சமச்சீர் கல்வி: உச்சநீதிமன்ற தீர்ப்பு மக்கள் நெஞ்சில் பாலை வார்த்தது! முதல் அமைச்சரின் போக்கில் மாற்றம் வரட்டும்! கி. வீரமணி அறிக்கை!

 

உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வி தொடர்பாக வழங்கிய தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தி.மு.க. அரசு ஆட்சியிலிருந்தபோது கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டம் என்பது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து, தக்காரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மிக அருமையான பாடத் திட்டம்   ஒன்று முதல் 10 ஆவது வகுப்பு வரை.

இதனை எதிர்க்கட்சிகளாக அன்று அமர்ந்தவர்கள் உள்பட பலரும் (அ.தி.மு.க. தவிர) வலியுறுத்தினார்கள். செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்குக் கோரிக்கையாகவும் வைத்தனர்.

அதனால் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அதற்கென தனிச் சட்டம் கொண்டு வந்து, (அமைச்சரவையில் வல்லுநர்களால் வரையப்பட்ட அந்த பாட திட்ட அறிக்கையையும் விவாதித்து) ஒரு மனதாக ஏற்று தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றினார்.

தேர்தல் முடிவும் மாற்றமும்!

அப்போது அதனை எதிர்த்து சில தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டனர். அது தள்ளுபடியான பிறகு, உச்சநீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்து அதிலும் தோல்வி கண்டனர். சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அன்றைய (தி.மு.க.) அரசு வரும் 2011 12 கல்வி ஆண்டிலிருந்து இப்பாடத் திட்டம் செயலுக்கு வரும் என்று கூறியதோடு அதற்கான பாடப் புத்தகங்களையும் சிறந்த பாட நூல் வல்லுநர்கள், கல்வி அறிஞர்களைக் கொண்டு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிட்டு, இவ்வாண்டு பள்ளிக் கல்வியாண்டு துவங்குமுன்பே மாணவர்களுக்கு வழங்கிட எல்லா ஏற்பாடுகளையும் செய்த நிலையில்தான் தேர்தல் முடிவால் அ.தி.மு.க. அரசு ஜெயலலிதா தலைமையில் அமையும்படி நேர்ந்தது.

மக்கள் தீர்ப்பு அனைவராலும் மதிக்கப்பட வேண்டியது என்ற நிலையில், அரசு என்பது ஒரு தொடர்ச்சி, சில மாற்றங்கள், கட்சி அரசியலால் ஏற்படுத்தலாமே தவிர, முந்தைய ஆட்சி செய்த எல்லாவற்றையும் தலை கீழாகக் கவிழ்ப்பது செயல்படுத்தாமல் தன் முனைப்பு, வன்மத்தைக் காட்டுவது ஜனநாயகத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை! விரும்பத்தக்கதல்ல. ஆனால் புதிய அரசோ இதற்கு மாறாக செயல்படத் துவங்கி விட்டது!

அவசர அவசரமாக ரத்து செய்த நிலை!

இக்கல்வி ஆண்டு, பள்ளிகள் திறப்பதை ஒருமாதம் தள்ளி வைத்ததோடு, அப்போதும் இப்பாடத் திட்டத்தை ஏற்க இயலாது என்று பதவியேற்ற அன்றே அவசரக்கோலம் அள்ளித் தெளித்த நிலை என்றபடி, ஒரே நாளில் அமைச்சரவை முடிவு; சமச்சீர் கல்வியை ரத்துசெய்து சட்டத் திருத்தம்; அதற்கு அதே நாளில் ஆளுநர் ஒப்புதல் பெற்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1 கோடியே 20 லட்சம் பிள்ளைகள் உலக அதிசயங்களில் ஒன்றாக கடந்த 100 நாள்கள் பாடப் புத்தகங்களே இன்றி   “யோகா, டான்ஸ் கதை காட்சி என்று காலந்தள்ளிய கொடுமை அன்றாட அவலமாகியது! பெற்றோர்களும், கல்வியாளர்களும், பொது நல விரும்பிகளும் மிகவும் வேதனையும் விரசமும் அடைந்தனர்.

ஒன்று online pharmacy without prescription முதல் பத்து வகுப்புவரை படிக்க வேண்டிய மாணவர்களின் படிப்புக் காலம் விரயப்படுத்தப்பட்டது. குறிப்பாக அரசு தேர்வைச் சந்திக்க வேண்டிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பீதியும், மன நலப்பாதிப்பும் ஏற்படுத்தப்பட்ட கொடுமை!

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமச்சீர் கல்வியை அமல்படுத்திட வேண்டும் என்பதே!

அரசு நியமித்த அக்கிரகார கமிட்டி

உடனே உச்சநீதிமன்ற படையெடுப்பு; அங்கே  தேவையானால் ஒரு புதுக் கமிட்டியை போட்டு சில பாடங்களை மறு ஆய்வு செய்யலாம் என்றனர். ஒரு “அக்கிரகாரக் கமிட்டியை அவசரத்திற்குப் போட்டு, அவர்களிடம் அறிக்கை வாங்கி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. இத்தனைக் கோடி வரிப்பணம் பாழாவதா என்று  கேட்டதோடு, உடனே செயல்படுத்திட சமச்சீர் பாடப் புத்தகங்களை வழங்கிட ஆணையும் பிறப்பித்தார்கள்.

தொலைநோக்கோடு கூறினோமே!

அத்தீர்ப்பை ஏற்க நாம் உள்பட பலரும் தமிழக அரசை, முதல்வரை கேட்டுக் கொண்டோம். அவர் லட்சியம் செய்யவில்லை. நாம் விடுத்த அறிக்கையில் “உச்சநீதிமன்றம் சென்றாலும் முடிவு எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது’’ என்பது தான் முடிவாக இருக்கும் என்று தொலைநோக்கோடு கூறினோம்.

வழக்கம்போல அலட்சியம் செய்து, பிடிவாதமாக மேல் முறையீட்டுக்குச் சென்று இன்று உச்சநீதிமன்றம் இரட்டைத் தாழ்ப்பாளை அம்மையார் ஆசைக்குப் போட்டு விட்டது!

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

25 காரணங்களை முன்னிறுத்தி உச்சநீதிமன்றம் இன்று காலை இந்த நல்ல தீர்ப்பினை வழங்கி, பெற்றோர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது!

நியாயம், நீதி வென்றள்ளது; தன் முனைப்பை முன்னிறுத்தி, அரசியல் நடத்தாமல் ஆக்க ரீதியாக இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் எதிர்பார்ப்பு என்பதை இதன் மூலமாகவாவது முதல் அமைச்சர் அம்மையார் புரிந்து கொண்டு, ஆட்சியை நடத்திட முன்வர வேண்டும்.

ஒரு குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து முன்பு மக்கள் திரண்டுள்ளது போலவே உணர்ச்சிப் பிரவாக வெள்ளம் ஓடுகிறது இன்று நாடெங்கும்.

சுவர் எழுத்தினைப் பார்த்துப் பாடம் பெற அ.தி.மு.க. அரசு தவறக் கூடாது.

மலைபோல் எதிர்ப்புகள்!

மூன்றே மாதங்களில் இவ்வளவு மலைபோல் எதிர்ப்பு மக்கள் வெறுப்பை ஒரு ஆட்சி சம்பாதிக்கலாமா? மேற்கொண்ட பல நடவடிக்கைகளிலாவது முன் யோசனையோடு பிடிவாதம் காட்டாது, மக்கள் நலனுக்கு முன்னுரிமையே தவிர, தன் முனைப்புக்கே பழி வாங்குதற்கோ அல்ல என்று காட்ட வேண்டிய மகத்தான பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.

ஊடகங்களே உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்!

ஊடகங்களே “ஊமையன் கனவு கண்டதுபோல் மென்று விழுங்காமல்’’ உள்ளதை உள்ளபடி எழுதி, ஊராள்வோருக்குத் தக்க அறிவுரை கூறி, உங்கள் மதிப்பை மரியாதையை உயர்த்திக் கொள்ளுங்கள் என்பதும்கூட நமது வேண்டுகோள்! இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Add Comment