அதிமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டும் விலகல்

சென்னை : அதிமுக கூட்டணியில் இருந்த மற்றொரு கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியேறியுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைக்கே அழைக்காததால் தேமுதிகவும், கேட்ட இடங்களை மட்டுமல்ல ஏற்கனவே வெற்றி பெற்றி இடங்களைக் கூட தராததால் மார்க்சிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் திடீரென்று வெளியேறின.

அதில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதாக அறிவித்தன. கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் விலகினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தது. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தைக் கூட்டி தினமும் ஆலோசனை நடத்தி வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களைக் கேட்டதோடு மேலும் பல இடங்களை கேட்டு வந்தனர்.

ஆனால், அவர்கள் கேட்ட இடங்களை அதிமுக தர மறுத்தது. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் பத்மாவதி தலைமையில் துறைமுகத்தில் உள்ள நாயக் பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் ஆர்.நல்லக் கண்ணு, மாநில செயலாளர் தா.பாண்டி யன், சி.மகேந்திரன், ஜி.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5 மணி வரை நீட்டித்தது.

கூட்டம் முடிந்த பின் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் குறித்து பல்வேறு அரசியல் சூழலில் அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். சட்டப் பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதற்காக அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி எடுத்து வெற்றியை பெற்றோம். அதே கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் நீடிக்கவேண்டும் என்று விரும்பினோம். இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தினோம். பின், இடது சாரிகளுக்காக பேச்சுவார்த்தை நடத்தினோம். பின் எங்களுக்காக, உரிய இடங்களை பெற அதிமுவுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்கவில்லை. தொகுதி பங்கீட்டில் உரிய பலன் அளிக்காததால் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுகிறோம். திருப்பூர் மாநகராட்சிக்கு ரவி என்கிற சுப்ரமணியம் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.

திருநெல்வேலிக்கு பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படுகிறார். 18 நகராட்சி, 48 பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எங்களை கூட்டணி குறித்து பேச தேமுதிக அழைத்துள்ளது. மார்க்சிஸ்ட், தேமுதிக மற்றும் இதர கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேசுவோம். தனித்து போட்டியிடுவோம் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் வெளியிட்டுள்ள பட்டியலை தேமுதிகவிடம் கொடுப்போம். ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம். தேமுதிக பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் செல்கிறோம்.

அதிமுகவில் எங்களுக்கு முறையாக அழைப்பு வந்ததால் பேச்சுவார்த்தைக்கு சென்றோம். இப்போது அமைந்துள்ளது புதிய அரசியல் கூட்டணி அல்ல. உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள அணி. 3வது அணி என்று விஜயகாந்த் சொல்லி இருந்தால் அது அவருடைய கருத்து. திருச்சி இடைத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து பின்னர் முடிவு Buy cheap Lasix செய்யப்படும், இவ்வாறு தா.பாண்டியன் கூறினார். அதிமுக கூட்டணியில் எஞ்சியிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியேறியுள்ளதால், அதிமுக சிறிய கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கிறது.

Add Comment