திமுகவின் எதிர்காலம் யார் கையில்?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்த திமுகவுக்குத் தற்போதைய காலகட்டம் சோதனையானது தான். ஒரு பக்கம் தமிழக அரசின் கைது நடவடிக்கைகள் மறுபக்கம்  தலைமைப் பதவியைக் கைப்பற்ற குடும்பத்தில் ஏற்பட்டுள்ள வாரிசு உரிமைப் போர்!

வீரபாண்டி ஆறுமுகம், ஜெ.அன்பழகன், ரங்கநாதன், அனிதா ராதா கிருஷ்ணன், என்.கே.கே.பி ராஜா, மதுரை மாவட்ட செயலாளர் தளபதி, குடமுருட்டி சேகர் மற்றும் கழக முன்னணியினரான பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலரும்  கைது செய்யப் பட்டுள்ளனர். தயாநிதிமாறன், அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைகள் தாங்கள் எந்த வழக்கில் எப்போது எந்தக் காவல்துறையால் கைது செய்யப் படுவோம் என தெரியாமல் திணறி வருகின்றனர்.

திமுகவின் பொருளாளரும், தலைமைப் பதவியைக் குறி வைத்து காய் நகர்த்தி வரும் ஸ்டாலின் உற்சாகமாக தமிழகம் முழுவதும் சிறைகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து கைது செய்யப் பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள லாட்டரி மார்ட்டின் மற்றும் அழகிரியின் நெருங்கிய Bactrim online சகாக்களான பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி கைது செய்யப் பட்டதில் இருந்து மதுரை பக்கமே அழகிரி வருவதில்லை என்றும் மகன், மகள்களை வெளிநாட்டில் செட்டில் செய்து விட்டு டெல்லியிலேயே தங்கி விட்டதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

ஒரு பக்கம் திமுகவினர் மீது எடுக்கப் படும் கைது நடவடிக்கைகள் ஜெயலலிதாவின் பழி வாங்கும் படலமே என்று திமுகவால் விமர்சிக்கப் பட்டாலும் எல்லா வழக்குகளும் பழி வாங்கும் நடவடிக்கையாகவும் தெரியவில்லை .பலர் பாதிக்கப்பட்டே புகார் அளித்து இருப்பதாகத் தெரிகிறது. திமுக தலைவர் கருணாநிதியும் சிறுதாவூர் மற்றும் கோடநாடு நில அபகரிப்பு புகார்களையும் விசாரிக்க வேண்டும் என்று கூறி வருவதன் மூலம் திமுகவினர் மீது போடப் படும் நில அபகரிப்பு புகார் முழுவதும் பழிவாங்கும் நடவடிக்கையல்ல என்று விளங்க முடிகிறது.

மக்கள் பணத்தைப் பிடுங்கித் தின்னும் இது போன்றவர்களை வைத்துக் கொண்டு கட்சியை நடத்தினால் திமுக என்ற ஒரு கட்சி இருந்ததா என்று கேட்கும் நிலை எதிர்கால சந்ததியினரிடம் ஏற்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.“குடும்ப அரசியல், ஊழல்” இரண்டுமே திமுகவின் தோல்விக்குப் பிரதான காரணம். முந்தைய காரணத்தை ஸ்டாலின் கையில் எடுத்துக் கொண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருப்பதாகப் பேச்சுகள் உலவி வரும் நிலையில், ஊழலைத் தடுக்க ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை.

இன்று சிறையில் இருக்கும் திமுகவினர், அன்னா ஹசாரே போன்று ஊழலைத் தடுப்பதற்காக சிறை செல்லவில்லை. அடுத்தவர்களின் சொத்தை அபகரித்த குற்றத்திற்காக சிறைக்குச் சென்றுள்ளனர் என்பதையும் திமுக நினைவில் கொள்ள வேண்டும். இது போன்றவர்களைத் தயவு தாட்சண்யம் பாராமல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டே நீக்க வேண்டும் என்பது தான் கட்சியின் அடிமட்டத் தொண்டனின் விருப்பம். ஆனால் திமுக தலைவரின் மகளே 2G ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற நடவடிக்கைகளைக் கட்சித் தலைமை எடுக்குமா என்பதே தற்போதைய கேள்வி.

திமுகவில் ஸ்டாலின் வளர்ந்து வந்த முறையை உற்று நோக்கியவர்கள் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளக்கூடும். அழகிரி, கனிமொழி மற்றும் தயாநிதிமாறன் உள்ளிட்ட வாரிசுகக்ச் சாதாரண தொண்டன் அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்வானா என்பது சந்தேகமே.

இதைத் திமுக தலைமை உணர்ந்து பொதுமக்களிடம் வெறுப்பைச் சம்பாதித்து கட்சிக்கும் கெட்ட பெயர் தேடித் தந்த கழக முன்னணியினர்மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து தக்க நேரத்தில் பொறுப்புகளை உரியவர்களிடம் வழங்கி அதிரடி முடிவுகளை எடுக்குமேயானால், பணம் மற்றும் இலவசங்களை வழங்காமலே பொதுமக்கள் இடத்தில் நன்மதிப்பைப் பெறும் நிலையைத் திமுக விரைவிலேயே பிடிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திமுகவின் எதிர்காலம் மக்கள் கையில் தான் உள்ளது. அது தம் மக்களா? தமிழக மக்களா என்பதைக கருணாநிதி தான் முடிவு செய்ய வேண்டும்.

 inneram.com

Add Comment