Filed Under:  படைப்புகள்

கடையநல்லூரில் பெண் கிடைக்கவில்லை!-செங்கோட்டையன்

15th July 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

கடையநல்லூரில் பெண் கிடைக்கவில்லை என்றால் நம்புகிறீர்களா?.. ஆமாங்க, உண்மைதான். நம்ம கடையநல்லூரில் தற்போது மாப்பிள்ளைகளுக்கு பெண்கள் கிடைக்கவில்லை! ஆச்சரியமாக இருக்கிறதா?

“உண்மை.. உண்மை.. உண்மை..” என்று சொல்ல வேண்டிய கட்டாயமாகி விட்டது என்பதுதான் உண்மை.

“என்னங்க நீங்க அப்படிச் சொல்றீங்க.. எங்க வட்டாரத்திலே அதுவும் எங்க குடும்பத்துக்குள்ள இருக்கிற பெண்களுக்கு இதுவரைக்கும் மாப்பிளெ கிடைக்காமெ நெடுகிலும் மாப்பிள்ளை தேடி விசாரித்துக் கொண்டு அலைகிறார்கள். ‘நீங்க என்னானா.. கடையநல்லூரிலெ பெண் கிடைக்கலனு’ அடித்து சொல்வது மட்டுமில்லாமல் ‘உண்மை.. உண்மை’னு மூனுதரம் சொல்றீங்க”

என்று சொல்லுவது காதில் விழத்தான் செய்கிறது. பின்னே ஏங்க மாப்பிளைக்கு நிறைய வீட்டில் போய் பெண் கேட்டால்..

“ஏ.. மதினி மவனுக்கு வைச்சிருக்கோம்”
“எங்க அண்ணன் மகனுக்கு வைச்சிருக்கோம்”
“வாப்ப கூடப்பிறந்த தங்கச்சி மகனுக்கு”
“உம்மா கூடப்பிறந்த தம்பி மகனுக்கு” என்று சொல்வது மட்டுமில்லாமல்,

“அவ்வோ வாப்பாவும், எங்க வாப்பாவும் சேக்காளியா இருந்ததாலெ அவ்வோ ரெண்டு பேரும், இந்த புள்ளெ சின்னப்புள்ளையா இருக்கையிலே அவ்வ மவனுக்கு எடுக்கிறதா சொல்லிட்டாகளாக்கூ.. அதனாலெ எங்களாலெ ஒன்னு செய்ய முடியலே..,” என்று மாப்பிள்ளையை பெற்றவர்கள் அல்லது பெண்னை பெற்றவர்கள் சொல்கிறார்கள்.

“எங்களுக்கு உங்கள்ட்ட பெண் எடுக்க கொடுக்க ரெம்ப இஸ்ட்டம்தான் இருந்தாலும் சொந்தத்திலெ மாப்பிளெ பொண்னு இருக்கையிலெ அப்படி.. திடுதிப்புனு முகத்தெ முறுச்சாப்லெ செய்ய முடியாதையம்மா..” என்று இன்றைய பெண், மாப்பிள்ளை வீட்டார்களின் வீடுகளில் சொல்லப்படுகிற.. பேசப்படுகிற சம்பாஷனைகளும். இன்னும் சில மாப்பிள்ளை வீட்டார்கள்

“நீ என்னம்மா.. அந்தபுள்ளயெ சொல்றெ அவுளுக்கு இருக்க சொந்த ஊடு இல்லியமா..” என்றும்.
“இன்னேறு.. அந்தபுள்ளெ கருப்பாவுலமா இருக்கு..” என்றும்.
“ச்சீ உனக்கு வேறெ வேலயில்லியா, அந்தப்புள்ளெ வாண்டாமா, அவ்வ தங்கச்சியெ வேனும்னா கேக்குவுமெ அவ்வெ தங்கச்சி நல்ல லெச்சணமாயிருக்கு..” என்றும். சொல்லத்தான் செய்கிறார்கள்.

இன்னும் சில பெண் வீட்டார்கள்

“எங்குமாக்கு வேறெ வேலயில்லெ.. அவ்வும்மா ஒரு பொம்புளையா?, மூத்தவனெ கல்யாணமுளுச்ச நாலு நாள்லெ வெளியெ உட்டுட்டா” என்றும்
“சொந்த ஊடுல்லாமெ இருக்கிற மாப்பிளெக்கு என் பொண்னெ குடுத்துட்டு ஒவ்வொரு இடமா குன்சட்யெ தூக்கிட்டு ஏம்புள்ளெ அலையவா..” என்றும்
“ச்சீ.. அவனுக்கா விருதா மாதிரி ஒரு வேலையு பாக்காமெ சுத்திட்டு அலைறவனுக்கா.. பெண் கொடுக்கா, வேற சோலியிருந்தா போயி பாரு, அந்த புள்ளைக்கீனு வொரு மாப்புளெ இனிமெ பொறந்தா வரப்போறான்.. வரட்டுவு வரட்டுவு பாத்துக்குடுவோம்..”

என்று பேசித்திரிபவர்களின், மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண் கிடைக்காமலும். பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை கிடைக்காமலும் நம் ஊரில் மட்டுமில்லாமல் எல்லா ஊர்களிலும் காலத்தோடு பயிர் செய்யப்படாத நிலங்களைப்போல் மாப்பிள்ளைகளும் பெண்களும் காத்திருக்கத்தான் செய்கிறார்கள்.

மாப்பிள்ளை வீட்டார்கள் தங்கள் தகுதியை மறந்து அவர்களைவிட வசதியானவர்களை நாடுவதும், பெண் வீட்டார்கள் தங்களின் தகுதியை மறந்து அவர்களை விட வசதியானவர்களையும். படித்த மாள்ளையை நாடுவதும், அல்லது கல்யாணம் முடிந்தவுடன் பெண்ணை கூட்டிக்கொண்டு வெளிநாடு கூட்டிச்செல்லக்கூடியவர்களாய் பார்ப்பதும். தூரம் தொலைவைக்கூறி தட்டிக்கழிப்பதும். இன்னும் சொல்லப்போனால் அக்கா தங்கையில்லாத வீடாகவும், வீட்டுக்கு ஒரு பிள்ளையாக இருக்கும் வீடாகவும் பார்க்கும் படலம் நம் ஊரில் இருக்கத்தான் செய்கிறது.

அப்படியெல்லாம் இல்லையென்றோ? இருக்காதென்றோ மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அப்படியானால், நம் ஊரில் பெண்களல்லவா அதிகமாக இருக்க வேண்டும். அதுவும் இல்லாமல்தானே தலைப்பில் மாப்பிள்ளைக்கு பெண் கிடைக்கவில்லையென்று ஆணித்தரமாக அடித்து எழுதப்பட்டிருக்கிறது என்றால், அதுதான் உண்மை.

மாப்பிள்ளை வீட்டாரைப்பற்றி மேலே கூறப்பட்ட குற்றங்குறைகளைச் சாராத நல்ல படித்த, வெளிநாட்டில் பணம் சம்பாதிக்கிற மாப்பிள்ளைக்கு பெண் கிடைக்கவில்லையென்று மாப்பிள்ளையை பெற்றவர்களும், பெரியவர்களும் கூறிய உண்மையான தகவலைத்தான் இந்தக்கட்டுரை தலைப்பில் கொண்டுள்ளதே தவிற. கட்டுரை எழுதப்படவேண்டும் என்பதற்காக எழுதப்படவில்லை! என்பதையும், யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எழுதவில்லையென்பதையும், யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை என்பதையும். தயவு செய்து வாசகர்கள் புரிந்து கொண்டு ஊரின் உண்மையான நிலையைத்தான் எழுதியிருக்கிறது என்று. யாரேனும் ஒருவர் உணர்ந்து கொண்டாலே இதை எழுதிய பலனும் வெளியிட்ட பலனும் கிடைக்க வழி வகுக்கும்.

“இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” இப்படியொரு சினிமா பாடல்.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” இப்படியும் ஒரு பாடல். இது தங்களின் அறிவுத்திறமையை பயன் படுத்தி கவிஞர்கள் எழுதிய கவிப் புணையல். ஆனால் நம்மை படைத்து பரிபாலித்த வல்ல இறைவன் திருமறை மூலம் என்ன கூறுகிறான்.

“கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்iமான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் தகுதியானவர்கள் அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள் இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.”(அல்குர்ஆன் 24:26)

அப்படியென்றால் இறைவனால் நிச்சயிக்கப்பட்டதை நாம் தேடுகிறோம். யாரை யாருக்கென்று அவன் முடித்து வைத்ததை நாம் முடிக்கிறோம். இதற்காக நமக்குள் ஏற்படுகிற ஒரு சின்ன குளறுபடி. இந்த குளறுபடிகள் சமுதாயத்தில் இல்லாமல் இருக்க முடியாது.

படித்தவர்கள.; படிக்காதவர்கள.; பணமுள்ளவர்கள் பணமில்லாதவர்கள் என்றுள்ள எல்பேர்களும், இப்போது விரும்புவது வெள்ளைநிறப்பெண்னாக இருக்க வேண்டும் என்று.

பெண் குழந்தை பிறந்தாலே “சே.., ஆம்புளெ புள்ளேனுலோ நினைச்சேன். அந்த புள்ள படுத்த சைசே வைச்சு வயறு பெருசாவாம இருந்திச்சியா அதெவைச்சு பாக்கையிலே ஆம்புள புள்ளையாத்தான் இருக்கும்னு நெனைச்சேன்” என்று சொல்லித் திரிந்தவர்கள். இப்போது புதிய தாரக மந்திரம் ஒன்றை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதுதான் “பொம்ள புள்ளையாத்தான் பொறந்துச்சு கொஞ்சம் செவத்தப்புள்ளையா பொறக்க கூடாதா?’ என்றெல்லாம் ஒரு மனக்குறைவுகள் நம்மவர்கள் பெரும்பாலரிடம் தோன்ற ஆரம்பித்து விட்டது.

“இன்னேறு.. இந்தப்புளளெ பொறக்கையிலெ எம்புட்டு செவப்பா இருந்திறு தெரியுமா, இப்பந்தானம்மா இப்படி கருத்துப்போச்சு, நான் என்னசெய்யட்டுவு.. நாளைக்கு மாப்பிளெக்கு நாமெ அலைய்றாப்பிலெவருமே” என்று ஒருத்தியும்.

“போம்மா.. புள்ளெ வயசுக்கு வந்துட்டா பிறந்த மாறியே செவப்பா ஆயிடுவா..” என்று மற்றொருத்தியும் பேசிக்கொள்கிறார்கள்.

பிறக்கும் குழந்தைகள். பெரும்பாலும் நல்ல குழந்தையாக அதிலும் முக்கியமாக வெள்ளை நிறக்குழந்தையாக பிறக்க வேண்டும் என்று கருத்தம்மா நினைப்பதிலும் தவறில்லை. அதற்காகத்தான் குங்குமப்பூவும் மாதுளம்பழம் என்றெல்லாம் குழந்தை உண்டாகியிருக்கும் பெண்களுக்கு கொடுக்குகிறோம். அனால் அதையும் மீறி குழந்தை கருப்பாக பிறந்தால் ஏன் சிலர் இப்படி அலட்டிக்கொள்கிறார்கள், ஆதங்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை!

உம்மா மாதிரி வேண்டும், வாப்பா மாதிரி வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் போய். இப்போதெல்லாம் சதா காலம் சீரியலிலே மூழ்கிக்கிடப்பதால், ஐஸ்வரியா மாதிரி வேண்டும். திரிஷா மாதிரி வேண்டும், கமலஹாசன் மாதிரி.. விஜய் மாதிரி வேண்டும் என்று எண்ணுகிற அளவு சில தாய்குலங்கள் சீரியலைப்பார்த்து சீரியஸாக நினைக்க வந்து விட்டதால், இன்றைய இளைய தலைமுறையினர் நடுவில் சிவத்தப் பெண் வேண்டும் என்ற சீரழிவு வந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தாய் தந்தை கருப்பாக இருக்கையில் குழந்தை வெள்ளையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம். அரபு நாடுகளில் உள்ள சில காட்டு அரபிகள் என்று சொல்லப்படும் கிராமத்து வயதான சில கருப்பு அரபிகள். தங்களின் வம்சா வழிகள் வெள்ளையாக வரவேண்டும் என்றோ? என்னவோ? அடுத்த நாடுகளுக்குச் சென்று, வெள்ளை நிற பெண்களை கல்யாணம் கட்டிவருவதை அரபு நாடுகளில் கிராமத்தில் உள்ள நம்மவர்கள் கண்டிருக்கக்கூடும். ஆக மொத்ததில் வெள்ளை நிறத்திர்க்கு உலகில் மோகம் அதிகம்தான் என்று நாம் கொள்ளலாம். ஆனால் நம் மதத்தில் அப்படிப்பட்ட ஆசை ஆகுமானதாக இல்லை என்பதுதான் உண்மை.

முன்பெல்லாம் நாம் கல்வி வளர்ச்சியில் பின் தங்கியிருந்தோம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இப்போது கல்வியால் ஒரு நடு நிலையை அடைந்து கொண்டிருக்கிறோம். இப்போதும். நாம் கல்வி பெறாத காலத்தில் இருந்தது போன்று இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வைகையில் நியாயம் என்று தெரியவில்லை.

உதார்ணமாக தாய்மாமன் மகள் என்றும் மாமிமகள் என்றும். வாப்பா உம்மா சொல்லிவிட்டார்கள் என்பதற்காக மாப்பிள்ளையிடம் “பெண்ணை பிடித்திருக்கிறதா?” என்று கேட்பதைப்போல், பெண்களிடமும் “மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா உனக்கு. அவரை கல்யாணம் செய்து கொள்ள உனக்கு விருப்பமா?” என்று, இப்போது எத்தனை பெற்றவர்கள் தன் பெண் பிள்ளைகளிடம் கேட்டு சம்மதம் பெற்று மாப்பிள்ளையை நிச்சயிக்கிறார்கள்?.

தினசரி பஸ்களில் சென்று கல்லூரியில் படித்து வரும் பெண்களும் சரி. அல்லது ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் பெண்களும் சரி, ஒரு சிலருக்கு மட்டுமே பெற்றவர்கள் விருப்படி நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இன்னும் சில பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் பிள்ளை படிப்பு முடிந்த பின் மாப்பிள்ளை பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விடுகிறார்கள்.

ஆனால் இன்னும் சிலரோ அந்த பெண்களின் சம்மதம் இல்லாமலும் அவர்கள் நினைத்துள்ள மாப்பிள்ளைக்கு மணமுடித்துக் கொடுக்க வாக்கு கொடுத்து விடுகிறார்கள். பாவம் படித்த பிள்ளைகளின் மனப்பக்குவம், படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளின் மனப்பக்குவம் எவ்வாறு இருக்கும் என்று சில பெற்றோர்கள் சிந்திப்பதேயில்லை

பிள்ளை செல்கின்ற இடங்கள் சேருகின்ற விதங்கள் பாரக்;கின்ற போஸ்ட்டர்கள் பேசுகின்ற வார்த்தை ஜாலங்கள் இவைகளெல்லாம் நல்லவர்களையே நாணச்செய்து விடுகிற இந்தக்காலத்தில். பாவம் அவர்கள் பருவத்தில் என்ன செய்வார்கள். காலத்தோடு பயிர்செய்ய வேண்டும் என்பதுபோல் வெளிய+ருக்கு செல்கின்ற நிலையிலே அவர்களின் சம்மதத்தோடு ஒரு மாப்பிளையை பேசி முடித்து வைத்தால் அவர்களின் கவனம் சிந்தாமல் சிதறாமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்ட நம் சமுதாயத்தில் இன்னும் அறியப்படாத காலத்தில் இருந்தது போன்றே இன்னும் இருந்து கொண்டு இருக்கிறோம். இதனால் நம் சமுதாயத்தில் எத்தனை இழிவான நிகழ்வுகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அல்லது சந்திக்க நேரும் என்பதை பெண் மக்களைப் பெற்று பேணி வளர்க்கின்ற நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

படித்துக்கொண்டிருக்கிற சில பெண் பிள்ளைகளை பெண் கேட்டு சென்றால். அந்தப்பெண்களிடம் சம்மதம் கேட்காமல் தாய் தகப்பன், பெத்தம்மா பெத்தாப்பா பேசிக்கொண்டதால் ‘இன்ன மாப்பிள்ளைக்கு இன்ன பெண்ணை வைத்திருப்பதாக’ தகவல் தருகிறார்கள். பிடிக்காத விருப்பமில்லாத மாப்பிள்ளையை அல்லது விருப்பமில்லாத பெண்ணை மணமுடித்து அல்லது நிச்சயிக்கப்படும் போது. அவர்கள் வழியும் நெறியும் தவறிப்போவதற்கு சம்பந்தப்பட்டவர்களே காரணமாகி விடுகிறார்கள் என்பதை நினைக்கும் போது நம்மால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை!.

சொந்த பந்தங்கள் விட்டுப் போகக்கூடாது என்று பெற்றவர்கள் நினைப்பது நியாயம்தான். அப்படி நினைப்பது தவறில்லைதான் அதற்காக நாம் பெற்ற பிள்ளைகளுக்கு நாமே அநியாயம் செய்யக்கூடாது என்பதுதான் அன்பான வேண்டுகோள். இணைந்து வாழப்போகும் இருவரின் உணர்வுகளும் மதிக்கப்படவேண்டும் என்பதுதான் இதன் மூலக்கருத்து.

இன்றைய இளைய சமுதாய இளஞர்கள் காதலித்து கல்யாணம் செய்வதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் கைகளில் செல்போனை வைத்துக்கொண்டு கால் கடுக்க சந்து பொந்துகளில் ஒத்தக்கால் கொக்காய் நின்று கொண்டிருப்பதை நினைக்கையில் வேதனையாகவும் இருக்கிறது. குழந்தைகள் எல்லாம் இந்தக்கொள்கையில். ஆனால், பெற்றவர்கள் எல்லாம் அந்தக்கொள்கையில் இதன் முடிவு என்னவாக முடியும். வரும் காலத்தைப்பற்றி சிந்திக்க நாம் அணைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

கல்யாண வயதையொட்டியுள்ள இளஞர்கள் தனக்கு வரவேண்டிய பெண் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று பெற்றவர்களிடம் அடம் பிடிப்பது அதிகம். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் அப்படிச்சொல்லும் அந்த நல்லவர்களின் தாயார் கருப்பாக இருந்தால் என்ன செய்வது?. அவர்களின் சகோதரிகள் கருப்பாக இருந்தால் என்ன செய்வது?. சரி அவர்கள் விருப்பம் போல் வெள்ளைப்பெண்ணையே பார்த்து கட்டிக்கொள்ளட்டும். பெத்தம்மா பெத்தப்பா அல்லது குடும்பத்தில் யாதொரு வழிலாவது வாரிசு அடிப்படையில் அவருக்கு கருப்பாக குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது? என்பதையெல்லாம் அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த தருணத்தில் மறைந்த மாமேதை முஹமதலி ஜின்னா அவர்களின் வழக்குகளில் பிரபலியமான ஒரு வழக்கு ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

வெள்ளைக்காரன் ஒருவனும், கருப்பினத்தைச்சார்ந்த ஒருவனும் இனைபிரியாத நண்பர்களாய் இருந்தார்கள். இந்த நிலையில் வெள்ளையினத்தைச் சார்ந்தவனின் மனைவி குழந்தை பெற்றபோது பிறந்த குழந்தை கருப்பாக இருந்ததால். தன் மனைவி தனக்கு துரோகம் செய்து கருப்பனோடு உறவாடியதால் பிறந்த குழந்தை அது. தனக்கு பிறக்கவில்லையென்றும். அவளை விவகாரத்து வேண்டி கோர்ட்டில் கேஸ் போட, பல கோர்ட்டுகளில் வெள்ளையனுக்கு சாதகமாக தீர்ப்பாகவே கடேசியாக வெள்ளையனின் மனைவி, பார்அட்லா முகமதலி ஜின்னா அவர்களை நாடினாள்

“தான் அவ்வாறு தன் கணவருக்கு துரோகம் செய்யவில்லை”யென்றும் “பிறந்த குழந்தை தன் கணவனுக்கு கருவுற்ற குழந்தைதான்” என்ற உண்மையை கூறினாள் அவள். பல மேல் முறையடுகள் செய்யப்பட்ட போதிலும் அனைத்து கோர்ட்டிலும் வெள்ளையனுக்கு சாதகமாகவே தீர்ப்பாகியிருந்ததை மனதில் கொண்ட முகமதலி ஜின்னா அவர்கள். வெள்ளையனும் அவன் மனைவியும் தங்கி வாழ்ந்த விட்டை பார்க்க வேண்டும் என்று கூறி அவர்கள் கூடிவாழ்ந்த வீட்டிற்கு வந்து, அவர்களின் படுக்கையறையை பார்வையிட்டார். அவர்களின் படுக்கையறையில் வெள்ளையனும் கருப்பனும் இனைந்தார்போல் எடுத்த பெரிய போட்டோ ஆல்பம் ஒன்று பிரேமிடப்பட்டு படுக்கைக்கு நேராக உயரத்தில் மாட்டப்பட்டிருந்ததைக்கண்டார். அந்த போட்டோ மூலம் அவருக்கு சின்னதொரு குழு கிட்டியது.. உடனே அப்போதைய மரபனு சோதனை மருத்துவ நிபுணரை அனுகி விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு. அந்தக்காலத்திலே மிக அதி நவீன மதியாற்றலால்.

“வெள்ளையனுக்கு பிறந்ததுதான் அந்தக் குழந்தையென்று” வாதிட்டு

“அவர்கள் உறவு கொண்டிருந்தபோது அவளின் கவனம் படுக்கையறையில் மாட்டப்படடிருந்த கருப்பனின் உருவத்தின்மேல் கவனம் கொண்டதால் கருத்தரித்த குழந்தை கருப்பாக பிறந்தது”என்றும்

“அந்த குழந்தையின் ரத்தத்தையும் அந்த வெள்ளையனின் ரத்தத்தையும் மரபனு சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்” என்று வாதாடி அது உண்மைதான் என்று அறியப்பட்டு அவளுடைய அந்த கருப்பு நிற குழந்தை வெள்ளையனுக்கு பிறந்ததுதான் என்று தீர்ப்பானது. அதன் பிறகு அந்த வெள்ளையன் அவளை ஏற்றுக் கொண்டதாகவும், அந்த கருப்பனோடு முன்பைவிட அவர்களின் நட்பு மேலும் பலமானதா இருந்ததாகவும் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு முகம்மது அலி ஜின்னா அவர்களின் வழக்குகளின் தொகுப்புகளிலிருந்து படித்த ஞாபகம் வருகிறது.

இன்றைய இளஞர்கள் சதாகாலம் செல்போன்களை கையில் வைத்துக் கொண்டு நடிகைகளின் படங்களையும் செல்போனிலே டிவி தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டு பேஸ்புக் மூலமும் தகாத தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதில் தங்களை முழுவதுமாய் உட்படுத்திக்கொண்டு அதே போன்ற உருவ அமைப்புக்களைக் கொண்ட பெண்கள்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று கனவு கொண்டிருப்பதால் அவர்கள் இப்படியொரு இழிவான நிலைகளுக்கு தள்ளப்படுகிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

கல்யாணம் என்பது தியாகத்தின் திறவு கோல் என்பதை திருமணமாகும் ஒவ்வொருவரும் உணர வேண்டிய கட்டாயம். தான் நேசித்தவளைவிட தன்னை நேசிக்கும் ஒருவளை திருமணம் செய்து கொள்வதுதான் ஒரு புத்திசாலிக்கு அழகு. காதலிக்காதீர்கள் ஆனால் கல்யாணம் செய்தபின் மனைவியை காதலிக்காமல் விட்டுவிடாதீர்கள்.

தனக்கு வரப்போகும் மனைவி அழகாய் இருக்க வேண்டும் சிகப்பாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் பார்ப்பதை விட, இறையச்சமுள்ள பெண்ணா? ஈமானுள்ள பெண்ணா என்று பார்ப்பதுதான் மிக அவசியம். உங்கள் வசதியைவிட குறைந்த வசதியுடைய பெண்ணையோ, அல்லது உங்கள் அழகு நிறத்தைவிட குறைந்த அழகு கொண்ட பெண்ணையோ நீங்கள் மணம்செய்து கொண்டு பாருங்கள். உங்களை மொய்த்துக்கொண்டு நீங்களே உலகம் என்று சதா காலமும் உங்களின் பேரன்புக்காக பின்னிக்கொண்டிருக்கும் ஒரு உத்தமியை காணலாம்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எத்தனையோ பேர் மாற்றுத் திறனாளிகளை மணம் செய்து கொண்டு மாநிலத்தில் வாழ்வதாய் நாம் அன்றாட நிகழ்வுகளில் கானுகிறோம். ஆனால் இஸ்லாத்தில் இருந்து கொண்டு இறையச்சமுள்ளவர்களென சொல்லிக்கொண்டு அல்லாஹ்வின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றும் பேரியக்கத்தில் இருந்து கொண்டு. வீடுகளில் குமறிக் கொண்டிருக்கும் குமர்களை குறை கூறிக்கொண்டு பெண் கிடைக்கவில்லை.. பெண் கிடைக்கவில்லையென்று சொல்லிக்கொண்டு அலைகிறோம் இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை!.

அல்லாஹ்வின் கட்டளைகளை அனுவளவும் பிசகாமல் அப்படியே வாழ்ந்து காட்டிய எம்பெருமானார் நபிகள் நாயகம.; நல்லொழுக்கத்தின் நாயகமாகவும் நானிலத்தில் அழகின் ஒளியாகவும் அகிலம் போற்றும் அருட்கொடையாகவும் அவதரித்து இவ்வுலகில் இருந்தபோது. அவர்கள் ‘ஈமான் கொண்டவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று முதலில் விதவை அன்னை கதிஜா நாயகியைத்தான் மணந்து நமக்கு முன் மாதிரியான வழிகாட்டினார்கள்.

அந்த வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் பின்பற்றி வருவதாக கூறிக்கொண்டு அலையும் நம்மவர்களின் இன்றைய இளந் தலைமுறையினர் விதவைகளையும், கரை சேராமல் இருக்கும் குமர்களையும் புறக்கனிக்க துவங்கி விட்டதால் வரும் காலங்களில் வளரும் விளைவுகள் ஏராளம் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

வெளி நாட்டு மோகம் நம் ஊரில் ஏற்பட்ட பின்னால் இனிக்க இனிக்க பேசி இல்லறம் இரண்டு மாதங்கள் மட்டும் இருந்து விட்டு இளம் மனைவியை அழவைத்துவிட்டு அங்குபோய் அமரராகி விட்டவர்கள் எத்தனை இளையவர்கள். வாழ வேண்டிய வயதில் வாழ்கை தந்தவரை, மரணித்தும் பாராமல் மாழுகின்ற மங்கைகள் எத்தனைபேர். சிலர் குழந்தை இருந்தும், இன்னும் சிலர் குழந்தைகள் இருந்தும். இன்னும் சிலர் அதுவும் இல்லாமல் அழுது கொண்டு அக்கரை சேராமல் நிர்ப்பவர்கள் எத்தனைபேர்.

ஒரு சில பேதைகள் மட்டும். “நான் அவரோடு வாழ்ந்தது ஒருநாள் என்றாலும், வாழ்நாள் முழுவதும் அது போதுமானது” என்று தனக்குள் தலையெடுத்துக் கொண்டு இன்னும் உத்தமியாய் வாழ்ந்து கொண்டு இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலர் ஏங்கித் தவித்துக்கொண்டு பாதைகள் மாறி பயணங்களை தொடர்ந்து கொண்டு அலையத்தான் செய்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்..?

இளம் வயதில் மனைவியை பறிகொடுத்த இளையவர்கள் இன்னும் தனக்கு “புதுப்பெண் வேண்டும்” என்று விரும்புவதால். இவர்களே இந்தச் சமுதாயத்தில் இப்படியென்றால,; இல்லறத்தில் இன்னும் இயங்காத இளஞர்கள் “எனக்கு இந்தப்பெண் வேண்டாம். அந்தப்பெண் வேண்டாம்” என்று சொல்வதில் அர்த்தம் இருப்பதுபோல் அல்லவா தோன்றுகிறது.

நண்டு கொழுத்தால் குண்டுக்குள் தங்காது என்பதுபோல். தவறு செய்கிற தகவல்கள் வெளிவந்த பின்னால் தண்டனை கொடுப்பதைக் காட்டிலும், தவறிப்போவதற்கு முன்னால். ஆண் பெண் இருதரப்பு இளைஞர் இளஞ்சிகளுக்கு, நிச்சயதார்த்தம் செய்வதற்கு முன்னால் விரும்புகிறவர்களை கட்டிவைக்க முடியா விட்டாலும,; விருப்பமில்லாதர்களை கட்டிவைக்க கூடாது. என்பதில் பெற்றோர்களும், உற்றோர்களும் உடன்பாடு கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்பது மட்டுமில்லை அவர்களின் கட்டாய கடமையுமல்லவா?.

‘உறவுகள் விட்டுப் போய்விடக்கூடாது’ என்று பெற்றோர்கள் நினைப்பது நியாயம்தான். அவர்களின் உணர்வுகளை இளையவர்கள் மதிக்க வேண்டுமே?, “உறவு உட்டுப்போவ படாதுன்னா நீ நெனைச்சவங்களெ நீ போய் கட்டிக்கோ” என்று தாய் தந்தையையும், கூடப்பிறந்தவர்களைப் பார்த்து சொல்கிறவர்கள் எத்தனையோ பேர்கள்;. இவர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள்;. இப்படிச் சொல்கிற அத்தனை பேர்களுக்கும்

“உறவுகளை துண்டிக்காதீர்கள்” என்று

இறைவன் சொல்வதும், நபிகள் நாயகம் சொல்வதும் எத்தனை பேர்களுக்குத் தெரியும். அந்த அடிச்சுவட்டை மறந்தவர்களாய் அல்லவா இன்றைய இளைய தலைமுறையினர் இருபாலரையும் நாம் இயக்கிக் கொண்டிருக்கிறோம் அல்லது இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் சொல்கிறான்

“நீங்கள் விரும்புகிற ஒன்றின் மூலம் தீங்குகள் இருக்ககூடும். நீங்கள் வெறுப்பவைகளின் மூலம் உங்களுக்கு நண்மை இருக்க கூடும்”என்று

இதன் மூலம் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தங்களின் வாழ்நாளில் நடந்து போயிருக்கிற எத்தனை விஷயங்களை அவர்கள் அறிந்திருக்ககூடும். அவைகளை எத்தனை பேர் தங்களின் நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கிறார்கள். “கருத்த பெண் வேண்டாம். பருத்த பெண் வேண்டாம். குள்ளமான பெண் வேண்டாம். உயரமான பெண் வேண்டாம் சூத்தை. சொள்ளை” என்றும்.

ஒரு வீட்டில் இரண்டு குமர்கள் இருக்கும்போது “அக்கா வேண்டாம் தங்கயை தாருங்கள்” என்று மூத்தவளை கழித்து பெண் கேட்பவர்களால். அந்த பெற்றவர்களுக்கும், அந்த இரு பெண்களுக்கும் எத்தனை மன இருக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை கேள்விப்படுகிறபோது உண்மையில் இதயம் இறந்து விடுவதாகவே உணர்கிறோம்.

இது போன்ற நிகழ்வுகள் ஊரில் உண்டா இல்லையா என்பதையும், இது தவிர்க்கப்பட வேண்டியதா? இல்லையா? என்பதையும். நீங்கள்தான் சொல்ல வேண்டும்…

இது போன்ற இழிவான இன்னல்களில் இருந்து நம் எல்லோரையும் அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

குறைபாடுகள் உள்ள குமர்களை குணம் நிறைந்த குடும்பத்தவர்களும் குணவான்களும் திருமணம் செய்து கொண்டு. அவர்களுக்கும் அழகிய வாழ்வு தரும் தியாக உணர்வு கொண்டு. இன்றை இளைய தலைமுறையினருக்கு இரக்கம் வரும்போது. உண்மையில் நம் ஊரில் மட்டுமில்லை நம் சமுதாயத்தில் நல்லவர்களுக்கும் பெண் கிடைக்காமல் போவது உறுதிதான். அத்தகைய காலத்தை அருள் கூர்ந்து தரவேண்டி நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை இறஞ்சுவோமாக..

-செங்கோட்டையன்

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை