கேரளத்துக்கு அறிவுரை வழங்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
30th November 2011 · 0 Comments
முல்லைப் பெரியாறு பிரச்னையில் நிலைமையை மோசமாக்கி வரும் கேரளத்துக்கு அறிவுரை வழங்குமாறு மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு செவ்வாய்க்கிழமை அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மாநிலத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த நவம்பர் 23-ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
முல்லைப் பெரியாறு அணை குறித்த தவறான தகவல்களை ஊடகங்கள் மூலம் கேரள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் புதிய அணை மட்டுமே தீர்வு என கேரளம் செய்தி பரப்பி வருகிறது.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகம் மிகவும் பொறுமை காத்து வருகிறது. ஆனால், கேரள மாநிலத்தில் தமிழக அரசு பஸ்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவில் கேரள அரசின் நடவடிக்கைகள் உள்ளன.
முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளதால் புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முல்லைப் பெரியாறு பிரச்னை உச்ச நீதிமன்றம் மற்றும் நிபுணர் குழுவிடம் இருக்கும் நிலையில் மேலும் மோசமாக்க வேண்டாம் என்று கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுரை கூற வேண்டும்.
இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி: தினமணி
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By ASAN
Readers Comments (0)
Comments are closed.


