அழகல்ல

அழகல்ல

ஜன் லோக்பால் மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் குறித்துக் கொள்ளுங்கள். அவர்களது வீடுகளுக்கு முன்னாள் முற்றுகைப் போராட்டம் நடத்துங்கள்.

இது, கடந்த வாரம், அன்னா ஹாசரே அவரது ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள செய்தி.

இது ஓர் ஆபத்தான அணுகுமுறை. ஜனநாயகத்தில் ஒருவர் ஒரு கருத்தை, யோசனையை முன் வைக்கலாம். அதற்கு ஆதரவு கோரிப் பிரச்சாரம் செய்யலாம். பாதையாத்திரைகள் சொல்லலாம். பேரணிகள் நடத்தலாம். ஏன் அதை ஆதரிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ அவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடுவார்கள் எனில், அவர்களைத் தோற்கடிக்கக் களம் இறங்கி வேலை செய்யலாம். ஆனால்-
அவர்கள் வீடுகள் முன் முற்றுகையிடுவது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது.

ஜனநாயகம் என்பதே பன்முகத் தன்மைக்கு, பல கருத்துக்களுக்கு, அந்தக் கருத்துக்குள் குறித்த விவாதகளுக்கு இடமளிப்பது. அதனால்தான் பல்வேறு மொழி, மத, இனங்கள் கொண்ட இந்தியாவிற்கு அதுவே ஏற்ற முறை.

ஆனால், தனது கருத்து ஒன்றே சரி, அதை மற்றவர் ஏற்க மறுத்தால் அவர்களை நிர்பந்திப்பது, அதற்காக அவர்கள் வீடு தேடிச் சென்று போராட்டம் நடத்துவது என்பதெல்லாம்-மென்மையான வார்த்தைகளில் சொன்னால்- அராஜகம் .

இன்னொரு புறம், நிலப்பறி வழக்கில் சிக்கியுள்ள தனது கட்சிக்காரர்களை மீட்க தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்டிருக்கிறார். தகவல் அறியும் சட்டத்தை குடிமக்கள் என்ற வகையில் பயன்படுத்த ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உண்டு. அந்தச் சட்டம் அரசின் செயல்பாடுகள் முறையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம். ஆனால் அதை கருணாநிதி, எதற்குப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறார். ?

தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளிடமும், காவதுரையினரிடமும் கேட்கும் கேள்விகள் அவர்கள் முதுகுத்தண்டை நடுங்கச் செய்யும் வகையில் இருக்க வேண்டும். அதன் மூலம் பெறப்படும் தகவல்கள் எதிர்காலத்தில் தங்கள் நிலை குறித்து அஞ்சக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அந்த அச்சமே ஒரு பாதுகாப்புக் கருவியாக அமையும் என அவர் தனது கட்சிக்காரர்களிடம் பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுருக்கமாகச் சொன்னால் அதிகாரிகளை அச்சுறுத்திப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளுமாறு அவர் யோசனை சொல்கிறார். அதற்குத் தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளச் சொல்கிறார்.

எவரும் buy Levitra online தங்கள் மீது கூறப்படும் புகார்களை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்வது, அதில் மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தால் அவற்றை மனித உரிமை ஆணையங்கள், நீதிமன்றங்கள் இவற்றின் கவனத்திற்கு கொண்டு சென்று தங்களது உரிமைகளை மீட்டுக் கொள்வது இவைதான் முறையான வழிமுறைகள். அதை விடுத்து தகவல் அறியும் சட்டத்தை அதிகாரிகளை மிரட்ட ஓர் ஆயுதமாக அரசியல்வாதிகள் பயன்ப்படுத்துவது ஆரோக்கியமான நடைமுறை அல்ல.

தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள மிரட்டலையும், அச்சுறுத்தலையும் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள் மூத்த தலைவர்களான அன்னா ஹாசரேயும், கருணாநிதியும்.

‘பிளாக்மெயில் பாலிடிக்ஸ்’ என்பது அவர்கள் வயதிற்கும் அனுபவத்திற்கும் அழகல்ல.

நன்றி – புதிய தலைமுறை

Add Comment