சிறுதாவூர் ஆக்கிரமிப்பை மீட்பது எப்போது? – கருணாநிதி

சிறுதாவூரில் தலித்களுக்காக கொடுக்கப்பட்ட இடத்தை ஜெயலலிதாவும் அவருக்கு வேண்டியவர்களும் ஆக்கிரமித்துக் கொண்டதை எப்போது மீட்கப்போகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கை:

மாநகராட்சிக்கு சொந்த மான 8 கிரவுண்டு இடத்தை அண்ணா அறிவாலயம் எடுத்துக் கொண்டதைப்போல பேரவையில் சாற்றப்பட்ட குற்றச்சாட்டிற்கு தங்கள் பதில் என்ன?

தமிழக அரசின் வீட்டு வசதித்துறை சார்பில் 5-8-1988-ல் அதாவது அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே அரசாணை எண் 1100 பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையில், தி.மு.க. அறக்கட்டளைக்கு அலுவலகம், திருமண மண்டபம், மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்கு பின்வரும் நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது. மொத்த நிலத்தில் பத்து சதவிகிதமான 1890 சதுர மீட்டர் நிலத்தினை திறந்தவெளி நிலமாக பொதுமக்களுக்கான பொழுது போக்குப்பூங்காவாக தி.மு.க. அறக்கட்டளையே பராமரிக்க வேண்டும். மேற்படி பத்து சதவிகித இடத்தில் எந்தவித கட்டிடங்களும் கட்டப்படக்கூடாது. இதுதான் அரசாணையில் விதிக்கப்பட்ட நிபந்தனை.

இந்த ஆணையின்படி தி.மு.க. அறக்கட்டளையினால் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது.

இதற்கிடையே சென்னை உயர்நீதி மன்றத்தில் தி.மு.க. அறக்கட்டளை சார்பில் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கொன்றும் தொடரப்பட்டது. அதில் நீதியரசர், நான்கு வார காலத்திற்கு எதுவும் செய்யக்கூடாது என்றும், அறக்கட்டளையின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு தாங்கள் ஆட்சியிலிருந்து வெளியேறிய மே 2006 வரை நீதிபதி கூறியதற்கொப்ப எந்த ஆணையும் பிறப்பிக்க வில்லை. பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டார்கள்.

அதன்பிறகு சென்னை மாநகர் வளர்ச்சி குழுமமும், சென்னை மாநகராட்சியும் Amoxil online இணைந்து குறிப்பிட்ட இடத்தை நேரில் பார்த்து ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் 7-12-2007 அன்று அரசின் சார்பில் இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட ஆணையில், இந்த பிரச்சினையில் மேல் நடவடிக்கையை கைவிடுவதென்றும், விளக்கம் கேட்டு அ.தி.மு.க. அரசு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்றும், மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளாமல் திறந்தவெளியாகவே பராமரித்திட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுதான் அண்ணா அறிவாலயத்தில் சென்னை மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடம் பற்றிய முழு விவரமாகும்.

என் வீட்டிற்கு பின்னால் உள்ள ஓர் சிறு இடத்தைப்பற்றி – திரும்பத்திரும்ப அதைப்பற்றிய விளக்கத்தை நான் கொடுத்திருந்த போதிலும் நேற்றையதினம் பேரவையில் ஒரு அமைச்சர் புகார் கூறியிருக்கிறார்.

அ,தி.மு.க. உறுப்பினர் ஒருவர் அதற்காக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, அதை அவையிலே எழுப்ப பேரவைத் தலைவர் அவசர அவசரமாக அனுமதி கொடுத்துள்ளார்.

அந்தச் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் மற்ற யாரைப் பற்றியும் பேசாமல் என்னுடைய வீட்டிற்கு பின்னால் உள்ள ஒரு கால்வாய் புறம்போக்கு நிலம் என்று கூறப்படும் 13 அடிகள் மட்டுமே அகலம் கொண்ட ஒரு சிறு இடத்தைப்பற்றி அவையிலே நீண்ட விவாதம் நடைபெற்றுள்ளது.

உறுப்பினர் அவையிலே பேசும்போது, “1967-ல் கருணாநிதிக்கு அவர் வீட்டிற்கு பின்னால் இருக்கிற 60க்கு 13 என்ற இடம் தேவைப்படுகிறது. அது கால்வாய் இடம். அந்த இடத்தை அவருக்கு விலைக்கு கொடுக்கலாம் என்று சென்னை மாநகராட்சியில் ஒரு தீர்மானம் போட்டு அனுப்புங்கள் என்று மாநகராட்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஒரு கடிதம் அனுப்புகிறார். உடனே சென்னை மாநகராட்சியும் அந்த இடத்தில் ரூ.3,250 என்று அந்தக்காலத்தில் விலையை நிர்ணயம் செய்கிறது. கருணாநிதிக்கு கொடுக்கப்பட்டு விடுகிறது. அவருக்கு கொடுக்கும்போதே அந்த நிலம் கால்வாய் பகுதி என்றும், மாநகராட்சி ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கே வந்து அந்த கால்வாய்ப் பகுதியை சுத்தம் செய்வார்கள் என்ற ஒரு நிபந்தனையுடன் அந்த இடம் அவருக்கு கொடுக்கப் பட்டது” என்று இதையெல்லாம் குற்றச்சாட்டாக கூறுகிறார். இது குற்றச்சாட்டா? நிலை விளக்கமா?

அதைத்தான் நான் ஏதோ திட்டமிட்டு ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், அந்த இடத்திலே கட்டிடம் கட்டியிருப்பதாகவும் பேரவையில் பேசியிருக்கிறார்கள். பேரவை உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் அல்லது இப்போது கூட நேரில் வந்து அந்த இடத்தை பேரவைத் தலைவர் தலைமையிலே காணலாம்.

நான் என்னுடைய சொந்த வீட்டையே நான் வாழும் காலத்திற்கு பிறகு என் குடும்பத்திற்கு வேண்டாமென்று கூறி அதனை அறக்கட்டளைக்கு எழுதிக்கொடுத்துவிட்டேன். ஆனால் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை நான் ஆக்கிரமித்து கொண்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம் கூறி அதற்குரிய அமைச்சர் பேரவையிலே பதில் சொல்லியிருக்கிறார்.

மேலும் அந்த துறைக்கான அமைச்சர் தனது பதில் உரையில், “சென்னை மாநகராட்சியின் பழைய செட்டில்மெண்ட் பகுதிகளான சைதாப்பேட்டை, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, மற்றும் தியாகராயர்நகர் போன்ற பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக அதற்கென நியமிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சென்று பணியாற்ற தனி சந்துகள் பராமரிக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் திடக்கழிவு மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் இயந்திரங்களாலும் மற்றும் பாதாள சாக்கடை மூலமாகவும் அகற்றப்படும் வகையில் நவீனமயமாக்கப்பட்டதால் இச்சந்துகள் பயன்பாடின்றி சென்னை மாநகரின் பல்வேறு மண்டலங்களிலும் உள்ளன” என்றுதான் தொடங்குகிறார். இதிலிருந்தே அது சந்து என்பதும், எதற்காக பயன்பட்டது என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
|
மேலும் அமைச்சர் தனது பதிலில் இது போன்ற சந்துகள் கோபாலபுரத்தில் இருக்கின்றன என்றும்; அதிலே ஒன்றுதான் என்னுடைய வீட்டின் பின்புறத்திலே உள்ளது என்றும் கூறியிருக்கிறார். கோபாலபுரத்தில் என் வீட்டிற்கு பின்னால் உள்ள அந்த சந்து போன்ற பகுதிகளையெல்லாம் அந்த தெருவிலே உள்ள அனைவருமேதான் பராமரித்து வருகிறார்கள்.

என்மீது குற்றஞ்சாட்டிய அந்த அ.தி.மு.க. உறுப்பினரையும், அமைச்சரையும் கேட்கிறேன். உங்கள் முதல் அமைச்சரின் கதை என்ன? அதைப்பற்றி உங்கள் தோழமைக்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் ஊர்வலமாக தலைமை செயலகத்திற்கே வந்து “சிறுதாவூரில்” தலித்களுக்காக கொடுக்கப்பட்ட இடத்தை ஜெயலலிதாவும் அவருக்கு வேண்டியவர்களும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்று புகார் மனு கொடுத்தார்களா, இல்லையா? அதன்மீது விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நீதியரசர் சிவசுப்ரமணியம் கமிஷன் அவ்வாறு ஆக்கிரமிப்பு நடந்தது உண்மை என்று அறிக்கை கொடுத்ததா, இல்லையா?

கொடநாடு விவகாரம் என்ன? சிறுதாவூரில் ஜெயலலிதாவிற்கு மிகவும் வேண்டப்பட்டவர் பெயரிலே உள்ள மாளிகை, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை வளைத்து ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி கட்டப்பட்டிருக்கிறதா இல்லையா? அந்த இடங்களையெல்லாம் அந்த துறையின் அமைச்சர் எப்போது கைப்பற்றப்போகிறார்? பேரவையில் பதில் சொல்வாரா?” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Add Comment