தேர்தல்: சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைகின்றன

சென்னை, செப். 5: இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியுடன், அதன் புறநகரில் அமைந்துள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் உள்பட 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைகின்றன. 

தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் ஆகியோர் உள்ளாட்சி தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

ஆனால், நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், தலைவர்கள் ஆகியோர் மக்கள் மூலமாகவே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

சென்னை மாநகராட்சி தேர்தல் 2011: சென்னை மாநகராட்சியுடன் அதைச் சுற்றியுள்ள சில நகராட்சி, ஊராட்சி அமைப்புகளை இணைக்க கடந்த 2009-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

இதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த சில நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளன. இதனால் சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களுடன் இப்போது கூடுதலாக 5 புதிய மண்டலங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன. 

இதனால் சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 200 ஆக உயரும் என்று தெரிகிறது. 

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள நகராட்சிகள்: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலந்தூர், உள்ளகரம் – புழுதிவாக்கம் ஆகிய 9 நகராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் no prescription online pharmacy இணைகின்றன. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்ன சேக்காடு, புழல், போரூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய 8 பேரூராட்சிகளும் இணைக்கப்படுகின்றன. 

மேலும் இடையஞ்சாவடி, 

சடையங்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடபெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தாகரம், நொளம்பூர், காரப்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரம்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி ஆகிய 25 ஊராட்சி அமைப்புகளும் இணைகின்றன. 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம், வார்டு, மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வாக்குச்சாவடிகளுக்கு அனுமதி, புகைப்பட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவெடுக்க மாநகராட்சியின் சார்பாக வரும் வியாழக்கிழமை (செப். 8) கூட்டம் நடைபெறவிருக்கிறது.

Add Comment