உள்ளாட்சி தேர்தலில் ம.ம.க. தனித்துப்போட்டி ஏன்?

சமுதாய கண்மணிகளே…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமாடும் இத்தருணத்தில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். திடீரென ஏன் இந்தமுடிவு? இதற்குப் பின்னணி என்ன? என்பதை விளக்க விரும்புகிறேன்.

ஒரே இடத்தில் தண்ணீர் தேங்கினால் அதில் அழுக்குகளும், பாசிகளும் சேர்ந்திடும். ஓடிக் கொண்டேயிருக்கும் தண்ணீர்தான் தூய்மையானதாக இருக்கும் என்பது அறிவியல் உண்மையாகும். எனவே அரசியலில் எல்லோரும் ஓட்டப்பந்தயத்தில் வேகம் காட்டும்போது, நாம் சக்கர நாற்காலியோடு முடங்கிப் போய் விடமுடியாது. அரசியலில் யாரும், எப்போதும் ஒரே இடத்தில் ஒரே நிலையில் இருக்க முடியாது என்பது உண்மை. அதுவும் ஜனநாயகத்தில் ஆட்சியும், கூட்டணிகளும், தலைமைப் பதவிகளும் மாறிக் கொண்டேயிருக்கும். இதை யாரும் குறை சொல்ல முடியாது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகவும் பலகீனமான நிலையில் அ.இ.அதிமுகவின் அரசியல் களம் இருந்தது. அப்போது செல்வி.ஜெயலலிதா அவர்கள் அதிமுக சார்பில் மனிதநேய மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். ஒன்றல்ல. இரண்டுமுறை!

இச்சூழலில்தான், ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஒரே பொதுநோக்கில் அதிமுகவின் அழைப்பை ஏற்று மமக, ஜெயலலிதாவை சந்தித்து, அக்கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்தது. பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் என அடுத்தடுத்த கட்சிகள் கூட்டணிக்குள் வந்தன. கூட்டணிக் கட்சிகளை மிகுந்த மரியாதையுடன் ஜெயலலிதா நடத்தினார். புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னனி கழகம் என கூட்டணி பலம் பெற்றது.

திமுகவின் ஊழல், குடும்ப சர்வாதிகாரம், ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் கோபமும், வலுவான கூட்டணியும் அதிமுக அணியை வெற்றிபெற வைத்தது. இதே கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடர வேண்டும் என அனைவரும் விரும்பினர். ஆனால், கூட்டணிக் கட்சிகள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் 10 மேயர் பதவிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இது குறித்து அதிமுக தலைமையிடம் கேட்டபோது, எப்போதும் எங்கள் விருப்பத்திற்கேற்ப முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதும், பிறகு கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களை ஏற்று, அதில் பலவற்றை வாபஸ் பெற்று, அனைவருக்கும் ஏற்புடைய புதிய பட்டியலை வெளியிடுவதும் சகஜம் என்று விளக்கமளித்தனர்.

நமது சார்பில் மமக பொதுச்செயலாளர் பி.அப்துல் சமது, பொருளாளர் ஹாரூண் ரஷீது ஆகியோர் கொண்ட இருவர் குழு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், விஸ்வநாதன் ஆகிய மூவர் குழு அதிமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியது.

முதல் பேச்சுவார்த்தையில் மமக சார்பில் கேட்கும் இடங்கள் அவர்களிடம் அளிக்கப்பட்டது. முதல் பட்டியலை முதல் சுற்றில் அளித்தப்போது 2 துணை மேயர்களையும், 4 நகராட்சி துணைத் தலைவர்களையும், 7 பேரூராட்சி துணைத் தலைவர் களையும் தவிர்க்குமாறும், அதை தேர்தலுக்குப் பிறகு பேசுமாறும் அதிமுக குழு கேட்டுக் கொண்டது. மற்றவற்றை பரிசீலிக்கலாம் என்றனர்.

மூன்று சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு இறுதியாக மொத்த பட்டியலிலிருந்து 50 சதவீத இடங்களை; அதாவது பாதிக்குப்பாதி குறைத்துக் கொண்டு இறுதிப்பட்டியலை ம.ம.க அளித்தது. மாநகராட்சி துணைமேயர் 2, நகராட்சி துணைத் தலைவர் 4, பேரூராட்சி துணைத் தலைவர் 7 ஆகியவற்றை தேர்தலுக்குப் பிறகு பேசிக்கொள்வது என்பதாலும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை மாவட்ட அளவில் பேசிக்கொள்வது என்பதாலும் கடைசிப் பட்டியலில் இவை அனைத்தையும் தவிர்த்து விட்டு குறைவான மற்றொரு பட்டியலைக் கொடுத்தோம்.

அதன் பிறகு அதிமுக தரப்பிலிருந்து வந்த தகவல்கள் திருப்திகரமாக இல்லை. நாம் கடைசியாக கொடுத்த பட்டியலி லிருந்து 30 சதவீத இடங்களைக் கூட அவர்கள் தரத் தயாராக இல்லை என்பதை யூகிக்க முடிந்தது.

இந்நிலையில் மமகவின் அவசர உயர்நிலைக்குழு கூட்டம், தலைமையில் கூடியது.

• கூட்டணியில் தொடர்வதா?
• தனித்து போட்டியிடுவதா?
• புதிய கூட்டணியில் இணைவதா?
• தொண்டர்களின் மனநிலை?
• சமுதாய மக்களின் உணர்வுகள்
• தனித்து போட்டியிடுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள். இவை அனைத்தும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சமுதாய மக்களின் அரசியல் எதிர்பார்ப்பையும், வெற்றிடத்தையும் நிரப்புவதற்காகவே கட்சியைத் தொடங்கினோம். தனிச் சின்னம், சட்டமன்றத்தில் கூடுதல் தொகுதிகள், நாடாளுமன்றத்தில் உரிய பங்கீடு, உள்ளாட்சிகளில் அதிக இடங்கள் ஆகியவை சிறுபான்மை மக்களின் விருப்பங்களாக இருக்கிறது.

இந்நிலையில்தான் அதிமுக நமது பட்டியலை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதையும், அதை நிராகரித்து பகிரங்கமாக வெளிப்படுத்தும் துணிச்சலும் அதற்கு இல்லை என்பதையும் புரிந்துக் கொண்டோம்.

இதற்கு பிறகு முதல் வேட்பாளர் பட்டியலை நமது இணையதளத்தில் வெளியிட்டோம். சிறுபான்மை மக்கள் அதிக அளவில் உள்ளாட்சி அதிகாரங்களில் அமர வேண்டும் என்பதற்காகவே நாம் பொறுமை காத்தோம். பெரிய களமான நாடாளுமன்றத் தேர்தலையே தனித்து களம் கண்டவர்கள் நாம்! தனித்து அதேபோன்ற லட்சியத்துக்காக துணிச்சலுடன் மீண்டும் களம் காண்கிறோம்.

தேமுதிக, சி.பி.எம், சி.பி.ஐ. அணியுடன் கூட்டணி வைக்கலாமே என்று பலரும் கேட்கிறார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்தால் அங்கு ஒதுக்கப்படும் இடங்களை விட அதிக இடங்களை மமக தனித்துப் போட்டியிட்டே வெல்லும் (இன்ஷா அல்லாஹ்…)

ஏற்கனவே உள்ளாட்சி இடைத்தேர்தலில் தென்காசி நகராட்சியிலும், லால்பேட்டை பேரூராட்சிகளிலும் தனித்து நின்று ஆளுங்கட்சியை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய அனுபவம் நமக்குண்டு! வழக்கம்போல் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளையும், இடையூறுகளையும், எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் எதிர்த்து நிற்போம்.

கண்மணிகளே…!

தனித்துப் போட்டியிடுவதில் பல பெரும் நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது. நிறைய இடங்களில் நமது வேட்பாளர் களை களமிறக்க முடிந்துள்ளது. ஒருவேளை இம்முடிவு மூன்று நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டிருந்தால், மூன்று மடங்கு கூடுதல் இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்க முடியும்! என்ன செய்வது; எது எப்போது நடக்கும் என தீர்மானிக்கப்பட்டதோ; அது அப்போதுதான் நடக்கும் என்பது தானே இறை நம்பிக்கையாளர்களின் எண்ணமாக இருக்க முடியும்!

அதுமட்டுமல்ல, பல ஊர்களில் ஓட்டுகள் பிரிந்து ஜமாத்துகளின் ஆதரவு பெற்றவர்கள் தோற்றுவிடக்கூடாது என்பதால்; ஜமாத்துகளின் வேண்டுகோளை ஏற்று பல இடங்களில் நமது வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். கோவையில் ஐக்கிய ஜமாத் சார்பில் மேயர் பதவிக்கு பொது வேட்பாளர் அமீர் அல்தாப் நிறுத்தப்பட்டுள்ளார்.அங்கே அவர்களுக்கு ஆதரவளித்துள்ளோம். மதுரையில் முஸ்லிம் லீக் நிறுத்தியுள்ள மேயருக்கு ஆதரவு அளித்துள்ளோம். அதேபோல் அவர்கள் சேலத்தில் நமக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். இதுவெல்லாம் நல்ல நிகழ்வுகளாகும். உள்ளாட்சித் தேர்தலில் எங்கெல்லாம் ஒற்றுமை யான சூழலை ஏற்படுத்த முடியுமோ, அங்கெல்லாம் அதற்கு துணை நின்றுள்ளோம்.

முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் ஐக்கிய ஜமாத் பொதுவேட்பாளரை நிறுத்தினால், மமக வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என கூறினோம். அங்கெல்லாம் உரிய முயற்சிகள் எடுக்கப்படாததால், இதுபோன்ற இடங்களில் நமது வேட்பாளர்கள் உறுதியாக களம் புகுந்துள்ளனர். இதில் மகிழ்ச்சித் தரத்தக்க விஷயம் என்னவெனில் நாம் கூத்தாநல்லூர் நகராட்சியில் திருவாரூர் மாவட்ட மமக துணைச்செயலாளர் வழக்கறிஞர் பிரபுதாஸை சேர்மன் பதவிக்கு நிறுத்தியுள்ளோம் என்பதுதான்.

தஞ்சை(வ) மாவட்ட மமக துணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணனை சோழபுரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கும், கடலூர்(தெ) மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் அவர்களை ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், காட்டுமன்னார்குடி பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு என்ஜினியர் விமல்ராஜ் அவர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம்.

இப்படி பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள்; நமது கட்சியை நம்பி வந்தவர்கள்; என அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கி கண்ணியப்படுத்தியுள்ளோம். அதுபோல் பெண்கள் பகுதிகளுக்கு போட்டியிட 73 சகோதரிகளுக்கு வாய்ப்புகளை வழங்கி; பாதுகாப்பான; கண்ணியமான பிரச்சார முறைகளையும் அவர்களுக்காகவே ஏற்படுத்தியிருக்கிறோம்.

கண்மணிகளே….

பல இடங்களில் ஒரே வார்டில் அல்லது ஒரே பதவிக்கு போட்டியிட ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் ஒருவரைத்தான் தேர்வு செய்ய முடியும் என்ற நிலை வந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! காரணம், வடிகட்டி பார்த்தாலும் ஒருவரின் தியாகங்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதிலே வாய்ப்பு பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் என்றோ; வாய்ப்பு கிடைக்காதவர்கள் தகுதி குறைந்தவர்கள் என்றோ; கருதிவிடக்கூடாது. இப்போது ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்றவர்களுக்கு அடுத்தமுறை வாய்ப்பு கிடைக்கும் அல்லது இதைவிட சிறந்த மற்றொரு வாய்ப்பு உண்டாகும் என்பதை உளப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

கண்மணிகளே…

எதிர்வரும் அக்17 மற்றும் 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களில் களமாட; கொள் ளைக் கூட்டம் அதிர; நமது கொள்கைக் கூட்டம் புறப்படட்டும்!

களத்திலே ஒன்றுபட்டு பணியாற்றினால் தான் வெற்றி கனிகளைப் பறிக்க முடியும்! கருத்து வேறுபாடுகளை மறந்து; வாய்ப்பு கிடைத்தவர்களும், கிடைக்காதவர்களும்; நாம் ஒரு தாய் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தினால்; தனித்தனியாக பிறந்தவர்கள்; என்ற மனநிலையில் உறுதியாக நின்று பணியாற்ற வேண்டும். நிர்வாக ரீதியாக உள்ள பிணக்குகளை; நேச முரண் பாடுகளை; செல்லச் Buy cheap Cialis சண்டைகளை குழியில் போட்டு புதைத்து; அதில் வெற்றி விதைகளைத் தூவுங்கள்!

“ஊழலற்ற உள்ளாட்சி – அதுவே, மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி” என்ற அரசியல் முழக்கத்துடன் உள்ளாட்சிகளை வெல்லுவோம்! நல்லாட்சியை துவக்குவோம்! இன்ஷா அல்லாஹ்..

அன்புடன்
ஜவாஹிருல்லாஹ்

Add Comment