உழைத்துக் கொண்டே இரு வெற்றிய‌டைய‌லாம் – அப்துல் க‌லாம்!

“உழைத்துக்கொண்டே இரு வெற்றிய‌டைய‌லாம்” என‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு அப்துல்க‌லாம் அறிவுரை வ‌ழ‌ங்கியுள்ளார்.

 

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், “நான் தூத்துக்குடிக்கு வருவது இதுவே முதல்முறை. உங்களைp பார்ப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும், பனிமயமாதா திருவிழாவின் போது இங்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆங்கிலேயருக்குச் சவால் விட்ட வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மாவட்டம் இது.

தூத்துக்குடியைப் பார்த்ததும் எனக்கு ஒரு கனவு வருகிறது. உப்பளங்களைப் பார்க்கும்போது சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். கடல்நீரை நன்னீராக ஆக்கலாம். ஏராளமான மரங்களை நட்டு பசுமையான தூத்துக்குடியை உருவாக்கலாம் எனத் தோன்றுகிறது.

இன்றைய இளைய சமுதாயம் வருங்காலத்தைப் பற்றி பயமே இல்லாமல் வாழ வேண்டும். உங்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியின் பயனால் உங்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவனாக, பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாக, நாட்டிற்கு நல்ல குடிமகனாக திகழ வேண்டும்.

நீ யாராக இருந்தாலும், உன்னுடைய உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். என்னுடைய கருத்து உன் உள்ளத்தில் லட்சிய ஒளியைப் பிரகாசிக்க செய்யட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை… உழைத்துக் கொண்டே இரு. விடா முயற்சி இருந்தால் வெற்றி வந்து சேரும்.

ஒரு நாடு நல்ல வளமான நாடாக கருதப்பட வேண்டுமானால், நோயின்மை, செல்வ செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதியும், சுமுகமான சமுதாய சூழ்நிலையும், வலிமையான பாதுகாப்பும் அந்நாட்டில் நிலவ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். என்ன அருமையாக ஒரு வளமான நாட்டை படம்பிடித்துக் காட்டுகிறார் அவர். நாம் எல்லோரும் உழைத்தால்தான் நம் நாட்டை வளமானதாக, வல்லரசாக மாற்ற முடியும்.

ஒவ்வொரு மனிதனும், ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும். ஒரு மரம், ஒரு வருடத்திற்கு 20கிகி கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது. அப்படி என்றால் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் 10 மரங்களை நட்டு அதைப் பாதுகாத்தால், 10 மில்லியன் மரங்களை நடுவோம் என்ற இலக்கை இலகுவாக அடைய முடியும். இதன் மூலம் இந்தியா மாறிவரும் தட்பவெட்ப சூழ்நிலையைச் சமாளித்து நமது எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்த இயலும்.

என்னால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தால்; எங்களால் முடியும் என மாணவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். அது, இந்தியாவால் முடியும் என மாறும். நொடியும், மணித்துளியும், நாளும் பறந்து கொண்டே இருக்கும். ஒரு முறை சூரியனைப் பூமி சுற்ற ஒரு ஆண்டு ஆகிறது; அப்போது நமக்கு ஒரு வயது முடிகிறது என்பதை உணர வேண்டும். நேரம் பறப்பதை நாம் நினைத்தாலும் நிறுத்த முடியாது.” என்று பேசினார்.

“நீங்கள் மீண்டும் ஜனாதிபதியாக ஆனால் முதல் கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?” என்று ஒரு மாணவன் கேட்டக் கேளிவிக்குப் பதிலளித்த அவர், “நான் ஆசிரியராகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில், 40 பள்ளிகளைச் சேர்ந்த 700 மாணவிகள், 400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிமளா, காவல்துணை கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர், உதவி buy Doxycycline online கண்காணிப்பாளர் சோனல் சந்திரா, சுப்பையா வித்யாலயம் பள்ளி தாளாளர் கணேசன், முன்னாள் காமராஜ் கல்லூரி முதல்வர் செல்வராஜ், சிஎம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் திருச்சிற்றம்பளம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Add Comment