மக்கள் நல பணியாளர்களை தமிழக அரசு பந்தாடுவதா?

சென்னை : மக்கள் நலப்பணியாளர்கள் 13500 பேரை தமிழக அரசு அண்மையில் டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதை நீதிபதி சுகுணா விசாரித்து, அரசு உத்தரவுக்கு  Buy Cialis இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை நீட்டிப்பதாக நீதிபதி சுகுணா அறிவித்தார். அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த ஆட்சியில் எந்த விதிமுறையும் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டனர். இதில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வில்லை. இதன் காரணமாகத்தான் அவர்களை அரசு பணிநீக்கம் செய்தது. இந்த உத்தரவுக்கு தனிநீதிபதி தடைவிதித்தது சட்டவிரோதமானது. இது தவிர உடனடியாக அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் நேற்று விசாரித்தனர். தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், முன்னாள் அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரன் ஆகியோர் ஆஜராகி மக்கள் நலப்பணியாளர்கள் தற்காலிக பணியாளர்கள். எனவே அவர்களுக்கு  மீண்டும் வேலை வழங்க நீதிபதி சுகுணாபிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

இதை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம். நீதிபதி சுகுணா இந்த வழக்கை விரிவாக விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும். ஒவ்வொரு முறையும் உதைத்து விளையாட மக்கள் நல பணியாளர்கள் ஒன்றும் கால்பந்து அல்ல. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மக்கள் நல பணியாளர்களை நீக்குவது சட்டவிரோதமானது; கண்டிக்கத்தக்கது. கடந்த 1990ம் ஆண்டு மக்கள் நல பணியாளர்கள் மாதம் ரூ.200 சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.

பின்னர் ஆட்சி 1991ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அவர்கள் பணி நீக்கப்பட்டனர். அதை தொடர்ந்து 97ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவர்களுக்கு மாதம் ஸீ 500 சம்பளம் வீதம் மீண்டும் பணி வழங்கப்பட்டது. 2001ம் ஆண்டு ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் நீக்கப்பட்டனர். 2006ல் அடுத்து வந்த ஆட்சியில் மாதம் ரூ.ஆயிரம் சம்பளத்தில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். தற்போது மீண்டும் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்காலிக பணியாளர்கள் என்றாலும் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளனர். ஒரு கையெழுத்தில் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியிருந்தால் நீதியின் கொள்கை படியும் சட்டப்படியும் அவர்களை நீக்கும் முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அரசு கருத்து கேட்கவில்லை. இதை கருத்தில் கொண்டு தான் தனி நீதிபதி சுகுணா இந்த வழக்கில் தடை உத்தரவை சரியாக பிறப்பித்துள்ளார். அதை நீக்க முடியாது. மக்கள் நல பணி யாளர்களின் நிலையை பார்க்கும்போது, கால்பந்து விளையாட்டுபோல் உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் நிர்ணயம் செய்து ஒருவருக்கு அரசு பணி வழங்கிய பிறகு, சரியான காரணம் இல்லாமல் அவரை நீக்குவது சட்டவிரோதமானது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசு மாறும்போது மாறி மாறி உத்தரவு பிறப்பிப்பது கடும் கண்டனத்துக்குரியது. வேதனையானது. வருந்தத்தக்கது. எனவே அரசு கோரிக்கையை நிராகரிக்கிறோம். கடந்த ஆட்சியின் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் அந்த ஊழியர்களை வேறு பணியில் அமர்த்த வேண்டும்.

அதை விட்டு விட்டு அவர்களை டிஸ்மிஸ் செய்வது தவறு. இது எந்த விதத்தில் நியாயமானது?. இது அரசியல் சார்புடையது என்பது தெரியும். இருந்தாலும் அதற்குள் நாங்கள் தலையிட விரும்பவில்லை. நாங்கள் இந்த வழக்கில் கூறும் கருத்துக்கள் தனி நீதிபதியிடம் உள்ள வழக்கில் எந்த பாதி ப்பையும் ஏற்படுத்தாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதை தொடர்ந்து அட்வகேட் ஜெனரல் எழுந்து, ‘‘மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வழங்கிவிட்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று  நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். இந்த மேல்முறையீடு மனு காரணமாக அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது’’ என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், ‘‘அரசு அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்தால் இந்த வழக்கில் தடை விதித்தது போலாகிவிடும். எனவே இதுகுறித்து உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதியிடம் முறையிடுங்கள்’’ என்றார்.

Add Comment