Filed Under:  விளையாட்டு

முதல் வெற்றி பெறுமா வெஸ்ட் இண்டீஸ்? * இன்று நெதர்லாந்துடன் மோதல்

28th February 2011   ·   0 Comments

உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாவது உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகளில் நடக்கிறது. இன்று “பி’ பிரிவில் நடக்கும் பகலிரவு போட்டியில், 1975, 1979ல் சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அணியில் முக்கிய அதிரடி வீரர்கள் கிறிஸ் கெய்ல், போலார்டு ஆகியோர் சோபிக்காமல் போனது தான் முக்கிய காரணம். இந்நிலையில் துவக்கவீரர் கெய்ல், இன்று அதிரடியில் அசத்துவார் என்று நம்பலாம். மற்றொரு துவக்க வீரர் டேவன் ஸ்மித், சற்று வேகமாக ரன்கள் சேர்த்தால் நல்லது. “மிடில் ஆர்டரில்’ களமிறங்கும் “ஜூனியர் லாரா’ என்றழைக்கப்படும் டேரன் பிராவோ, தொடர்ந்து அணியின் ரன் கணக்கை உயர்த்த கைகொடுப்பார் என்று தெரிகிறது.
பிராவோ பின்னடைவு:
காயம் காரணமாக “ஆல் ரவுண்டர்’ டுவைன் பிராவோ வெளியேறியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவு தான். இந்நிலையில், அனுபவ சர்வான், சந்தர்பால் சாதித்தாக வேண்டிய கட்டாயத்தில் <உள்ளனர். கேப்டன் டேரன் சமி, டேவன் தாமஸ் நம்பிக்கை தர முயற்சிக்கலாம்.
பவுலிங் ஏமாற்றம்:
பவுலிங்கை பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறப்பான வீரர்கள் யாரும் இல்லாதது பெரிய குறை தான். கீமர் ரோச், சமியை வைத்து வேகப்பந்து வீச்சை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுழலில் சுலைமான் பென், கெய்ல், டேவன் ஸ்மித் ஆறுதல் தருவார்கள் எனத் தெரிகிறது.
மாற்று முயற்சி:
இன்றைய போட்டி குறித்து அணியின் பயிற்சியாளர் கிப்சன் கூறுகையில்,”" மூன்று ஆல் ரவுண்டர்களுடன் களமிறங்குவது தான் எங்கள் திட்டம். இப்போது டுவைன் பிராவோ இல்லாத நிலையில், ஆறாவது இடத்தில் கூடுதல் பவுலருக்குப் பதில், பேட்ஸ்மேனுடன் களமிறங்க யோசித்துள்ளோம்,” என்றார்.
டசாட்டே பலம்:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வலிமையான ஆண்டர்சன், பிராட் போன்றவர்களை வெளுத்து வாங்கி, சதம் அடித்தவர் ரேயான் டசாட்டே. இவர், இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக சமாளிப்பார் என்பது உறுதி. இவருக்கு கெர்வெஜீ, பாரெசி, கூப்பர், கேப்டன் போரன் போன்றவர்கள் கைகொடுப்பார்கள்.
அனுபவம் இன்மை:
முதல் போட்டியில் 292 ரன்கள் குவித்தும், பவுலர்கள் சிறப்பாக செயல்படாததால் வெற்றி கைநழுவியது. இதனால் இன்று முடாசர் புகாரி, வெஸ்டிஜிக், லூட்ஸ் போன்றவர்கள் வெஸ்ட் இண்டீசின் ரன்குவிப்புக்கு அணை போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, சீலார், டசாட்டேவும் பவுலிங்கில் உதவலாம்.
சிரமம் தருவோம்:
இப்போட்டி குறித்து நெதர்லாந்து பயிற்சியாளர் டிரின்னன் கூறுகையில்,”" வெஸ்ட் இண்டீசிஸ் அணி அனுபவம் வாய்ந்தது. இதனால் அவர்களுக்கு சிரமம் கொடுக்க முயற்சிப்போம். முதல் போட்டியைப் போல, இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்,” என்றார்.
வெற்றி முக்கியம்:
இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வென்றால் தான், காலிறுதிக்கு முன்னேறுவது குறித்து யோசிக்க முடியும்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.