இஸ்லாமிய இலக்கியக் கழக மாநாட்டில் நடைபெற்ற கவியரங்கின் வரவேற்புக் கவிதை : வாசித்தவர் கடையநல்லூர் பீ. எம். கமால் )

02-10-2011 அன்று தென்காசி இசக்கி மகாலில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கியக் கழக Viagra online மாநாட்டில் நடைபெற்ற கவியரங்கின் வரவேற்புக் கவிதை : வாசித்தவர் கடையநல்லூர் பீ. எம். கமால் )

இறைவா
மூல எழுத்தாளனே !
உன்
துளிச்சத்தின்
வெளிச்சத்தால்
ஒளிச்சத்து சேர்த்து
உருவான உனது
எழுதுகோல் எழுதிய
எழுத்துக்கள் அல்லவா
நாங்கள் ?
மழை
தண்ணீர் வாக்கியத்தை
தரையில் எழுதுகின்ற
எழுதுகோல் !
தண்ணீர்-
பயிர்களைப் பூமியில்
பதியம்போடும் எழுதுகோல் !
மரங்கள்-
காற்றை கைவீசி
ககனத்தில் எழுதுகின்ற
எழுதுகோல் !
பெருமானார் நாயகம்
பேரிறையின் எழுதுகோல் !
அந்த
வாசிக்கத் தெரியாத
எழுதுகோல்தான்
நம்மையும் நாயனையும்
வாசிக்கவும்
யோசிக்கவும் கற்றுத்தந்தது !
அந்த எழுதுகோலுக்கு
இந்தக் களிமண்
முகமன் கூறி
முன் நிற்கிறது
இறைவா!
களிமண்ணால் எங்களை உன்
கலிபாவாய் பிரபஞ்சத்
தாளில்எழுதி நீ
தலை பணிய
வைத்துள்ளாய் !
இறைவா !
ஏந்தல் நபிகள் என்னும்
எழுதுகோல் கொண்டேழு
உலகத்தைஎழுதி
உவகை கொண்டவன் நீ !
நீ-
கோள் படைத்தாய்; எழுது
கோல் படைத்தாய் !புனித
நூல் படைத்தாய்; எங்களிடம்
ஒப்படைத்தாய் உயர்வதற்கு !

நேர்வழியில் நபியின்
நூர்வழியில் பரந்த
பார்வெளியில் நாங்கள்
பாவம் தவிர்த்திடப்
பரம்பொருளே ! நீ
அருள் பாலித்தாய் !
எல்லாப் புகழும்
இறைவா உனக்கேயாம் !

எங்கள் எழுதுகோலில்
மை தீர்ந்துபோனால்
மண்ணில் எறிந்துவிடுவோம் !
உன் எழுதுகோலை
மதீனத்து மண் கூட்டில்
முக்கி வைத்திருக்கிறாய்
இன்னொரு உலகை
எழுதுவதற்கோ ?
மக்கத்து எழுதுகோலால்
மன்பதையை எழுதிய
மூலஎழுத்தாளனே !
எல்லாப் புகழும்
இறவாத உனக்கேயாம் !

எரிஈட்டிக் கவிதைகளால்
நெறியூட்டி இஸ்லாத்தின்
வெறியூட்டித் தமிழ்பாடி
வீறுநடை போட்டுவந்த
சிலேடைக் கவிஞர்
சிராஜ் அப்துல்ஹை
சிங்கார அரங்கத்தில்
தீன்மதுரத் தமிழோசை
திசையெல்லாம் கேட்பதற்கு
திரண்டிருக்கும் சான்றோரே
வருக வருக !!
வான்மறைத்தேன்
கலந்து தமிழ்க்
கவிதை வழங்குதற்கு
வந்திருக்கும் கவிஞர்களே
வருக வருக !!
இஸ்லாமியத் தமிழ்க்கடலில்
இலக்கிய மத்துகொண்டு
அறிவமுதம் கடைவதற்கு
ஆர்வமுடன் வந்திருக்கும்
சிங்கை மலேசியா
ஸ்ரீலங்கா நாடுகளின்
அங்கத்தவர்களே
வருக வருக !!
இலக்கியங்கள் படைத்ததாலோ
இனியதமிழ்க் கவிதைகள்
எழுதியதாலோ
உயர்தமிழ் மொழியோடு நாங்கள்
உறவுகொன் டாடவில்லை !
கல்தோன்றி
மண்தோன்றாக்
காலத்தே வாளொடு
முன் தோன்றிய
மூத்த குடி
நாங்கள் தான் !
இறைவனின் வழியையும்
இன்பத்தமிழ் மொழியையும்
ஆதம்நபி அல்லவா
ஆரம்பித்து வைத்தார்கள் ?
ஆகவே –
மூத்தகுடி நாங்கள்
மொழிந்த மொழி
தமிழாகும் !
தேயத் தமிழ்மொழியை
தெருவினிலே விட்டவர்கள்
தூய தமிழ்பேசும்
துலுக்கனையா கேலிசெய்வீர் ?
நாங்கள்
அரபுத்தமிழ் வடிவத்தை
அழகிய எழுத்தாக்கி
மரபுக் கொட்டடியில்
மாட்டிவைத்த மறவர்கள் !
செபபருன்க் காவியமும்
சிந்தைநிறை சீறாவும்
ஒப்பரும் பிள்ளைத் தமிழ்
உலகிற்குத் தந்தவர்கள் !
ஊடகங்கள் இங்கே
உளறுவது போலதமிழை
உச்சரித்து அறியாத
உயர்குடிப் பிறந்தவர்கள் !
ஏனமும் ஆணமும்
எங்கள்செந் தமிழாகும் !
தொழுகை பள்ளிவாசல்
தோன்றியது எங்களிடம்தான் !
அவிய இவிய எல்லாம்
ஆகாது எங்களுக்கு
செவியில் செந்தேனை
சேர்த்துவிடும் எங்கள் தமிழ் !

ஆதிமனிதன் செய்ய
மண் குழைத்த போதே
தண்ணீரோடு கொஞ்சம்
தமிழும் குழைத்ததினால்
ஆதிமனி தன் ஆதாம்
ஓதி உச்சரித்தது
எங்கள் தமிழ் !
நாங்கள்
சங்கத் தமிழுக்குச்
சரிநிக ராகவெங்கள்
தங்கத் தமிழ்மொழியின்
சாகரத்தில் குளித்தவர்கள் !
செம்மொழித் தமிழைஎங்கள்
சிந்தையினில் உரமாக்கி
எம்மொழிக்கும் இல்லாத
ஏற்றத்தை தந்தவர்கள் !
இஸ்லாமியர்கள்
யாருக்கும் இங்கே
இளைத்தவர்கள் இல்லைதமிழ்
பாருக்குச் சொன்ன
பரம்பரையில்
வந்தவர்கள் !
கவிஞர்களே ! உங்கள்
எழுகோல்கள் அம்புகளாகட்டும்
அகிலத்தைப் புரட்டிப் போடும்
நெம்புகோ லாகட்டும் !
காதலைப் பாடியது
போதும் கவிஞர்களே !
காலத்தைப் பாடுங்கள்;
இஸ்லாத்தின் தற்காலக்
கோலத்தைப் பாடுங்கள் !
இனிய தமிழுக்கும்
இஸ்லாத்திற்கும்
இருக்கின்ற உறவுப்
பாலத்தைப் பாடுங்கள் !
உங்கள் எழுதுகோல்கள்
இதய நிலங்களைப்
பண்படுத்தி உழுகின்ற
ஏர் களாக மாறட்டும் !

எழுதுகோல்கள்
பழுது கோலானால்
விழுதுகளாய் எழுத்துக்கள்
விளங்காது ஒருபோதும் !
கவிஞர்களே ! உங்கள்
வீரிய எழுத்துக்களில்
மின்மினிகளை அல்ல
சூரியனை மட்டுமே
சூல்கொள்ளச் செய்யுங்கள் !
அப்போதுதான்
வெளிச்ச விடியல் எங்களுக்கு
விருந்தாக கிடைக்கும் !
வீ ரனின் கைவாளை
விடப் பெரிது எழுதுகோல்கள்
கவிஞர்களே !
உங்கள் எழுதுகோல்கள்
ஆட்சியாளர்களுக்கு
சாமரமாய் ஆகாமல்
சத்தியத்தைச் சொல்லுகின்ற
சம்மட்டியாய் மாறட்டும் !
கவிஞர்களே !
உங்கள் எழுதுகோல்கள்
எழுதும் போது மட்டுமே
குனியட்டும் தலை !
மற்ற நேரங்களில்
தீச் சுடராகவே
தெரியட்டும் !
அறிவின் தலைவாயில்
அலிஎன்பார்; இங்கே
அறிவின் நுழைவாயில்
செவி என்ற காரணத்தால்
செவிதானம் செய்து
கவியமுதம் பெறுவதற்கு
காத்திருக்கும் அனைவரையும்
கனிவுடன்வர வேற்கின்றேன்
இங்கே
கவிமழை பொழிவதற்கு
கார்மேகத்தோடு அல்ல
தாள்மேகத்தோடு
ததும்பி வந்த கவிஞர்களே !
கன்னல் தமிழில்
கவிகொண்டு வந்தோரே !
உங்கள்
மின்னல் எழுத்துக்களால்
மேதினியின் அகலில் தீன்
ஒளியேற்றி திரி எரியச்
செய்திடவே வாருங்கள் !

வந்திருக்கும் அனைவரையும்
வரவேற்று மகிழ்கின்றேன்
பந்திருக்கும் காற்றுப்போல்
பத்திரமாய் உள்ளிருந்து
கைதட்டி உங்கள்
கவனத்தைத் தாருங்கள் !

Add Comment