தண்டனையில் இருந்து தப்பினர் ஹர்பஜன், காம்பிர்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷம் காட்டிய இந்தியாவின் காம்பிர், ஹர்பஜன் தண்டனையில் இருந்து தப்பினர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. லீக் சுற்றில் நடந்த முக்கிய போட்டியில் காம்பிர் அதிரடி கைகொடுக்க இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது.

காம்பிர் சவால்:
இப்போட்டியில், இரு அணி வீரர்களும் அடிக்கடி முறைத்துக் கொண்டனர். 34வது ஓவரில் சயீத் அஜ்மல் வீசிய பந்து, காம்பிரின் பேட்டில் படவில்லை. ஆனால், “கேட்ச்’ செய்த பாகிஸ்தான் கீப்பர் கம்ரான் அக்மல் வீணாக “அவுட்’ கோரினார். இதனை அம்பயர் பில்லி பவுடன் நிராகரித்தார். பின் தேநீர் இடைவேளையின் போது காம்பிர்-கம்ரான் வார்த்தை போரில் ஈடுபட்டனர். அப்போது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கடுமையாக சவால் கொடுத்தார் காம்பிர். இந்த நேரத்தில் தோனி தலையிட்டு காம்பிரை சமாதானம் செய்தார்.

ஹர்பஜன் ஆவேசம்:
இதே போல ஹர்பஜன் மற்றும் அக்தர் மோதிக் கொண்டனர். இவரது இரண்டு பந்துகளில் ரன் எடுக்க முடியாத விரக்தியில் ஹர்பஜன் ஏதோ சொல்ல, பதிலுக்கு அக்தரும் முணுமுணுக்க, அம்பயர் தலையிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பின் ஆமெர் வீசிய கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றி பெற்றதும், அக்தரை பார்த்து சிங்கமென கர்ஜித்தார் ஹர்பஜன். இதற்கு “வெளியேறு’ என்பது போல அக்தரும் சைகையில் பதிலடி கொடுத்தார்.

இப்பிரச்னையில் காம்பிர், ஹர்பஜனுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐ.சி.சி., “மேட்ச் ரெப்ரி’ ஆன்டி பைகிராப்ட், பிரச்னையை எளிதாக எடுத்துக் கொண்டார். யாருக்கும் தண்டனை விதிக்கவில்லை. சம்பந்தப்பட்ட வீரர்களிடம் சகஜமாக பேசிய இவர், களத்தில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும்படி ஆலோசனை மட்டும் வழங்கினார். இது குறித்து இந்திய அணியின் மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,””போட்டியின் பரபரப்பான கட்டத்தில் வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக “மேட்ச் ரெப்ரி’ பைகிராப்ட் கருதினார். இதனால் தான் அபராதம் விதிக்கவில்லை,”என்றார்.

தோனி ஒப்புதல்:
இப்பிரச்னை பற்றி இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,””இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் எப்போதுமே “டென்ஷனாக’ இருக்கும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், களத்தில் அனல் பறப்பது சகஜம். எனவே, வீரர்கள் திட்டிக் கொண்டார்களா என்று விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது,”என்றார்.
பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி கூறுகையில்,””அக்தர் மற்றும் ஹர்பஜன் நல்ல நண்பர்கள். அதனால் தான் நெருக்கமாக உரசிக் கொண்டனர்,”என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதற்கேற்ப, போட்டி முடிந்த பின் ஹர்பஜன் மற்றும் அக்தர் மிகவும் ஜாலியாக பேசிக் கொண்டனர்.

தேறுவாரா சேவக்?
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர் சேவக், தொடைப் பகுதியில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டார். இதனால், வரும் 24ம் தேதி நடக்க உள்ள இலங்கைக்கு எதிரான பைனலில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர் உடல்நலம் தேறாத பட்சத்தில், விராத் கோஹ்லி அல்லது ரோகித் சர்மா துவக்க Bactrim online வீரராக களமிறக்கப்படலாம். இது குறித்து இந்திய அணியின் மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,””சேவக் தற்போது “பிசியோதெரபிஸ்ட்’ மேற்பார்வையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவரது உடல்தகுதி பற்றி இன்று தான் தெரிய வரும். முதுகு வலியில் இருந்து நெஹ்ரா குணமடைந்து விட்டார்,”என்றார்.

Add Comment