“ஜித்தா தமிழ் மன்றம்” நடத்திய “மாபெரும் கலக்கல் காமெடி” நிகழ்ச்சி

சவூதி அரேபியாவில் “ஜித்தா தமிழ் மன்றம்” நடத்திய “மாபெரும் கலக்கல் காமெடி” நிகழ்ச்சியில் ஏராளமான தமிழர்கள் கலந்துக்கொண்டனர்.

ஜூன் 18-ஆம் தேதி வெள்ளியன்று மாலை ஜித்தா ட்ரையோ ரான்ஞ்ச் கிளப் வளாகத்தில் நடந்த மாபெரும் கலக்கல் காமெடி நிகழ்ச்சியில் சன் டி. வி. “அசத்தப்போவது யாரு” புகழ் ‘கோவை’ குணா மற்றும் நிகழ்ச்சி இயக்குனர் த.ராஜ்குமார் இணைந்து வழங்கிய மாபெரும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குப்பின் திரு. பிரபு அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திரு. காசிம் ஷரீப் அவர்கள் ஜித்தா தமிழ் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் வாழ்த்துரை வழங்கும்போது, சில தினங்களுக்கு முன்பு நடத்திய குழந்தைகளுக்கான போட்டிகளை பட்டியலிட்டார். அதுபோல் நம் தமிழ் சமுதாயத்திலிருந்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் முதன்மை இடத்தை வகித்த மாணவ, மாணவிகளை அங்கீகரிக்கும் பொருட்டு அவர்களுக்கு மெடல், மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

அதனைத்தொடர்ந்து பேசிய ரியாத் தமிழ்ச்சங்க இணைச்செயலாளர் திரு. சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்கும்போது வந்திருக்கும் இவர்கள் சிரிப்பு வைத்தியர்கள் என்று புகழாரம் சூட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக வந்திருந்த கன்சுலார் ஹஜ்-II திரு. மூர்த்தி அவர்கள் பேசுகையில், இதுபோல் பல நல்ல நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஏற்பாடு செய்யவேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டார்களைக் கேட்டுக்கொண்டார்.

டைரக்டர் திரு. ராஜ்குமார் மற்றும் திரு. ‘கோவை’ குணா ஆகியவர்களை அறிமுகம் செய்து வைத்து திரு. ஜாஃபர் சாதிக் உரையாற்றினார்.

விழாவின் துவக்கத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெய்சங்கர், முதன்மை விருந்தினர் கன்சுலார் ஹஜ்-II திரு. மூர்த்தி, டைரக்டர் திரு. ராஜ்குமார், ‘கோவை’ குணா மற்றும் முதன்மை ஸ்பான்சர் சவூதி ஈ. டி. எ. குழுமத்தின் சார்பில் வருகைதந்த பொது மேலாளர் (கணக்கு) திரு. சீனி அலி ஆகியோர்களுக்கு ஜித்தா தமிழ் மன்றம் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர்களால் சந்தனமாலையும், நினைவுக்கேடயமும் வழங்கப்பட்டது.

சென்ற ஜூன் 11-ஆம் தேதி ஜித்தா F. G. சர்வதேச பள்ளியில் நடைப்பெற்ற ஓவியப்போட்டியில் குழந்தைகளான ஃபஹீமா, சுவாதி வர்ஷினி, ஷரீபா ஐனி ஆகியோருக்கு முதல் பரிசும்; அஸ்மா தவ்பீகா, முஹம்மது நபீல், விக்ரம் ரவி ஆகியோருக்கு இரண்டாம் பரிசும்; வருண் விஸ்வா, முஹம்மது மன்சூர், சநோபர் ஃபாத்திமா ஆகியோருக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. தனது முயற்சியை பாராட்டி, தான் மனதளவில் ஊனமில்லை என்று நிரூபித்த குழந்தை சமாஹ் அணிஷுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

அதுபோல் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் குழந்தைகளான சம்ரீன் சுலைமான், ஷெரின் சுலைமான் ஆகியோருக்கு முதல் பரிசும்; ஹசீப் அஹ்மத், சச்சின் குமார் ஆகியோருக்கு இரண்டாம் பரிசும்; முஹம்மது மன்சூர், ரெஹானா பானு ஆகியோருக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

மேடைபேச்சுப்போட்டியில் முதலிடம் வென்ற சநோபர் ஃபாத்திமா, இரண்டாம் இடத்தை வென்ற ரெஹானா பானு மற்றும் மூன்றாம் இடத்தை வென்ற ஃபஹீம் ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதுபோல் பத்தாம் வகுப்பில் முதலிடத்தை வென்ற ஜுமானா அபூபக்கர் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் பெற்ற ஸெஹ்நாஸ் ஆகியோர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வெற்றிப்பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் ஜித்தா தமிழ் மன்றம் சார்பில் தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை மெடல்கள் முதல், இரண்டாம், மற்றும் மூன்றாம் பரிசுகள் வெற்றிப்பெற்ற குழந்தைகளுக்கு முறையே வழங்கப்பட்டன. அத்துடன் பரிசுப் பொருள்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

திரைக்குப்பின் இருந்துக்கொண்டு அனைத்து நடிகர்களையும் ஆட்டிவைக்கும் டைரக்டர் ராஜ்குமார், அவ்வப்போது திரைக்குமுன் தோன்றினாலும், ஜித்தா மேடையில் தான் முழுக்க முழுக்க தோன்றி, ‘கோவை’ குணாவுடன் இணைந்து ‘அசத்தப்போவது யாரு’ கலக்கல் காமெடி நிகழ்ச்சியை வழங்கினார் எனபது மறுக்கமுடியாத உண்மை.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும், இடையிடையே தமிழ் பாடல்களும் அமைந்து இருந்தது.

பொழுதுப்போக்கு என்றால் எதுவென்று தெரியாத, கடின உழைப்பே கதியென்று இருந்து வரும் தமிழகத்தை சேர்ந்த பல்லாயிர தமிழர்கள் ஜித்தா துறைமுகத்தில் வேலை பார்த்துவருகின்றனர். முதன் முதலாக பங்குக்கொண்டு, இவர்கள் கடைசிவரை கண்டு ரசித்த நிகழ்ச்சியான இந்த மாபெரும் கலக்கல் காமெடி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜித்தா தமிழ் மன்றத்தினருக்கு தான் பெருமை அனைத்தும் போய் சேரும்.

முன்னதாக திருமதி. பானு ஹமீது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, Amoxil online இறுதியில் திரு. அன்புமணி அவர்கள் நன்றியுரை கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அன்னவர்களுக்கும் விழாக்குழுவினர்களால் அறுசுவை இரவு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், தூதரக அதிகாரிகள், தொழில் அதிபர்கள், நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஏராளமான குழந்தைகள் கலந்துக்கொண்டனர். இந்த விழாவை ‘ஜித்தா தமிழ் மன்றம்’ ஏற்பாடு செய்து இருந்தது.

செய்தி: மு. இ. முஹம்மது இபுறாஹீம் மரைக்கார்

Add Comment