முடிவெடுக்க சோனியா இன்றி காங்கிரஸ் தவிப்பு: பிரச்சினைகள் அதிகரிப்பு!

உடல் நலக் குறைவு காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால், காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட விவகாரங்கள் வலுத்து வருவதால், அவரது நேரடி ஆலோசனை கிடைத்தாத நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாவுக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, தனி வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு மாதம் வரை, அமெரிக்காவில் தங்கியிருந்து, சோனியா சிகிச்சை பெறுவார் என, தெரிகிறது. இதன் காரணமாகவே, கட்சிப் பணிகளை கவனிப்பதற்கு, ராகுல், அந்தோணி, ஜனார்த்தன் திவேதி, அகமது படேல் உள்ளிட்டோர், பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, வரும் 15ம் தேதி டில்லியில் நடக்கவுள்ள சுதந்திர தின விழாவில், சோனியா பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், விழாவில் அவருக்கு, முன்வரிசையில் சீட் ஒதுக்கப்படுவது நடைமுறையாகும்.

சுதந்திர தின விழாவில் அவர் பங்கேற்க தற்போது வாய்ப்பில்லை. அந்த இருக்கையில் அமர்வதற்கு யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது பற்றி, காங்கிரஸ் கட்சி சார்பில் உறுதியான முடிவு எடுத்ததாக தெரியவில்லை. அந்த விழாவில், ராகுல் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. சோனியா, வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவருவதால், அவருக்கு பதிலாக செயல்படும் குழுவில், ராகுல் முக்கியத்துவம் பெற்றாலும், இதுவரை அவர் பங்கேற்கவில்லை.

சிக்கல்: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், தற்போது நடந்து வருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழலில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு தொடர்பு இருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது. இதற்கு அரசு தரப்பில் சரியான பதில் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தெலுங்கானா விவகாரமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெலுங்கானா எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் மட்டுமல்லாது, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த விவகாரத்திலும், காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடுமையான சட்ட விதிமுறைகளுடன் கூடிய லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 16ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப்போவதாக, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

இந்த விவகாரங்கள் அனைத்தையும், பார்லிமென்டில் எழுப்ப, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. சோனியா, வெளிநாட்டில் உள்ள சூழ்நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு, பார்லிமென்டில் எப்படி பதில் அளிப்பது என தெரியாமல், காங்., மூத்த தலைவர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ராகுல், இந்தியா வருவதற்கு, இன்னும் ஒரு வாரம் ஆகும் என, தகவல்கள் தெரிகின்றன. இதனால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை, மேலும் சிக்கலாகியுள்ளது.

தற்போது சோனியாவின் உடல் நலக்குறைவு பற்றி பேசுவது, அவரது தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாகக் கருதப்படும் என்று காங்கிரஸ், அறிக்கை தந்திருக்கிறது. ஆனால் அவர், காங்கிரஸ் கட்சியின் தன்னிகரற்ற தலைவர், ஆளும் ஐக்கியமுற்போக்கு கூட்டணித் தலைவர், பிரதமர் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு துணையாய் இருப்பவர் என்பதால், அவர் இல்லாத நிலை இப்போது பெரிய சிக்கலாக இருக்கிறது.

பொதுவாக, இவ்வளவு சக்தி வாய்ந்த தலைவரின் உடல் நலம் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாததும் குழப்பத்தை அதிகரிக்கும். முன்பு பிரதமராக வாஜ்பாய் இருந்த போது, அவரது கால்மூட்டு மாற்று ஆபரேஷன் குறித்த தகவலை “தி டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது. அவரது மற்ற உடல்நலக் கோளாறுகளும் வெளியிடப்பட்டன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் தடவை ஆட்சியின் போது, பிரதமர் மன்மோகன், இரண்டாவது முறையாக இதய ஆபரேஷன் செய்தது, செய்தியாக வந்தது. தற்போது நாடு சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து முடிவு எடுக்க சோனியா இங்கு இல்லாதது, online pharmacy no prescription காங்கிரசுக்கு முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையாகும்.

Add Comment