மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு 8 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை
31st December 2011 · 0 Comments
மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு 8 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை
புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு சென்னையில்
கோலாகலமாக இருக்கும். எனவே போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை
செய்துள்ளனர். மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு 8 மணி முதல்,
நள்ளிரவு 2 மணிவரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள்
வேறு வழியாக திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக
நேற்று போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி
இருப்பதாவது:
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, 31-தேதி (இன்று) இரவு
8 மணி முதல் கடற்கரை காமராஜர் சாலையில் வாகனங்கள் செல்வது தடுக்கப்படும்.
கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் வெளியேறுவதற்கு இரவு
9 மணிவரை அனுமதிக்கப்படும். இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரை,
போர் நினைவு சின்னத்திலிருந்து, காந்தி சிலை வரை காமராஜர் சாலையில் எந்த
வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது.
காமராஜர் சாலையில் இணையும் பக்கவாட்டு சாலைகளான லாயிட்ஸ் சாலை,
பெசன்ட்சாலை, அயோத்தி நகர், சுங்குவார் தெரு, பாரதிசாலை,வாலாஜாசாலை,
சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சாலை சந்திப்புகளில் தடுப்புகள்
அமைக்கப்பட்டு, வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும். காமராஜர் சாலை
நோக்கி ரிசர்வ் வங்கி சுரங்கபாதை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள்,
என்.எஸ்.சி.போஸ் ரோடு வழியாக திருப்பிவிடப்பட்டு, ஈ.வே.ரா.பெரியார் சாலை
மற்றும் அண்ணாசாலை வழியாக போக அனுமதிக்கப்படும்.
இதேபோல அடையாறு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், சாந்தோம் சந்திப்பில்
இருந்து காரணீஸ்வரர்கோவில் தெரு வழியாக திருப்பி விடப்படும். நடேசன்
சாலை, ஐஸ் அவுஸ் சந்திப்பு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.
எலியட்ஸ் பீச், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை 6&வது
அவென்யூவிலும், இரவு 9 மணி முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
6&வது அவென்யூவின் இணைப்பு சாலைகளான 5&வது அவென்யூ, 4&வது பிரதானசாலை,
3&வது பிரதான சாலை, 16&வது குறுக்கு தெரு ஆகிய பகுதிகள் தடுப்புகளால்
தடுக்கப்படும். மகாத்மா காந்தி சாலை, 7&வது அவென்யூ சந்திப்பில் இருந்து,
வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்தந்த
பகுதிகளில் வாகனங்களை நிறுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*-க.கா.செ.*
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


