சினைகள்தான் ஏராளம்.
இன்றைய கால கட்டங்களில். ஜனாஸாவை தூக்கி வரும் பணிகளில் இளைஞர்கள் தலையிடுவதால். தூக்கப்படுகிற ஜனாஸா விரைவாக கொண்டு வரும்போது, ஒரு சிலரால் “அப்படியெல்லாம் ஜனாஸாவை தூக்கிக்கொண்டு ஓடக்கூடாது. பொறுமையாகப் போவதாக இருந்தால் ஜனாஸாவை தொடுங்கள். இல்லாவிட்டால் விட்டு விடுங்கள்” என்று விரட்டப் படுகிறார்கள்.
நியாயமான முறையில் நாம் கொஞ்சம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்: யாராக இருந்தாலும் ஒரு கனமான பொருளை தூக்கி அருகாமையில் வைக்கும் போது, விரைந்து சென்றே கொண்டு போய் சேர்க்கிறோம். இது மனிதனுடைய இயல்பு. ஒரு மனிதனால் மட்டும் செய்யப் படும்போதே இவ்வாறென்றால், பலரால் தூக்கிச் செல்லப்படும் ஜனாஸா விரைந்து தூக்கிச் செல்லப்படுவதில் தவறில்லை. இருப்பினும், ஜனாஸா அலக்கழிக்கப் படாமல் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதுதான் உண்மை.
ஒரு ஹதீஸில் கூறப்படுகிறது: ஜனாஸாவை தூக்கிக் கொண்டு செல்லும்போது, ‘ஜனாஸா பேசுகிறது’ என்று. நன்மைகள் செய்து சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்ட ஜனாஸா, கொண்டு செல்லப்படும்போது “என்னை விரைவாக எடுத்துச் செல்லுங்கள்” என்றும். தீமையை சம்பாதித்து நரகத்தை சொந்தமாக்கிக் கொண்ட ஜனாஸாக்கள் “கைசேதமே, என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள். கொழுந்துவிட்டு எரியும் குழியில் போடவா” என்று கூறுமாம். அப்படிக் கூறுவது, ஒரு ஹதீஸில் மனிதனுக்கு மட்டும் கேட்காதென்றும். இன்னொறு ஹதீஸில் மனிதனுக்கும், ஜின்களுக்கும் கேட்காதென்றும் கூறப்படுகிறது.
எத்தனையோ நபர்கள் இன்னும் பள்ளித் தொடர்பு இல்லாமல் நம் ஊரில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தாய் தகப்பனுக்கு தொழுகையின் கட்டாயத்தை தகுந்த முறையில் அன்பாகவும். அதிகாரத்தாலும் எடுத்துக்கூறி தொழுக வைக்கத் தவறியவர்களும், தொழவைக்கத் தெரியாதவர்களாகவும் இருக்கையில். அவர்களால்தான் தொழ வைக்க வேண்டும் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?.
அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் தொழுகைக்கு முன் பொறுமையைப்பற்றிக் கூறுகிறான். எந்தவொரு பிரச்சினையானாலும் பொறுமையையும,; நேர்மையையும் கொண்டே தீர்க்கப்படவேண்டும் என்பது கட்டாயம்.
தனிப்பட்ட நபர்களின் தாக்குதலுக்கு தாக்குண்டு இறந்து போனவர்களின் ஜனாஸாவுக்கு பங்கம் விளைவிப்பது. படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் அழகல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள கடமைப் பட்டுள்ளோம்;. “இந்த மய்யவாடியில் அடக்க இடம் தரமாட்டோம்” என்று மைய்யங்கள் நம் ஊரில் அலைக்களிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
ஜனாஸாவை அடக்கி விட்டு வீட்டிற்கு சென்று கைகொடுக்கும் பழக்க வழக்கம் நம் ஊரில் இருந்து வருகிறது. இது எந்தளவு நம்மில் அங்கிகரிப்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ள அனைவரும் கடமைப் பட்டிருக்கிறோம். முன்பெல்லாம் அறியாதவர்களாய் இருந்தோம். தறித்தொழில் மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தோம். இப்போதெல்லாம் வியாபாரங்கள் அரசாங்க உத்தியோகஸ்த்தர்கள் என்றும். இன்னும் எத்தனையோ வேலைக் காரணங்களால் கவரப்பட்டு நேரம் போதாதென்ற நிலையில் நெருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டு இறந்து போனவர்களின் வீட்டிற்கு முன்னால் வந்து ஆயிரமாயிரம் வேலைகளை போட்டுவிட்டு மணிக்கணக்காய் வெயிலிலும், பனியிலும், மழையிலும் உரியவர்களின் வருகைக்காக காத்துக் கிடக்கிறோம். வயதானவர்களும், கால் வலிக்காரர்களும், சுகர், பிரஷர் என்று உள்ளவர்கள் தங்களின் இயலாத நிலையை மனதுக்குள் நினைத்து வேதனை படுபவர்களும் இதில் அடங்குபவர்கள். பாவம் பள்ளியில் உட்கார்ந்து தொழுபவர்கள்கூட கால் கடுக்க நின்று தன்னை அடையாளம் காட்டிச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையைக் கண்ணாரக் காணுகிறோம்.
உரியவர்கள் வந்த பின்னால் கைகொடுப்பது துவங்குகிறது. வரிசை பிடித்து நிர்ப்பவர்பவர்கள் நின்று கொண்டேயிருக்க ஆங்காங்கே இருப்பவர்கள் அடுத்தடுத்து வரிசையின் முன் பகுதியில் நுளைந்தும், ஐந்து வரிசை ஆறு வரிசைகளாக நின்றும் கைகொடுத்துக் கொண்டு போவதால். வரிசையில் நிர்ப்பவர்கள் முன்னால் செல்பவர்களை வசைபாட வழி வகுக்குகிறது. இதுபோன்ற கைகொடுக்கும் பழக்க வழக்கத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். காரணம் ஜனாஸாவுக்கு நாம் செய்ய வேண்டிவைகள். ஜனாஸாவுக்கு பின்னால் நாம் செல்ல வேண்டும் என்பதும், கட்டாயமாக ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான்.
அரபு நாடுகளில் ஜனாஸா அடக்கம்; முடிந்ததும், அந்த இடத்தில் உரியவர்கள் நின்றிருக்க. அங்கு வைத்து சலாம் கூறி முசாபத் செய்து விட்டு சென்றுவிடுவது வழக்கமாக இருந்து வருவதை நாம் காண முடிகிறது. அது போன்று பள்ளிவாசலின் வெளிப்பகுதி அல்லது மைய்யவாடியில் வைத்தோ இதுமாதிரியான நடைமுறையை, முடித்துக் கொண்டால், கைகொடுக்கிறோம் என்ற பெயரில் ஏற்படுகிற மனக்குறைபாடுகளை களையலாம் என்பது மட்டுமின்றி. அனைவரும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளும் வாய்ப்பும், கிடைக்கும் என்பது எல்லோரின் பொதுவான கருத்தாகும்.
நம் கடையநல்லூரில் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்…..
செங்கோட்டையன்
தொடர்புடைய செய்திகள்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


