நாளை தொடங்குகிறது செம்மொழி மாநாடு-பிரதீபா பாட்டீல் இன்று கோவை வருகை

நாளை தொடங்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று கோயம்பத்தூர் வருகிறார்.

கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, நாளை தொடங்குகிறது. 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. கோவை மாநகரமும் புதுப் பொலிவுடன், விழாக் கோலம் பூண்டு மாநாட்டைக் காண தயாராகி விட்டது.

நாளை காலை 10.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி [^] தலைமை வகிக்க, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று மாலை டெல்லியிலிருந்து கிளம்பி இரவு 7.50 மணிக்கு கோவை வந்து சேருகிறார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்கின்றனர்.

அதன் பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசினர் விருந்தினர் மாளிகையில், அவர் தங்குகிறார்.

நாளை காலை கொடிசியா வளாகத்தில் உள்ள மாநாட்டு திடலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் முற்பகல் 11 மணிக்கு அவர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்குத் திரும்பி ஓய்வெடுக்கிறார்.

அதன் பின்னர் மாலை 4 மணிக்கு வ.உ.சி.மைதானத்திலிருந்து தொடங்கும் இனியவை நாற்பது என்ற பிரமாண்ட பேரணியை பார்வையிடுகிறார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து பேரணியை குடியரசுத் தலைவர் பார்வையிடுகிறார்.

பின்னர் அவர் விமான நிலையம்  சென்று அங்கிருந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

பிரதீபா பாட்டீல் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு வளாகத்தைப் பார்த்தார் முதல்வர்

இதற்கிடையே நேற்று முற்பகல் கோவை சென்று சேர்ந்த முதல்வர் கருணாநிதி இரவில் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்திற்கு வருகை Buy Viagra தந்தார். அங்கு செய்யப்பட்டுள்ள மேடை அலங்காரம், பந்தல் அமைப்பு, இருக்கை வசதிகள், உணவுக் கூடங்கள், ஆய்வரங்குகள் உள்ளிட்டவற்றைப் பார்த்தார்.

பின்னர் 12 டன் எடை கொண்ட கல்லால் ஆன கை வடிவ சின்னத்தை அவர் திறந்து வைத்தார். தொல்காப்பியர் ஆய்வரங்கத்திற்குச் சென்ற அவர் அங்குள்ள ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.

தமிழ் இணைய கண்காட்சி அரங்கம், பழங்கால பொருட்களுடன் கூடிய கண்காட்சி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜா மற்றும் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், டிஜிபி லத்திகா சரண், மாவட்ட ஆட்சித் தலைவர் உமாநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Add Comment