Filed Under:  அபுஸாயிமா பக்கம், நல்லூர்

கடையநல்லூர் சகோதரர்களே:வேண்டாம்….இந்த விபரீத விளையாட்டு …….

31st January 2012   ·   3 Comments

வேண்டாம்….இந்த விபரீத விளையாட்டு …….

பிரியத்திற்குரிய கடையநல்லூர் சகோதரர்களே ,

சமீப காலங்களில் நமதூரில் உள்ள பொது மக்கள் நோய்களுக்கு மருத்துவம் செய்ய கற்றுத் தேர்ந்த மருத்துவர்களை அணுகுவது வெகுவாகக் குறைந்து லேப் டெக்னீசியன்களையும் மருந்தாளுனர்களையும் நாடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலை மிகுந்த வேதனைக்குரியது மட்டுமன்றி மிகவும் ஆபத்தானதும் ஆகும்.

சற்று திறந்த மனதுடனும் நடுநிலை சிந்தனையுடனும் இந்நிலை குறித்து நோக்குவோம்.இங்கு தொடர்புடைய மூன்று பிரிவினரின் தகுதி நிலையை சற்று அளவிடுவோம்.

மருத்துவர் என்பவர் நோய்க்குறிகள், நோயின் தன்மை,நோயாளியின் உடல்நிலை,மருந்துகளின் தன்மை,சக்தி மற்றும் அவற்றின் பக்க விளைவுகள் அனைத்தையும் படித்துத் தேர்ந்து அதன் பின் முறையான மருத்தவப் பயிற்சியும் முடித்தவராக விளங்குகிறார்.

மருந்தாளுனர் என்பவர் மருந்துகளின் தயாரிப்பு முறைகள் ,அவற்றின் உபயோகம்,அளவுகள் மற்றும் அவற்றின் பக்க விளைவுகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர்.

லேப் டெக்னீசியன் என்பவர் ஆய்வகத்தில் நமது ரத்தம், மலம், சிறுநீர் மற்றும் உடல் நீர்களில் உள்ள பல்வேறு பொருள்களின் அளவுகள் பற்றி ஆய்வு செய்திடவும் மேலும் நோயுற்றுயிருக்கும் நிலையில் அவைகளின் அளவு வேறுபாடுகளை ஆய்வு செய்து அறிக்கை தரவும், எல்லாவற்றிற்கும் மேலாக சில நோய்க் கிருமிகளின் இருப்பை பகுத்தறிந்து அதனால் உருவாகும் நோய்களை கண்டறிந்து கொள்வது போன்றன குறித்த கல்வியை கற்றுத் தேர்ந்தவராக,மருத்துவருக்கு உதவும் கரமாக விளங்குகிறார்.

இம்மூன்று பிரிவினரின் கல்வி மற்றும் பணித் தகுதி பற்றி அறிந்து கொண்ட நாம் செய்து கொண்டிருக்கும் தவறு என்ன என்பது இப்போதாவது புலப்படுகிறதல்லவா…?

மருந்தாளுனர் ஒருபோதும் மருத்துவராக பணியாற்ற முடியாது.ஏனெனில் அவருக்கு நோய்க்குறிகள், நோயின் தன்மை, நோயாளியின் உடற்கூறு இவைகளைப் பற்றிய ஞானம் இருக்காது.

இதுபோலவே லேப் டெக்னீசியன் நோய்க்கு சிகிச்சை தரும் மருத்துவராக முடியாது. ஏனெனில் அவருக்கு நோய்களைப் பற்றிய மற்றும் மருந்துகளைப் பற்றிய ஞானம் முற்றிலும் இல்லை.

மருந்தாளுனர், லேப் டெக்னீசியன் மட்டுமல்ல மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்கும் செவிலியர்களும்(நர்சுகளும்) ஒருபோதும் மருத்துவராக முடியாது.

எனவே பொது மக்கள் தயவு கூர்ந்து நோய்களுக்கு சிகிச்சை பெற உரிய முறையில் கற்றுத் தேர்ந்த மருத்துவர்களை மட்டுமே அணுகவேண்டும் .அதுவே அறிவார்ந்த செயலாகும்.

அவசரம் கருதியோ அல்லது வேறு காரணத்தாலோ பொது மக்கள் சிகிச்சைக்காக தங்களை அணுகினாலும் ,மருந்தாளுனர்களும் லேப் டெக்னீசியன்களும் தங்கள் தகுதி, பணிப் பொறுப்பினை உணர்ந்து அவர்களை உடனடியாக முறையான மருத்துவரிடம் செல்லுமாறு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு செய்யாமல் தாங்களே மருத்துவம் செய்வது சட்டப் படி குற்றமாகும்.மேலும் நாம் இவ்வாறு சிகிச்சை செய்து வருமானம் ஈட்டுவது நமது மார்க்கத்தின் அடிப்படையிலும் ஹராமான(ஆகாத) செயலாகும்.

நமதூரில் மருந்தாளுனர், லேப் டெக்னீசியன் தவிர்த்து மேலும் சில சகோதரர்கள் தங்களின் அனுபவ அறிவைக் கொண்டு நோயாளிகளுக்கு பெரிய மருத்துவர்கள் போல் சிகிச்சை செய்து வருகின்றனர்.இதுவும் மிகவும் ஆபத்தான ஒரு போக்கு ஆகும்.இவர்களும் தயவு செய்து தமது தவறை உணர்ந்து திருந்திக் கொள்ள வேண்டும்.தனது தவறான செய்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பு: ஊசி போடத் தெரிந்த அனைவரும் மருத்துவர்கள் அல்லர் என்பதை பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறெல்லாம் சிகிச்சைக்காக மருத்துவர் அல்லாத பிறரை நாடுவதற்கு நமதூரில் உள்ள சில மருத்துவர்களின் அலட்சியப் போக்கும் , அவசர உதவிக்கு வராத செய்கையும் காரணங்களாக விளங்குகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எனினும்
கூடுமானவரை பொது மக்களாகிய நாம் நல்ல ,பண்புள்ள ,சேவை மனப்பாங்குள்ள மருத்துவர்களை கண்டறிந்து ,நோயுற்ற வேளையில் அவர்களை மட்டுமே அணுக வேண்டும்.

மேலும் அரசு மருத்துவ மனைகளில் 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவு விடுமுறை ஏதுமின்றி செயல் பட்டு வருகிறது என்பதையும் ,அவசர உதவி அழைப்பிற்கு 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை
செயல் படுகிறது என்பதையும் நன்கு உணர்ந்து முறையான மருத்துவ சேவையை பெற்றிட வேண்டும்.

பின் குறிப்பு : இக் கட்டுரை யாரையும் குற்றப் படுத்தி, வீண் பழி சுமத்தி அவர்தம் மனதைப் புண்படுத்துவதற்காக எழுதப் படவில்லை.மாறாக நமது சமுதாயம் உயிருடன் விளையாடும் ஒரு விபரீதத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற குறிக்கோளுடன் மட்டுமே எழுதப் பட்டதாகும்.

நட்புடன்
அபுஸாயிமா .

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (3)

  1. rasheeth says:

    போலி மருத்துவர்கள் தங்களது செயல்பாட்டை நிருதிகொள்ளாவிட்டால் அவர்களது பெயர் கடையநல்லூர்.ஒர்க் இல் பட்டியல் இடப்படும், ஊரில் அனைத்து இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்படும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். மீண்டும் அவர்களது செயல் தொடருமானால் எந்த வித சட்ட ரீதியான தடைகளையும் இட தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கை செய்கிறோம். நமதூரில் உள்ள மருத்துவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று நமதூர் பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம்.

  2. vtkader says:

    சிகிச்சைக்காக மருத்துவர் அல்லாத பிறரை நாடுவதற்கு நமதூரில் உள்ள சில மருத்துவர்களின் அலட்சியப் போக்கும் , அவசர உதவிக்கு வராத செய்கையும் காரணங்களாக விளங்குகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எனினும்
    கூடுமானவரை பொது மக்களாகிய நாம் நல்ல ,பண்புள்ள ,சேவை மனப்பாங்குள்ள மருத்துவர்களை கண்டறிந்து ,நோயுற்ற வேளையில் அவர்களை மட்டுமே அணுக வேண்டும்.

  3. mdkasim2012 says:

    இணைய நண்பர்களே…!இக்கட்டுரை விளக்கும் உண்மைகளை தயவு செய்து நம் வீட்டாரிடமும் பகிர்ந்து அவர்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்குவோம்.


Comments are closed.