நெல்லை மாவட்டத்தை கலக்கிய 3 கொள்ளையர் கைது : 76 பவுன் தங்க நகைகள் மீட்பு

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் தங்கச்செயின் பறிப்பு, கூட்டுறவு பாங்க் கொள்ளை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 76 பவுன் தங்கநகைகள், கார் கைப்பற்றப்பட்டது. நெல்லையில் ரோட்டில் தனியே நடந்து செல்லும் பெண்களிடம் தங்கச்செயின்களை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இச்சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் வரதராஜூ, குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயபாலன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பர்ணபாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் குருபாதம், Bactrim online பால்கனி, மாடசாமி, பிரான்சிஸ், ஏட்டுகள் மேகநாதன், ஆரோக்கியம் உள்ளிட்ட தனிப்படையினர் செயின்பறிப்பு சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சென்னை அருகே போரூரில் பதுங்கியிருந்த வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்த ராஜகோபால்(32), அவர் தம்பி முத்து(30), உறவினர் ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்துவிடம்(27) போலீசார் விசாரணை நடத்தினர். ராஜகோபால் பாளை. கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகரில், இசக்கிமுத்து சென்னை நெற்குன்றம் சக்திநகரில், முத்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தனர்.

கடந்த ஒரு ஆண்டாக நெல்லை மாநகரம் பெருமாள்புரம், தியாகராஜநகர், என்.ஜி.ஓ., காலனி, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓய்வு பெற்ற பெண் அதிகாரி வாசகம், மலர்க்கொடி, கிறிஸ்டல்சாந்தி உள்ளிட்ட பெண்களிடம் தங்கச்செயின்கள் பறிக்கப்பட்ட சம்பவங்களில் மூவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர். கொள்ளையடித்த தங்கச்செயின்களை ஸ்ரீபெரும்புதூர் தனியார் பைனான்ஸ், பாங்கில் மூவரும் அடகு வைத்துள்ளனர். மூவரும் அளித்த தகவல்களின்படி சுமார் 76 பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்டது. ஒரு கார், காஸ் சிலிண்டர் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய். பாங்க் அடமானத்தில் உள்ள மேலும் 19 பவுன் தங்கநகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

“செட்டில்’ ஆக அதிரடி திட்டம்

தொடர்ந்து பெண்களிடம் செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மூவரும் ஒரே முறையில் பெரும் தொகையை கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக ஆக திட்டமிட்டனர். கடலூர் – சென்னை பைபாஸ் ரோட்டில் ராமநத்தம் சர்வீஸ் ரோட்டில் பாங்க் ஏ.டி.எம்.,மை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து திசையன்விளை அருகே கஸ்தூரிரெங்கபுரம் கூட்டுறவு பாங்க் லாக்கரை உடைக்க காரில் காஸ், வெல்டிங் உபகரணங்களுடன் சென்றனர். அலாரத்தை துண்டித்துவிட்டு லாக்கரை உடைக்க முயற்சி செய்த போது மற்றொரு அலாரம் சத்தமிட்டதால் கொள்ளை முயற்சியை கைவிட்டு இவர்கள் “எஸ்கேப்’ ஆனது விசாரணையில் தெரியவந்தது.

16 வழக்குகள்

கமிஷனர் வரதராஜூ கூறும்போது, “”கைது செய்யப்பட்ட மூவர் மீது மாநகரத்தில் 6, வள்ளியூரில் 4, திசையன்விளையில் 1, பாங்க் கொள்ளை முயற்சி 1, கடலூரில் 1 என 16 செயின்பறிப்பு, பாங்க் கொள்ளை முயற்சி வழக்குகள் உள்ளன. கொள்ளையடித்ததும் நகைகளை உடனுக்குடன் பாங்கில் அடகு வைத்ததால் நகைகள் சேதமின்றி மீட்கப்பட்டுள்ளன. இவர்களின் கூட்டாளிகள் உறுமன்குளத்தை சேர்ந்த குமார், தனுஷ், மணிகண்டன், இசக்கி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 10.5 பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளது. நெல்லையில் செயின்பறிப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாளை. யில் கணவன், மனைவியை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், கோடீஸ்வரன் நகர் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலங்கிவருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்” என்றார்.

“நம்பர்’ பிளேட் மூலம் சிக்கிய கொள்ளையர்கள்

* நெல்லையில் பைக் கொள்ளையர்களிடம் தங்கச்செயின்களை பறி கொடுத்த பல பெண்கள் பைக்கின் நம்பர் பிளேட்டில் இருந்த இரு எழுத்துக்கள் குறித்து போலீசாரிடம் கூறினர். பல சம்பவங்களில் ஒரே மாதிரியாக “இரு எழுத்து நம்பர் பிளேட்’ பைக் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த நம்பர் பிளேட் குறித்து போலீசார் விசாரணையை துவக்க… கொள்ளையர்கள் சிக்கினர்.

* கைது செய்யப்பட்ட ராஜகோபால் 9ம்வகுப்பு, அவர் தம்பி முத்து 7ம்வகுப்பு வரை படித்தவர்கள். ராஜகோபால் குடும்பத்தினர் சென்னை அருகே ஒரகடத்தில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ராஜகோபால், தன் தம்பியுடன் சேர்ந்து தனக்கு பழக்கமான நெல்லை மாவட்டத்தில் பெண்களிடம் செயின்பறிப்புச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். போலீசாரிடம் சிக்காததால் செயின்பறிப்பை தொடர்ந்து செய்துவந்தனர்.
* செயின்பறிப்பு, பாங்க் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் முன்பு சுற்றுப்பகுதியை நன்கு நோட்டமிடுவதை ராஜகோபால் வழக்கமாக வைத்திருந்தார். இசக்கிமுத்து அல்லது முத்து பைக்கை ஓட்டுவர். ராஜகோபால் ரோட்டில் நடந்து சென்று எதிரே வரும் பெண்ணிடம் செயினை பறித்துவிட்டு பைக்கில் ஏறி தப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் மூவரும் “டிப்டாப்’ உடையில் வலம் வந்துள்ளனர். செயின்பறிப்பை அரங்கேற்ற ஒரு நாள் சுமார் 200 கி.மீ., தூரம் ராஜகோபால் பைக்கில் சுற்றித்திரிந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

Add Comment