தமிழக மீனவர்கள் படுகொலையும், இஸ்லாமிய இயக்கங்கள் பார்வையும்…

ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலையை எதிர்க்கும் இஸ்லாமிய இயக்கங்களை சீண்டிய ‘உணர்வு’ பத்திரிக்கை தமிழக மீனவர்களின் வாழ்வாதார உயிர்பிரச்சனையில் தனது விசமத்தனத்தை காட்டி உள்ளது.

ஜீலை 22-28ம் தேதியிட்ட உணர்வு..? (http://www.tntj.net/44055.html) பத்திரிக்கையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த அபூ ராஜிfishermen_334யா என்ற வாசகர் ‘தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் அடிக்கடி கைது செய்யப்படுவதைக் கண்டித்து தவ்ஹித் ஜமாத் களம் இறங்காதது ஏன்?’ என்று ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.

இது கேட்கவேண்டிய கேள்வி.

(சகோதரர் அபூராஜியா கேள்வியை இப்படி கேட்டிருக்கலாம்

‘தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள கடற்படையால் அடிக்கடி கொல்லப்படுவதை எதிர்த்து களம் இறங்காதது ஏன்?’)

இப்படி கேட்டவுடன் உறைத்து உடனே போராட்டம் நடத்த புறப்பட்டு விடுவார்கள் என்று யாரும் எண்ணி விட வேண்டாம்.

இலங்கை அரசுக்கு எதிராக சிறு அசைவும் இஸ்லாமிய மக்களிடம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் இவர்கள்.

சரி உதவாத பதிலைப் பார்போம்.

“ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் மக்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப போலிப் போராட்டம் நடத்தும் அவசியம் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் நடத்தாத காரணத்தால் போலிப் போராட்டங்களை நடத்துவதில்லை. இது தான் காரணம்.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒரு குட்டி நாடு. இந்தியாவுடன் மோதிப்பார்க்க அந்த நாட்டுக்குப் பலமோ துணிவோ கிடையாது. இந்திய மீனவர்களைச் சட்ட விரோதமாகப் புகுந்து பிடித்துச் செல்லும் வலிமையோ இலங்கை அரசுக்குக் கிடையாது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கான அடிப்படைக் காரணத்தை விளங்கிக் கொண்டால் தான் தமிழ் மொழியைச் சொல்லி மக்களை ஏமாற்றுவோரின் போலித்தனம் புரியும்.”

ஏங்க பாய்! கடந்த தேர்தலில் உங்கள் தவ்ஹித் ஜமாத்தும் அந்த ஓட்டுப்பொறுக்கிகளோடு பொறுக்கப்போனதே?

புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை கிராமங்களில் இந்தூவா நச்சு கருத்துக்களை பரப்பிவிட்டு அது வளர துணை நின்று அமைதியாக சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருந்த இரு சமுக மக்களிடையே பிளவை ஏற்படுத்திய கொலைகார மோடியின் கூட்டளியாக இருந்து வந்து தற்போது பாபர்மசூதியை இடிக்கக் காரணமான, 1919 முதல் இந்திய முஸ்லீம்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை பறித்து, சச்சார் பரிந்துரைகளை கூட இதுவரை செயல்படுத்தாத, மத்திய அரசில் இடஒதுக்கீடு தராத, ஈழத்தமிழ் மக்கள் 1,50,000 ம் மக்கள் சாகக் காரணமான காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திருநாவுக்கரசருக்கு ஆதரவாக உங்கள் மாநில நிர்வாகிகள் கொலைகார ‘கை’ சின்னம் கொண்ட கொடி ஒரு புறம் உங்கள் தவ்ஹீத்ஜமாத் கொடி ஒருபுறம் கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தது ஏனோ இந்த நேரத்தில் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

அதையெல்லாம் நான் கிளறவில்லை. ஆனால் நீங்கள் ஏன் சில விசயங்களை வசதியாக மறந்து (அ) மறைத்து வாசகர்களுக்கும், தமிழக முஸ்லீம்களுக்கும் தவறான செய்தியை பதிவு செய்கிறீர்கள் என்றே தெரியவில்லை.

இலங்கை குட்டி நாடு என்றாலும் இந்தியாவைப் பற்றி என்றைக்கும் அலட்டிக் கொண்டது கிடையாது. இன்றைக்கும் தனது நேச நாடாக சீனா, பாகிஸ்த்தான், பங்களதேசம், இஸ்ரேல் ஆகியவற்றை கருதி வருகிறது. இந்தியா தான் மானங்கெட்டு வடிவேல் பாணியில் ‘நானும் நண்பன், நானும் நண்பன்’ என்று வலிந்து உதவிசெய்து வருகிறது.

வரலாற்றையும் பூகோளத்தையும் உணர்வு பத்திரிக்கை மூலம் நமக்கு புரியவைக்க முயற்சி செய்வதை விட்டு விட்டு (ஏன் என்றால் உங்களுக்கு புரியிதா? வெளங்குதா? என்று அடிக்கடி அண்ணன் கேப்பாரு, எங்களுக்கு நீங்க பேசறது என்னிக்குமே புரியாது) மன்மோகன் சிங்கிடமும், ராஜபக்சேவிடமும் உடனே உங்க யோசனைய சொன்னீங்கனா எங்க தமிழ்நாட்டு மீனவன் இனிமேலும் சாக மாட்டான்)

‘கேட்பவன் கேணப்பயலா இருந்தா கேப்பையில் நெய் வடியுது என்பானாம்’ என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது.

நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட தமிழக முஸ்லீம்கள் ஒன்றும் தமிழக வரலாறும், மீனவர்கள் பிரச்சனையும் பற்றி தெரியாத மக்கள் அல்ல.

எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை எல்லாம் சிங்கள கடற்படை கைது செய்கிறதா? கொல்கிறதா?
இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டினால் இந்திய கடற்படை அந்த மீனவர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறதா?
பாகிஸ்தான் மீனவர்கள் எல்லை தாண்டினால்…?
மற்ற நாடுகளில் எல்லை தாண்டும் மீனவர்களை அந்த நாடுகள் என்ன செய்கிறது?
தமிழக மீனவர்கள் உண்மையிலே எல்லை தாண்டும்போதுதான் கொல்லப்படுகிறார்களா?

இப்படி ஏராளமான கேள்விகள் உள்ளன.

முதலில் தமிழக மீனவர்கள் மீதான சிங்கள கடற்படையின் தாக்குதல், படுகொலை, கைதுக்கான மூலத்தைப் பார்ப்போம்.

கச்சத்தீவு

கச்சத்தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீட்டர், யாழ்ப்பாணத்தில் இருந்து 18 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 280 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கச்சத்தீவு பகுதி முதலில் பச்சைத்தீவு என்று அழைக்கப்பட்டது

1882ஆம் ஆண்டு 8 தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்கு சொந்தமாக இருந்ததாகவும், கிழக்கிந்திய கம்பெனி ஓர் ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவை ராமநாதபுரம் சேதுபதியிடம் குத்தகைக்கு வாங்கினார்கள் எனவும், பின்பு இந்தியாவின் போலி சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை கச்சத்திவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கு ராணுவப் பயிற்சிக்கான தளமாக மாற்றும் முயற்சியில் 1956ம் ஆண்டு முயற்சி செய்ய தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட கும்பகர்ணனைப் போல் இந்திய நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை விவாதிக்கப்பட்டது.

தமிழக மக்களின், தமிழக மீனவர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்திய இலங்கைக்கு இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தின் மூலம் 28.6.1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்துக்கொடுத்தது. போனால் போகட்டும் என்று அந்த ஒப்பந்தத்தின் 5வது பிரிவில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொள்ளும் உரிமையும், வலைகளை காய வைத்துக்கொள்ளும் உரிமையும், கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் வழிபாடு நடத்திக்கொள்ளும் உரிமையும் சேர்க்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்ததா?

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட நாளில் இருந்தே ஒப்பந்த ஷரத்துகளை இலங்கை மீறி எம் தமிழக மீனவ சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் முழு பூசணியை சோற்றில் மறைப்பதைப் போன்று எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை ஏதோ வெறுமனே கைது செய்து அழைத்துச் சென்று, பின்பு விடுவிக்கிறார்கள் என்ற தோற்றத்தை தமிழக முஸ்லீம் மக்களிடம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

fishermen_500

இதுவரை 540க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை வெறிநாய்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழக மீனவர்கள் அனுபவித்த கடுமையான, சொல்ல நாக்கூசும் வகையில் வக்கிரமான சித்திரவதைகளைக் கேட்டால் மானமுள்ள எவனும் அவர்களுக்காக போராடுவானே தவிர சிங்கள வெறியனுக்கு வக்காலத்து வாங்க மாட்டான்.

சிங்கள கடற்படை வெறிநாய்களால் குதறப்பட்ட எம் தமிழக மீனவர்கள் இன்றைக்கும் முடமாகி. பல கோடிக்கணக்கான சொத்துக்கள் இழந்து நிற்பதை தமிழக கடற்கரை கிராமங்களுக்கு ஒருமுறை போய் பார்த்தால் தெரியும். அந்த மக்களிடம் நீங்கள் எல்லை தாண்டியதால் தான் சிங்கள கடற்படை உங்களைக் கைது செய்கிறது என்று கூறிப்பாருங்கள். அந்த மக்கள் தருவார்கள் அதற்கு பதில்.

எங்கள் மீனவன் மீதான சிங்கள அரசின் வன்முறைக்கு எதிராக இங்கு ஆட்சியில் இருக்கும் எவனும் ஒரு மயிரையும் புடுங்கியது இல்லை. ஒவ்வொரு முறை எம் மீனவன் கொல்லப்படும்போதும் முதல் தகவல் அறிக்கை பதியப்படும். ஆனால் அந்த முதல் தகவல் அறிக்கையின் மீது விசாரணை நடத்தி கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். ஆனால் துப்பு கெட்ட தமிழக ஆட்சியாளர்கள், இந்திய அரசுகள் அப்படி எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

ஆனால் சிங்கள கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்தால் என்ன விளைவு?

மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள்

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை Buy Levitra ஒவ்வொரு முறை தாக்குதல் நடத்தும்போதும் தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் ஏன் காங்கிரஸ் கூட பொறுக்க முடியாமல் போராட்டம் நடத்தியது.

இந்த கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கும் வேளையில் எங்கள் மீனவன் எத்தனைபேர் பாதிக்கப்பட்டானோ என்ற பதைபதைப்பு தோன்றுகிறது.

540 மீனவர்கள் கொல்லப்பட்டபோது துடிக்காத அரசுகள் சிங்கள கடற்படை வெறிநாய்களை எதிர்த்து வீதிக்கு வந்தவுடன் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்று (போங்கடா நீங்களும் உங்கள் இந்தியாவும்) சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்புச்சட்டம், தோழர் கொளத்தூர் மணி, அய்யா மணியரசன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சியது. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்திக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் இதுவரை இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை; இலங்கையும் தாக்குதலை நிறுத்தவில்லை.

ஒரு நாடு தனது குடிமக்கள் மீது அந்நிய நாடு தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டை எதிர்க்கவேண்டும். ஆனால் இந்தியா, சிங்கள கடற்படையால் முதல் மீனவன் கொல்லப்பட்டபோதே சிங்கள வெறிநாய்களை வேட்டையாடி இருந்தால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீட்டில் இழவு விழுந்திருக்காது. இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே! அதனால் தானே நாங்கள் போராடுகிறோம்.

நீங்கள் போராடுவது எல்லாம் ஜெயிக்கிற போராட்டம்! நாங்கள் போராடுவது எல்லாம் வெற்றுப் போராட்டமா?

இலங்கையை ஒன்றும் பண்ணமுடியாதாமாம்?

‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தான்; அதனால் சுட்டோம் என்று தைரியமாக கூறுங்கள். சர்வதேச சட்டங்கள் படி இந்தியா உங்களை ஒன்றும் செய்யமுடியாது’ என்று இலங்கைக்கு மேலும் எம் தமிழக மீனவனை கொல்ல ஆலோசனை கொடுக்கிறது உணர்வு பத்திரிக்கை.

தமிழக மீனவர்களை சர்வதேச கடல் எல்லையிலும், கச்சத்தீவுப் பகுதியிலும், ஏன் ராமேஸ்வரம் வரை விரட்டி வந்து இலங்கை கடற்படை தாக்கியது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் செய்திவந்ததே?

சிங்கள வெறி நாய்களுக்கு அந்தத் துணிச்சலைக் கொடுத்தது யார்? உங்களைப் போன்ற மனிதாபிமானமற்றவர்களும்,  கையாளாக இந்திய அரசும்தானே!.

எங்கள் மீனவர்கள் தாக்கப்படுகிறார்களே என்று போராடினால் போலி போராட்டம் என்று கொச்சைப்படுத்துவதா?

மீனவர்கள் தாக்கப்படுவது, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களுக்காக தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் வீதிக்கு வந்தது உண்டா..?

எவனாவது போராடி, சிறை சென்று, அடிவாங்கி, செத்துப்போய், உரிமைகளை பெற்றுக்கொடுத்தால் அதை குளுகுளு அறையில் உட்கார்ந்து அனுபவித்துக் கொண்டு போலிப் போராட்டம் என்று விமர்சனம் செய்வீர்கள்.

உங்களுக்கு எங்கே பிரச்சனை என்று எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ம.ம.க தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியவுடன் உங்களுக்கு பற்றிக்கொண்டு வருகிறது.

இஸ்லாமிய தலைவர்கள் என்ற போர்வையில் தமிழக இஸ்லாமிய மக்களை பொதுச்சிந்தனையோட்டத்தில் இருந்து திசைமாற்றி ஒரு தலைமுறை இஸ்லாமிய மக்களை சுய தேவைகளுக்காக மட்டுமே சிந்திக்கத் தூண்டியும், பொதுத்தேவைகளுக்கான போராட்ட திசைவழியில் இருந்து துண்டித்து இருக்கிறீர்கள். பரந்துபட்ட மக்களிடம் இருந்து எம் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்துத்துவா சக்திகள் நினைப்பதை நீங்கள் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். இதுவே உங்களுக்கும் இந்துத்துவா சக்திகளுக்கும் பொது வேலைத்திட்டமாக இருக்கிறது.

உங்கள் பாணியில் எத்தனைப் போலிப் போராட்டங்கள் நடத்தினாலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு கண்டு கொள்வதுமில்லை, இலங்கை அரசு தாக்குதலை நிறுத்துவதுமில்லை.

2011ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான நேரத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதி இலங்கை தோற்றது. ஊருக்கு இளிச்சவாயனாக இருந்த எங்களது தமிழக மீனவர்கள் மீது கிரிக்கெட்டில் தோற்ற ஆத்திரத்தை இலங்கை காட்டியது. விளைவு தமிழக மீனவன் படுகொலை செய்யப்பட்டான். (என்னங்கடா நாடு இது?)

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது வெளியில் தெரிந்தால் தோற்றுவிடுவோம் என்று பயந்து சுயநலத்திற்காக (நீங்கள் ஆதரித்தும் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த) தி.மு.க. அரசும், இத்தாலி காங்கிரசும் கூட்டுக் களவாணியாக எங்கள் தமிழக மீனவன் செத்ததைக்கூட வெளியில் விடாமலும் அவர்கள் சாவுக்குகூட ஓ என்று கதறி அழக்கூட தடைபோட்ட அயோக்கியத்தனத்தை ஏன் வசதியாக முஸ்லீம் மக்களிடம் மறைக்கிறீர்கள்?

தமிழக மீனவர்கள் தினம் தினம் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக கடல்வெளியில் போராடிக்கொண்டு இருக்கும்போது அவர்களைக் கொல்லும் சிங்கள கடற்படையின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் பிரச்சாரமாக உங்கள் குரலும் ஒலிக்கிறதே? யாரை திருப்திப்படுத்த இந்த பதில்?

தமிழ்நாட்டில் தமிழை வைத்தோ, தமிழர்களின் பிணங்களை வைத்தோ பிழைப்பதற்கு இங்கு போராடும் போராளிகள் ஒன்றும் கருணாநிதியும் அல்ல கனிமொழியும் அல்ல. இங்கு தமிழனின் உரிமைகளுக்காகப் போராடினால் பிழைக்க முடியாது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து என்று அடக்குமுறைகளும், சிறைதண்டனைகளும் தான் பரிசாகக் கிடைக்கும்.

அன்பு இஸ்லாமிய உறவுகளே..

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால்தான் பிரச்சனை என்று கூறுவது உன்மையா என்றால் இல்லை. பக்கத்து பகை நாட்டுக்காரன் என்ற பாகிஸ்தான் கூட தவறுதலாக எல்லை தாண்டினால்  சுடுவதில்லை; கைது செய்து, விட்டு விடுகிறான். உலகம் முழுவதும் மீனவர்கள் எல்லை தாண்டினால் அவர்களை எச்சரிப்பதும் அல்லது சட்டப்படி கைது செய்து வழக்கு போடுவதுமே நடந்து வருகிறது. ஆனால் இலங்கை மட்டும் இனவெறி கொண்டு சர்வதேச கடல் எல்லைப் பகுதியிலும், கச்சத்தீவு அருகிலும் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையால் தாக்குகிறார்கள் அல்லது கொல்கிறார்கள். ஏன் சில சமயம் இந்திய கடல் எல்லை வரை துரத்திவந்து தாக்கிய சம்பவங்களும் உண்டு. உண்மை இவ்வாறு இருக்க உண்மைக்குப் புறம்பாக ஏதோ தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டி போவது போலவும் அதனால் தான் கைது செய்யப்படுகிறார்கள் என்று பதில் கொடுப்பது யாரைக் காப்பாற்ற என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

(இவர்கள் மீனவர்கள் கொல்லப்பட்டதையும், சித்திரவதைக்கு ஆளானதையும் தங்கள் பதிலில் கவனமாக தவிர்த்துக் கொண்டதை அந்த பத்திரிக்கையை படிப்பவர்களுக்குப் புரியும்) (http://rasminmisc.blogspot.com/2011/07/blog-post_21.html)

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் கண்டிக்கக்கூட வேண்டாம் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருந்தாலே போதும்.

தமிழக இஸ்லாமிய மக்களே..

தமிழக மீனவர்கள் மீதான சிங்கள கடற்படையின் கொலைவெறி தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவோம்..!
இதுவரையிலான மீனவர்கள் கொலைக்காக சிங்கள கடற்படையின் மீது கொலை வழக்கு பதியப்பட்டு உரிய விசாரணை நடத்தி அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கோருவோம்..!
பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நமது உறுதியான ஆதரவைக் கூறுவோம்!
தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்கப் போராடுவோம்..!
தமிழக கடல்வெளியில் நமது மீன் பிடிக்கும் உரிமைகளை நிலைநாட்டுவோம்..!
தமிழக கடற்பரப்பில் இலங்கையோடு சீனாவின் அச்சுறுத்தலுக்கும் எதிராகப் போராடுவோம்..!
நமது தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் இருக்கும் நமது சமுதாய துரோகிகளை இனம் காண்போம்..!

– உமர்கயான்.சே, இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள், தமிழ்நாடு

thk
கீற்று

Add Comment