முதியோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள்
31st December 2011 · 0 Comments
முதியோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் - முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறப்பு தங்கும் விடுதி வசதி உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்களை அமைக்க முதல்&அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழ்நாட்டில் வாழும் முதியோர்களுக்கு பாதுகாப்பினையும் நாகரிகமான,உசிதமான வாழ்க்கையையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அதன் அடிப்படையில், அவர் பதவியேற்றவுடன் பல்வேறு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டார்.
தங்களை கவனித்துக்கொள்ள ஒருவரும் இல்லாத நிலையில், தினசரி வாழ்வில் உணவு,உடை, உறைவிடம், மருத்துவ தேவைகள் முதலியவற்றிற்காக மிகவும் அல்லல்படும் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது மட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளின் தேவைகளையும் நிறைவு செய்தல் அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ஜெயலலிதா, ஒவ்வொரு வளர்ச்சி வட்டாரத்திலும், முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் சிறப்பு விடுதிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை உருவாக்கவும்,மூத்த மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லமும் இந்த வளாகத்தில் ஒரு பகுதியாக அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தை சிறந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் உதவியுடன் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நடப்பு நிதியாண்டில் முன்னோடி முயற்சியாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 2 வட்டாரங்கள் என முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களை உள்ளடக்கிய 64 ஒருங்கிணைந்த வளாகங்களை ஏற்படுத்திட முதல்&அமைச்சர் ஜெயலலிதா, கொள்கை அளவில் முடிவெடுத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த சிறப்பு இல்லங்களில் முதியோர்களும், ஆதரவற்ற குழந்தைகளும் பாசபிணைப்புடன் தங்களுக்குள் அன்பு, மரியாதை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளும் வகையில் அருகருகே வசிப்பார்கள்; முதியோர் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்படும் இந்த வளாகங்கள் பள்ளி கூடங்கள், மருத்துவ வசதிகள், உடற்பயிற்சி, நூலகம் போன்ற பல வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், அபாயகரமான
சூழ்நிலையில் வாழக்கூடிய குடும்பங்களை சேர்ந்த 5 முதல் 18 வயதுடைய குழந்தைகள், புலம் பெயர்ந்த குடும்பங்கள் போன்ற சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தொற்றுடைய நோய் உள்ள குழந்தைகள், நிராதரவான குழந்தைகள், கைதிகளின் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் கடுமையான மருத்துவ சிக்கல் உள்ள நிராதரவான முதியோர்கள் ஆகியோர் தங்க வைக்கப்படுவார்கள். ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றிற்கு தொடக்க தொடரா செலவினமாக ரூபாய் 2.75 லட்சமும், தொடர் செலவினமாக ரூபாய் 18.40 லட்சம், என மொத்தம் 64 ஒருங்கிணைந்த வளாகங்களை ஏற்படுத்திட 12 கோடியே 18 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி, முதல்& அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கையினால், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமின்றி அவர்களின் எதிர்கால வாழ்வும் உறுதி செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
*-க.கா.செ.*
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


