காலம் காலமாக சித்திரைதான் புத்தாண்டு மரபுகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை


மக்களிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில், சித்திரை மாத முதல் நாளை Buy cheap Ampicillin தமிழ் புத்தாண்டு தினமாக அறிவிக்கும் சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். பேரவையில் நடந்த விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து கூறியதாவது: தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும், தனக்கு மட்டுமே அக்கறை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக, முன்னாள் முதல்வரால் தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டம், 2008ம் ஆண்டு இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு, எந்த நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டு இருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது.  ஒரு சட்டம் இயற்றப்படுகிறது என்றால், அது நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும், அல்லது இதுபோன்ற சட்டம் தேவை என்று மக்கள் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். அந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கான காரணங்கள் தெரிவிக்க வேண்டும். இவை எதுவுமே இல்லை. யாருக்கும் பயனளிக்காத ஒரு சட்டத்தை முந்தைய அரசு ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் காலக் கணிப்பு முறையின்படி, ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். இது சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. சித்திரை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பல்லாண்டு காலமாக, சித்திரை முதலாம் நாளையே புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு, இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டு கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாக இருக்க முடியும்.
கோடைக் காலமே முதலாவது பருவம் என சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.

சித்திரைத் திங்கள் முதல் நாளை ஆண்டின் துவக்க நாளாகக் கொண்டாடலாம் என பல அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரை மாதம் தான். சங்க இலக்கியத்தின் மிகப் பழைய இலக்கியமான, பத்துப்பாட்டு இலக்கியத்தின் நெடுநல்வாடையில், சூரியன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரனார் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தால் 1912ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியிலும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசவைக் கவிஞராக இருந்த நாமக்கல் வி.ராமலிங்கம் பிள்ளை, Òசித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்Ó என்ற தனது வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும், சித்திரை மாதம் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதை உறுதிப்படுத்துகின்றன.
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என சட்டம் இயற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், சித்திரை முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. மக்கள் நம்பிக்கையை சட்டம் மூலம் மாற்றுவது சரியல்ல.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், யாருக்கும் பயனளிக்காத, காலங்காலமாக போற்றி பாதுகாத்து வந்த மரபுகளை மீறுகின்ற, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற, இந்தச் சட்டத்தினை ரத்து செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Add Comment