திமுக அரசின் குறிப்பை அப்படியே வாசிப்பதா?: கருணாநிதி

சென்னை, செப்.10: திமுக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ளதை அப்படியே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேரவையில் வாசித்ததாக திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டினார். 

இது Levitra No Prescription குறித்து வெள்ளிக்கிழமை அவர் அறிக்கை வெளியிட்டார். 

“இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று அதற்கு 25-8-2011 அன்று அத்துறையின் அமைச்சரும் பதிலளித்து விட்டார். ஆனால், அத்துறைக்கான முக்கிய அறிவிப்புகளை 6-9-2011 அன்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்திருக்கிறார். அதுபோலவே வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை முடிந்துவிட்ட நிலையில் அத்துறைக்கான முக்கிய அறிவிப்புகளை விதி 110-ன் கீழ் முதல்வர் படித்திருக்கிறார். 

ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கையின்போதும் சாதாரண அறிவிப்புகளையும், திமுகவை திட்டுவதையும் அமைச்சர்களிடம் விட்டுவிட்டு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா படிக்கிறார். 

பேரவையில் அமைச்சர் சி.வி. சண்முகத்தால் தாக்கல் செய்யப்பட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை விளக்கக் குறிப்பில், 2010-11-ல் திமுக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள வரிகள் அப்படியே இடம் பெற்றுள்ளன. 

திமுக ஆட்சியில் கடந்த ஆண்டுகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் என்ன எழுதப்பட்டிருந்ததோ, அதை அப்படியே எழுத்து பிசகாமல் இந்த ஆண்டு அதிமுக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் எடுத்து எழுதியிருக்கிறார்கள். 

திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையில் எதுவும் நடக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாவும், கருணாநிதி ஆட்சியில் கவியரங்கமும், சங்கமமும் மட்டுமே நடைபெற்றது என அமைச்சர் சி.வி. சண்முகமும் பேசியுள்ளனர். 

திமுக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கு 4 ஆண்டுகளில் ரூ. 3.71 கோடி உதவித் தொகை, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை ஓடுபாதை ரூ. 2.40 கோடியில் சீரமைப்பு, ஆண்டுதோறும் டென்னிஸ் போட்டிகள் நடத்த ரூ. 1 கோடி, பல மாவட்டங்களில் நவீன நீச்சல் குளங்கள், சென்னையில் உள்ள நவீன ஸ்குவாஷ் அரங்கத்தில் போட்டிகள் நடத்த ஆண்டுதோறும் ரூ. 1 கோடி, 2011-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 3 கோடியும், அந்த அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ. 1 கோடிப் பரிசு என திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

Add Comment