தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை

ஏர்செல் நிறுவனத்தை விற்றது தொடர்பாக மலேசியா நிறுவன நிர்வாகியிடம் சி.பி.ஐ. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக தயாநிதி மாறனிடமும் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டும், சி.பி.ஐ. போலீசாரும், பாராளுமன்ற பொது கணக்கு குழுவும் விசாரித்து வருகின்றன. இதில் தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட காரணமாக இருந்ததாக கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  ராசாவுக்கு முன்னதாக தொலை தொடர்பு மந்திரியாக இருந்த தயாநிதி மாறன் காலத்திலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும்,

ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க அவர் தூண்டியதாகவும், Buy Ampicillin இதன் மூலம் சன் டி.வி.யில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய தயாநிதி மாறன் தூண்டுதலாக இருந்தார் என்றும் புகார்கள் எழுந்தன.

இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. போலீசார், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதில், ஏர்செல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான உத்தரவுகளை தயாநிதி மாறன் வேண்டுமென்றே தாமதப்படுத்தினார் என்றும், அதன் மூலம் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பதற்கு மறைமுகமாக கட்டாயப்படுத்தினார் என்றும், அதற்கு பரிகாரமாக மேக்சிஸ் நிறுவனம் சன் டி.வி.யில் முதலீடு செய்தது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.

இதற்கிடையில், சி.பி.ஐ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து, மேக்சிஸ் நிறுவனத்தின் நிர்வாகியும் (ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்), ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரால்ப் மார்ஷலிடம் நேற்று சி.பி.ஐ. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். இதற்காக அவருக்கு சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதனை ஏற்று அவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஆனால், விசாரணை விவரங்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை.

தயாநிதி மாறனிடமும் இது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Add Comment