மன்னிக்கப்பட்டாரா டக்ளஸ்?-அம்பலமாக்கும் பண்ருட்டியார்

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அரசு மன்னிப்பு கொடுத்துவிட்டதாகக் கூறப்படுவது தவறு. அவர் இன்றுவரை தேடப்படும் குற்றவாளிதான். எந்த மன்னிப்பும் வழங்கப்படவில்லை, என்று முன்னாள் அமைச்சரும், தேமுதிக அவைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்திய- இலங்கை ஒப்பந்தம் உருவானதில் முக்கியப் பங்காற்றியவர் பண்ருட்டி ராமச்சந்திரன். டக்ளஸ் விவகாரம் குறித்து ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

இந்திய-இலங்கை அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி டக்ளஸுக்கு மன்னிப்பு அளிக்கப் பட்டுள்ளது என்பது சரியா?

“1987-ல் இந்திய, இலங்கை அரசுகள் உடன்பாடு செய்துகொண்டபோது, தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரால் அனுப்பிவைக்கப்பட்டு, அந்த நிகழ்வில் பங்குகொண்டவன் நான். டக்ளஸ் சொல்வதுபோல அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்படவில்லை. அத்தகைய பிரிவு எதுவும் அந்த ஒப்பந்தத்தில் இல்லை. போராளிக் குழுக்கள் முன்வந்தால் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க மட்டுமே அதில் ஒரு ஷரத்தில் வழிவகை செய்யப்பட்டது.

தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டால், அதற்குச் buy Amoxil online சம்பந்தப்பட்டவர்கள்தான் பொறுப்பு.

டக்ளஸைப் பொறுத்தவரை, சென்னை சூளைமேடு பகுதியில் சட்டவிரோதமாகத் துப்பாக்கியால் ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதில் நான்கு பேர் காயம் அடைந்தனர். இதில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இன்று வரை தேடப் படும் குற்றவாளிதான்… எந்த மன்னிப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை!”

டக்ளஸ் உங்களை அந்தச் சமயத்தில் சந்தித்தாரா?

“இப்போது இலங்கையில் அமைச்சராக இருக் கும் அவர் அப்போது பெரிய ஆள் இல்லை. போராளிக் குழுக்களின் சார்பில் பத்மநாபா, முகுந்தன், சிறீ.சபாரத்தினம், பாலகுமார், பிரபாகரன் , பாலசிங்கம்போன்றவர்கள் எம்.ஜி.ஆரைச் சந்திக்க வருவார்கள். நான் உடன் இருப் பேன். 80-களின் கடைசியில் ஒருமுறை டக்ளஸ் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, ‘யாழ்ப்பாணம் சென்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம்  நடத்த நிதியுதவி செய்யுங்கள்’ என்று கேட்டார். நான் திருப்பி அனுப்பிவிட்டேன். அதைத் தவிர, எப்போதும் என்னைச் சந்தித்ததில்லை.”

டக்ளஸ் மீதான வழக்குபற்றி, பத்திரிகை மூலம் தான் தெரிந்துகொண்டேன் என மத்திய உள்துறை அமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளாரே?

“சட்டம் – ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் என்றாலும், தமிழகத்திலும் மத்திய உளவுத் துறை செயல்படுகிறது. டக்ளஸ்பற்றி அவர்களுக்குத் தெரி யாமல் இருக்க நியாயம் இல்லை. இவரைப்போல யார் வெளிநாட்டில் இருந்து வந்தாலும், மத்திய உளவுத் துறை அவர்களைக் குறித்து அறிக்கை அளிப்பது வழக்கம். பார்வதி அம்மாளுக்கு முதலில் விசா கொடுத்துவிட்டு, உளவுத் துறை கூறியதன் பேரில்தானே பின்னர் திருப்பி அனுப்பினார்கள்? எனவே, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சு நம்பத் தகுந்ததாக இல்லை.

போஃபர்ஸ் ஊழல் வழக்கு குவாத்ரோச்சி,போபால் விஷ வாயுக் கசிவு வழக்கு ஆண்டர்சன் என அரசுக்கு வேண்டியவர்கள் எத்தகைய தவறு செய்தாலும் அவர்களை வரவேற்பதும், வேண்டாதவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் தொல்லை கொடுப்பதும் தான் இங்கே நடைமுறையாக இருக்கிறது!”

Add Comment