வீதிக்கு வாருங்கள் ! (பீ. எம் . கமால், கடையநல்லூர்)
20th May 2011 · 2 Comments
வீதிக்கு வாருங்கள் !
(பீ. எம் . கமால், கடையநல்லூர்)
கைத்தறித் தொழிலும்
காடிகூழ் உணவும்
கூடிய உறவும்
குடிகொண்டிருந்த
கடைய நல்லூரில்
வறுமை இருந்தது.
சிறுமை இல்லை !
பெருமை இருந்தது !
பேரிழப்பில்லை !
ஊர்நாட்டாண்மை
உச்சத்திலிருந்தது !
ஊர்க்கூட்டத்தில்
உதைகள் விழுந்தன !
கட்டுப்பாடுகள்
கைக்குள் இருந்தன !
வரவுக்குள்தான்
செலவுகள் இருந்தன !
வாரம் ஒருமுறை
கறிச் சோருண்டனர் !
உறவுகள் எல்லாம்
உயரத்தில் இருந்தன !
கவலைகள் மனதில்
காணாமல் போயின !
பெரியவர்களுக்குப்
பெண்கள் அடங்கி
பேசவும் தயங்கிப
பெருமை சேர்த்தனர் !
இன்றோ நிலைமை
தலைகீ ழானது !
கைத்தறிஎல்லாம்
பொய்த் தறியாகி
அரபகத்துப் பணத்தால்
அடக்கம் ஆனது !
ஆடையாக அலங்கரித்திருந்த
அடக்கம் இங்கே
அம்மணமானது !
பெண்கள் எல்லாம்
ஆண்களாகவும்
ஆண்கள் எல்லாம்
பெண்களாகவும்
மாறிப் போனதால்
மானக்கேடு மலிந்துபோனது !
எதையும்
தீர்மானிக்கும் ஆணினமின்று
திசைதெரியாமல் திணறுகின்றது !
பாலை மணலில்
வியர்வை சிந்தி
படுந்துன் பத்தை
பக்குவமாய் மறைத்து
உடலைச் சாறாய்ப்
பிழிந்து அனுப்பும்
பணமோ இங்கே
ஊர் சுற்றுகிறது !
உபயோகப் பொருட்கள்
உள்ளூரில் இருந்தாலும்
ஊருக்கு வெளியேதான்
உள்ளம் கவர்கிறது.
தாய்க் குலங்கள்
பேய்க் குலமாய்
தரமிறங்கிப் போனதினால்
வாய்க்கு வந்தபடியெல்லாம்
வசைபாட வைக்கின்றார் !
இதுவரையில்….
ஓடிப்போன பெண்கள்
உருப்படியாய் வாழ்ந்ததுண்டா ?
கண்டிக்கப் பெரியார்கள்
காலெடுத்து வைத்ததுண்டா ?
எக்கேடு கெட்டாலும்
எனக்கென்ன என்று
எல்லோரும் இருந்து விட்டால்
ஊரில்
மாமாப் பயல்களின்
மன்னராட்சி தொடங்கிவிடும் !
கடையநல்லூர் பெண்களை
அடைய நல்லூர் எனும்
அடைமொழி நம்மை
அவமானப் படுத்திவிடும் !
இளைஞர்களே ! நீங்கள்
எழுந்துமுன் வாருங்கள் !
பழைய தலைமுறையால்
பயனேதும் இல்லைஎன்று
புதிய தலைமுறையே !
புத்திளம் காளைகளே !
புறப்பட்டு வாருங்கள் !
ஆற்றலுடன் நீங்கள்
ஆர்ப்பரித்து எழுந்துவிட்டால்
மாற்றம் வந்துவிடும்
நமதூரின்
மகத்துவம் கூடிவிடும் !
உலமாக்கள் போதனையும்
ஊர்ப்பெரியோர் சொன்னவையும்
சாதிக்க முடியாத
சாதனையைச செய்வதற்கு
சத்திய இஸ்லாத்தின்
சாதனை இளைஞர் களே !
வீறுகொண்டெழுந்து
வீதிக்கு வாருங்கள் !
தொடர்புடைய செய்திகள்
By yousuf
Readers Comments (2)
Comments are closed.



காலத்திற்கு ஏற்ற சமுதாய நோக்கமுள்ள கவிதை…எல்லோரும் உணரவேண்டும் .நிச்சயமாக மாற்றம் வரவேண்டும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்…
கவிதையின் நோக்கம் மிகவும் உயர்ந்தது .சத்திய இஸ்லாத்தின் இளைஞர்களே
நமதூரின் மாற்றம் காண புறப்பட்டு வாருங்கள்.ஆசிரியரின் பணி தொடர வாழ்த்துக்கள்.