பூர்வீகத்து வீடு -முடவன்குட்டி -கவிதை
15th April 2012 · 1 Comment
கரை சேராத் தங்கச்சி
அடைபடா கடன்
சதா தலையுள் கொதிக்க
தறி இழுக்கையிலேயே
மூச்சுத் திணறிச்செத்த
சின்ன அண்ணன் பீடிப்புகை
“உள்ளூட்டில்” கமறும்:
‘தனிக்குடித்தனத்துக்கு
வெளியூர் அழைச்சுப்போக
அவுக வருவாக’-வென
காத்திருந்து-
ஆற்றாது
அக்கா அழுத கண்ணீரின் ஈரம்
இன்னும் உலராத “மச்சு”..
‘ நான் பெத்த மக்களை
நல்லாக்கி வை நாயனே…’
கண்கலங்க.. உதடு துடிக்க..
வானம் பார்த்துக் கையேந்துவாள்-அம்மா
“முற்றத்து” தரையில்
அவள் கண்ணீர் சிதறும்:
பரம்பொருள் பாடும்
உலகத்து ஞானமெல்லாம்
சிதறிய கண்ணீர்த்துளியுள்
அடைக்கலம் தேடி அலைகழியும்:
‘ஊர்ப்பெரியவர்’ ‘கண்ணியவான்’
சட்டைகள் துறந்து
வெறும் மனுஷனாய்
“நடுவூட்டுத்” தூணில்
சாய்வார் வாப்பா-களைப்பாரவென:
சாய்ந்த தழும்பில்
ஏலாமை.. ஏலாமை..என
தலையிலடித்து
தனியே புலம்பிய
அவரின் விசும்பலும்
அழுந்திக் கிடக்கும் …
‘கருப்பட்டித் துண்டு
கேக்காம எடுத்துத் திம்பியா-படுவா…’
சூட்டுக்கோலை தொடையில்
இழுப்பார் பெரியண்ணன்
“சமையலறை” இருளும் மெல்ல நடுங்கும்..
சத்தம் வராது வாய்பொத்தி
கதறுவான் இவன்..
என …. என ….. என… …என ….
நினைவுகள்
உயிர்கொண்டு
பின்சென்று வேர் தேட
கணத்தில் எழுந்து
இவனுள் நிலைக்கும்
பூர்வீகத்து வீடு..!
பழைய வீடென அதனை
இடித்துத் தகர்த்து
புது வீடு கட்ட
துபாய் திரும்பிய பெரியண்ணன்
கடப்பாரை ஓங்கிய போது……
***** ******* ******* ****** ******* *******
இக்கவிதை சமரசம் செப்டம்பர் 1997
இதழில் வெளிவந்தது.
இப்போது சில சொற்கள் நீங்கிவிட்டன:
சில சேர்ந்துகொண்டன:
தொடர்புடைய செய்திகள்
By kadaiyan
Readers Comments (1)
Comments are closed.



முடவன் குட்டி சார்.. என்ன உங்கள்ட்ட இருந்து அடுத்த படைப்பு எதுவுமே வரலியே?
உங்க பக்கம் அப்படியே முடங்கிடுச்சு…?