கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி
12th December 2011 · 0 Comments
சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று (டிச.11) நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சேவாக், அஸ்வின், வினய்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக ரகானே, இர்பான் பதான், மனோஜ் திவாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் காம்பீர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கமே இந்திய அணிக்கு பலத்த அடியாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் ஓவரை வீசிய ரோச்சின் 2 வது பந்தில் ரகானே எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். தொடர்ந்து வீசிய 3-வது பந்தில் பார்த்தீவ் படேல் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா பரிதவித்தது. இதையடுத்து களமிறங்கிய திவாரி, காம்பீருடன் இணைந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை பொறுமையாக கையாண்டனர். அவ்வப்போது பவுண்டரிகளுக்கும் அடித்தனர். காம்பீர் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்ட்டின் சுழலில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதன்பிறகு திவாரியுடன் விராட் கோக்லி ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். திறமையாக விளையாடிய திவாரி ஒருநாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கோக்லியும் அரைசதத்தை கடந்தார். நரேன் வீசிய 38 வது ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் 103 ரன்களை கடந்து தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார் திவாரி. சதம் அடித்ததும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டையர்டு கட் முறையில் பெவிலியன் திரும்பினார். அவர் 126 பந்துகளை சந்தித்து 104 ரன்கள் எடுத்தார். அவருடைய அதிரடியில் 10 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.
அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மா களமிறங்கினார். திறமையாக விளையாடிய கோக்லி 85 ரன்கள் எடுத்த நிலையில் மார்ட்டின் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்று சாமுவேல்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் தனது பங்குக்கு 31 ரன்கள் எடுத்து நரேன் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். கடைசி பந்தில் 2 ரன் எடுக்க முயன்று மார்ட்டினால் ரன் அவுட் செய்யப்பட்டார் பதான். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அணி 267 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. ரெய்னா 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோச், மார்ட்டின் 2 விக்கெட்டுகளும், நரேன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கிடைத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சிம்மன்ஸ், பதான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே நடையைக் கட்டினார். பாவெல் 15 ரன்களில் வீழ்ந்தார். சாமுவேல்ஸ் (6), ஜேசன் முகமது (2) ஆகியோரை மிதுன் வெளியேற்றினார். ராம்தினை 14 ரன் சேர்த்தார்.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த போலார்டும், ரஸ்ஸலும் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ரஸ்ஸல் 53, சமி 3, நரேன் 8 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர். தனிநபராகப் போராடிய பொல்லார்டு 99 ரன்கள் எடுத்திருந்தபோது தூக்கி அடித்தார். அந்த பந்து கோலியின் கைக்கு சென்றபோதும், அவர் தவறவிட்டார். இதனால் போலார்டு 98 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அதன்பிறகும் அவர் சிக்ஸர்களாக விளாசினார். இறுதியில் ரெய்னா வீசிய 45-வது ஓவரை எதிர்கொண்ட போலார்டு முதல் பந்தை சிக்ஸருக்குத் தூக்கினார். ஆனால் அதை ரஹானே துள்ளிச் சென்று கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் போப்ர்டு 119 ரன்களில் ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகளின் இன்னிங்ஸ் 233 ரன்களில் முடிவுக்கு வந்தது. போலார்டு 10 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.
44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானை வென்றது இந்தியா
- இளைஞர்களுக்கு வழிவிட சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: ராகுல் டிராவிட்
- சவூதி அரேபியத் தூதுவர் பங்களாதேசில் சுட்டுக்கொலை!
By P.S.Md Ali
Readers Comments (0)
Comments are closed.


