ரூ.7,800 கோடி செலவில் சென்னை – பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை

சென்னையிலிருந்து பெங்களூருக்கு தற்போதுள்ள சாலைகளை தவிர புதிதாக மேலும் ஒரு விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது. இருபுறமும் வேலியுடன், இந்த எக்ஸ்பிரஸ் நான்குவழி சாலை அமைப்பதற்காக மொத்தம் ரூ.7,800 கோடி வரை செலவிடப்படவுள்ளது. இந்த சாலை அமைந்தால் சென்னையிலிருந்து பெங்களூருக்கு சாலை மார்க்கமாக இரண்டரை மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையிலான போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் மேலும் ஒரு திட்டமாக சென்னை – பெங்களூரு “எக்ஸ்பிரஸ் ஹைவே’ அமைக்கப்படவுள்ளது. இந்தியா முழுவதுமாக இதே போல் நான்கு இடங்களில் அமைக்கப்படவுள்ள இந்த எக்ஸ்பிரஸ் ஹைவே திட்டம், மத்திய தேசிய நெடுஞ்சாலை அதிகார ஆணையம் சார்பில் நிறைவேற்றப்படவுள்ளது. சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையில் ஒரு ஹைவேயும், மும்பைக்கும், குஜராத்தில் உள்ள வதேராவுக்கும் இடையில் ஒரு ஹைவேயும், கோல்கட்டாவுக்கும், பீகாரில் உள்ள தன்பாத்துக்கும் இடையில் ஒரு ஹைவேயும், டில்லிக்கும், சண்டிகாருக்கும் இடையில் ஒரு ஹைவேயும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற சாலைகளைப் போல அல்லாமல், இந்த சாலையின் இருபுறங்களிலும் வேலி அமைக்கப்படும். வேறு எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல், கிளம்பிய இடத்திலிருந்து போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் இந்த சாலைகள் இருக்கும். இவை அனைத்துமே நான்கு வழிச் Buy Cialis சாலைகளாக அமைக்கப்படவுள்ளன.

சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள இந்த எக்ஸ்பிரஸ் சாலைக்கான அனைத்து முதற்கட்ட ஆய்வுப்பணிகளும் முடிவடைந்துவிட்டன. தற்போது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறிக்கை தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சாலைக்காக இரு வேறு மார்க்கங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், சென்னையிலிருந்து சித்தூர்,கோலார் வழியாக பெங்களூருக்கு ஒரு மார்க்கம் உள்ளது. சென்னையிலிருந்து வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு மற்றொரு மார்க்கமும் உள்ளது. இந்த இரு சாலைகளையும் தவிர்த்து மூன்றாவதாக தான் இந்த எக்ஸ்பிரஸ் தனி சாலை அமைக்கப்படவுள்ளது. எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படவுள்ளது.

சென்னை – வேலூர் – கிருஷ்ணகிரி – ஓசூர் – பெங்களூரு சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்றுவதற்கு, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்தபோது ஒப்புதல் அளித்தார். எனவே அந்த சாலை விரைவில் ஆறுவழிச்சாலையாக மாறவுள்ள நிலையில், தற்போது மேலும் இந்த ஒரு ஹைவே கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சென்னைக்கும், பெங்களூருக்கும் 330 கி.மீ., தூரம் உள்ளது. நேரடியாக அமையப்போகும் சாலை மூலம் இந்த தூரம் 260 கி.மீ., ஆக குறையும். எனவே சென்னையிலிருந்து கிளம்பும் பஸ் ஒன்று இரண்டரை மணி நேரத்தில் பெங்களூரை அடைய அதிக வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கி.மீ., தூரத்திற்கு ரூ.30 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்திற்கு ரூ.7,800 கோடி வரை செலவிடப்படும் . இந்த சாலை அமையப்போகும் சித்தூர் அருகே ஒரு வன சரணாலயம் இருக்கிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. தவிர தனியார் பங்களிப்புடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு முடிக்கப்படுமென்றும் தகவலறிந்த வட்டாரங்கள் டில்லியில் நேற்று தெரிவித்தன. தற்போதைக்கு தேசிய நெடுஞ்சாலை அதிகார ஆணையம் சார்பில் ஆறு சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 632 கி.மீ., தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சத்திஸ்கரில் அதிகபட்சமாக 989 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.

Add Comment