பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்

ஒரு தேசமாக, நமது வரலாற்று பற்றி அடிக்கடி நாம் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். ஆனால் பத்தாண்டுகளாக இந்திய மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நான் பழகியதன் அடிப்படையில், அந்தத் துறை மீது உண்மையிலேயே “அன்பு” கொண்டவர்களை நான் மிக மிக அரிதாகவே பார்த்திருக்கிறேன். எனக்கு வரலாறு சுத்தமாகப் பிடிக்காது, ஹிஸ்டரி மகா போர் (”History is so boring”) போன்றதான விமர்சனங்களையே பொதுக்கருத்தாக கேட்க முடிகிறது.

tn_6th_social_science_book_cover2010-11 கல்வி ஆண்டின் பொதுப் பாடத் திட்டத்தின் கீழ் (common syllabus) தமிழக அரசு பதிப்பித்திருக்கும் ஆறாம் வகுப்பு வரலாற்று பாடப் புத்தகத்தைத் திறந்தால், இதே கருத்தைத் தான் அனேகமாக நீங்களும் சொல்லக் கூடும்.

சிந்துவெளி அல்லது ஹரப்பா நாகரீகம் என்கிற இரண்டாம் அத்தியாயத்திலிருந்து ஆரம்பிப்போம். இதில் ஒரு வரைபடத்தில் காலிபங்கன் என்ற முக்கியமான ஹரப்பா நாகரீக பிரதேசம் அதன் உண்மையான இருப்பிடமான வடக்கு ராஜஸ்தானுக்கு பதிலாக பாகிஸ்தானுக்கு உள்ளே இருப்பதாகக் காண்பிக்கப் பட்டிருக்கிறது (இங்கும், இந்திய நிலப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து விட்டதோ?) ரூபர் என்ற இன்னொரு அகழ்விடம் சர்வதேச இந்திய-பாக் எல்லைக் கோட்டுக்கு மேலேயே காண்பிக்கப் பட்டிருக்கிற்து – உண்மையில் அந்த இடம் சண்டிகருக்கு அருகில் இருக்கிறது. ”ஹரப்பா என்றால் சிந்தியில் புதையுண்ட நகரம் என்று பொருள்” என்று பாடம் தெளிவாக நமக்கு சொல்லிச் செல்கிறது. ஆனால், ஹரப்பா பஞ்சாபில் இருக்கிறது, சிந்து மாகாணத்தில் அல்ல; மேலும், ஹரப்பா என்ற சொல்லின் மூலம் கண்டுபிடிக்கப் படவில்லை.

இன்னொரு முத்து: “இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் பட்டயத்தில் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்தன” (The terracotta planks discovered here were engraved with letters). ஒரு அகழ்வாராய்ச்சி மாணவன் என்ற முறையில், ”சுடுமண் பட்டயம்” என்றால் என்ன என்று தெரியாத என் அறியாமையை ஒத்துக் கொள்கிறேன் – ஒருவேளை டோலாவிராவின் பிரபலமான, 3-மீட்டர் நீளமான, உதிர்ந்து போன மரப்பலகை மீது கல்போன்ற படிகங்களை வைத்துப் பதிக்கப் பட்ட கல்வெட்டைத் தான் இப்படி சங்கேத மொழியில் குறிப்பிடுகிறார்கள் போலும்! ஆனால் இந்தப் பாடம் முழுவதிலும் எங்கும் மிகப் பெரிய ஹரப்பா அகழ்விடங்களில் ஒன்றான டோலாவிரா பற்றிக் குறிப்பு இல்லை. இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய சிந்துவெளி அகழ்விடம் அது. நமது பாடப்புத்தக எழுத்தாளர்களுக்கு தங்கள் துறை பற்றிய தகவல் அறிவைப் புதுப்பித்துக் கொள்வதில் விருப்பமும், ஆர்வமும் இல்லவே இல்லை என்றே தோன்றுகிறது.

சிந்துவெளி நாகரீகம் அழிந்தது ஏன் என்பதற்காக ஐந்து காரணங்கள் பாடப் புத்தகத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. இதில் முதலாவது மொத்தமாக அபத்தமானது “மரச் சாமன்கள் தீயில் அழிந்து போயிருக்கலாம்”, ஏதோ தீவிபத்து ஒரு நாகரீகத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்பது போல. இரண்டாவது ஒரு வினோதமான கற்பனை – “உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட விரோதம் காரணமாக அழிந்திருக்கலாம்”. நான்காவது “ஆரியர்கள் இந்த நகரங்களைத் தங்கள் வெற்றிக்காக அழித்திருக்கலாம்” (யாரை எல்லது எதை வெற்றி கொள்வதற்காக என்பது புரிபடவில்லை) – என்ற வாதம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அகழ்வாராய்ச்சியாளர்களால் முற்றாக நிராகரிக்கப் பட்டு விட்டது. அதே போன்று ஐந்தாவதான “மொஹஞ்சதாராவில் கண்டுபிடிக்கப் பட்ட எலும்புக் குவியல் அன்னியர்கள் படையெடுப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம்“ என்ற கருத்தும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப் பட்ட ஒன்று. குறிப்பாக, அங்கு எங்குமே “எலும்புக் குவியல்” இல்லை. ஒருசில சிதறுண்ட எலும்புக் கூடுகளே உள்ளன – அவையும் வேறுவேறு காலகட்டங்களைச் சார்ந்தவை. மூன்றாவதாக சொல்லப் படும் “சிந்து நதியின் போக்கில் ஏற்பட்ட மாறுதல்” என்பது மட்டுமே வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்து. ஆனால், இந்தக் கருத்து அரைகுறையாகவும், தெளிவில்லாமலும் சொல்லப் பட்டிருக்கிறது.

dholavira_indus_site

டோலாவிரா – சிந்துவெளி அகழ்விடம்

இப்போது நான்காவது அத்தியாத்திற்கு (வேத காலம்) போகலாம். இந்த அத்தியாயம் பொ.மு 1500 வாக்கில் (around 1500 BCE) ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்று ஆரம்பிக்கிறது. இந்த நுழைவு சமாசாரம் ஒரு சர்ச்சைக்குரிய காலனிய கருத்தாக்கம், ஆனால் அது நிரூபிக்கப் பட்ட உண்மை போல பாடப் புத்தகத்தில் சொல்லப் படுகிறது. அது போதாதென்று பல நுண் சித்தரிப்புக்களும் தரப்படுகின்றன – ”ஆரிய ஆண்கள், வேட்டிகளும் போர்வைகளும் தலைப்பாகைகளும், அதோடு நெற்றிப் பட்டைகளும் அணிந்திருந்தார்கள்” – என்னவொரு அவலட்சணமான, முற்றிலும் கற்பனையின் பாற்பட்ட உடைத் தேர்வு! மேலும், ஆரியர்கள் வணங்கிய தெய்வங்களில் ஒருவர் Indra என்பதற்குப் பதிலாக Indira என்று குறிப்பிடப்பட்டுள்ளார் (காங்கிரஸ் கட்சிக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும்). இதே போல varna (varuna அல்ல) என்றொரு கடவுளையும் வணங்கினார்களாம்.

ஒரு அட்டவணை திராவிடர்கள் மற்றும் ஆரியர்களின் பண்புகளை (qualities of Dravidians and Aryans) கட்டம் கட்டி அழகாக ஒன்பது பாயிண்டுகளில் பட்டியலிடுகிறது. முதலாவதாக, திராவிடர்கள் “கருப்பு நிறமும், நடுத்தர உயரமும், கருத்த நீண்ட முடியும்” கொண்டவர்கள்; ஆரியர்கள் ”வெள்ளை, உயரம், பழுப்பு நிற முடியினர்”. தெளிவாக, காலனிய காலகட்டத்தின் பிழையான இனவாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் அதையே இங்கு சொல்கிறார்கள் – நவீன மானுடவியலும், மரபணு அறிவியலும் ஒட்டுமொத்தமாக அதைப் பொய்யானது என்று நிரூபித்துவிட்ட போதும்.

மற்ற எட்டு பாயிண்டுகளும் ”சிந்துவெளி நாகரீகத்தை திராவிடர்கள் உருவாக்கினார்கள்” என்பது ஏதோ நிரூபிக்கப் பட்ட உண்மை என்று எடுத்துக் கொண்டு பட்டியல் போடுகின்றன. இந்தக் கருத்தாக்கம் சில பத்தாண்டுகளாக உள்ளது; ஆனால் அகழ்வாராய்ச்சியாளர்களால் சிறிதும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஆரிய/திராவிட பாகுபாடு முழுமையானவே இனம் சார்ந்த ஒன்றாகவே பாடப்புத்தகத்தில் சித்தரிக்கப் படுகிறது. அதில் மொழி பற்றிய ஒப்பீடு கூட இல்லை – அது ஒன்று தான் இன்றைக்குக் கூட வெளிப்படையாகத் தெரிவது! இன்னொன்று – இந்த அத்தியாயத்தில் சம்ஸ்கிருதம் பற்றி எதுவுமே சொல்லப் படவில்லை. ஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் வேத காலம் பற்றிப் படிக்கும் ஒரு மாணவன் சம்ஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததையே படிக்க மாட்டான். என்ன தான் திராவிட இயக்கம் சம்ஸ்கிருத எதிர்ப்புக் கொள்கை உடையது என்றாலும், அதற்காக இப்படியா?

save_the_lemurதமிழ் பற்றி நிறையவே கவன ஈர்ப்பு செய்யப் படுகிறது. பார்த்தால், பழந்தமிழ் நாடு (Ancient Tamil Nadu) என்ற மூன்றாம் அத்தியாயம் சாதுர்யமாக “வேத காலம்” அத்தியாயத்திற்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் தொன்ம நிலமான குமரிக் கண்டம் என்பது பற்றிய புராணம் ஒரு வரலாற்று உண்மையாகவே இதில் சித்தரிக்கப் படுகிறது. ”மூன்று சங்கங்களில் முதல் இரண்டு online pharmacy without prescription அங்கு செழித்திருந்தன, பின்னர் அந்த நிலத்தை கடல் விழுங்கிவிட்டது” (இந்த கடல்கோள் விஷயம் உண்மை என்று தோன்றவைக்க, பாடப்புத்தகத்தில் ‘சுனாமி’ என்ற வார்த்தையை வேறு பயன்படுத்தியிருக்கிறார்கள். சுனாமி எந்த நிலப்பரப்பையும் விழுங்குவதில்லை என்ற உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை, பாவம்). இது நடந்தது ”வரலாற்றுக்கு முந்தைய காலகட்டங்களுக்கும் முன்னால்” (before prehistoric period). அந்த நிலப்பரப்பு ”தென்னிந்தியாவைப் போல எட்டு முதல் பத்து மடங்கு பெரியதாகவும், பலதரப்பட்ட மலைகள் சூழ்ந்ததாகவும், நாகரீகமான மக்களும், திறன்கொண்ட அரசும் (civilized people and efficient kingdom) உடையதாகவும்” இருந்தததாம்.

தெரிந்து கொள்ளுங்கள் – வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திற்கும் முன்பே நமக்கு நாகரீகம் இருந்திருக்கிறது ! பாடப்புத்தகம் இன்னும் மேலே சென்று குமரிக்கண்டத்தை, அதே போன்ற ஒரு கற்பனைத் தொன்மமான “லெமூரியா” கண்டத்துடன் தொடர்பு படுத்துகிறது. அது உறுதியாகக் கூறுகிறது – ”உயிரினங்கள் வளர்வதற்கு சாதகமான சூழ்நிலை குமரிமுனையில் தான் இருந்தது. அது சுனாமியில் மூழ்கிவிட்டது. எனவே மனித பரிணாம வளர்ச்சி அப்போது அங்கே தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த மனிதர்கள் பேசிய மொழி தான் தமிழ் மொழிக்கு அடிப்படை”. எனவே, எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்பது போல, மனிதர்கள் ஆப்பிரிக்காவில் அல்ல, லெமூரியாவில் குமரிமுனையில் தான் தோன்றி பரிணாமம் அடைந்தார்கள் – அவர்கள் ஆதிமுதலே தமிழ் பேசவும் ஆரம்பித்து விட்டார்கள்!

தேசிய, பிராந்திய பெருமிதம் ஓரளவு இருப்பது பற்றி எனக்கு எந்தப் பிரசினையும் இல்லை. ஆனால் இப்படி புவிக்கோளத்தையே முழுங்கும் வெறித்தனம் (planetary jingoism) அத்துமீறியதாக இருக்கிறது.

இன்னும் இருக்கிறது. லெமூரியா என்பது “ஆஸ்திரேலியாவையாயும் ஆப்பிரிக்காவையும் இணைத்திருந்த பெரும் நிலத் தொகுதி”, அது அவ்வாறு அழைக்கப் படக் காரணம் “லெமூர் குரங்கு” (the monkey Lemur) என்கிறது பாடப்புத்தகம். ஆனால் உண்மையில் லெமூர்கள் குரங்குகள் அல்ல. அதாவது பரவாயில்லை; “மனிதர்கள் லெமூர்களில் இருந்து தான் தோன்றினார்கள் என்று நம்பப் படுகிறது. அந்த மக்களின் மொழி பழமையான தமிழ்” – உங்களுக்கு இது எப்படி மறந்து போகலாம்?

gondwanaமனிதர்கள் லெமூர்களிடமிருந்து தான் தோன்றினார்கள் என்பது ஒரு மாபெரும் திருப்புமுனையான ஒரு கண்டுபிடிப்பு. அது உண்மை என்னும் பட்சத்தில், வரலாறு மட்டுமல்ல, மனித பரிணாவியல் பற்றிய எல்லாப் புத்தகங்களையும் நாம் திருத்தி எழுதியாக வேண்டும். அதோடு நிலவியல் (geology) புத்தகங்களையும். ஏனென்றால், நிலவியலின்படி பூமியின் தென்பாதியான பெருங்கண்டம் ஒரு காலத்தில் தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா எல்லாம் இணைந்ததாக இருந்தது. அதற்குப் பெயர் கோண்ட்வானா (Gondwana) லெமூரியா அல்ல. மேலும், தற்போதைய ஆய்வு முடிவுகளின்படி இந்தப் பெருங்கண்டம் 200 மில்லியன் ஆண்டுகள் முன்பே உடைந்து பிரிந்து விட்டது. மனித பரிணாம வளர்ச்சியின் 2 மில்லியன் ஆண்டுக்காலத்தை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ”லெமூர் மூதாதைகளிலிருந்து தமிழ் பேசிக்கொண்டே உருவான ஆதி மானுடம்” எப்படி அபத்தத்திலும் மகா அபத்தமான கருதுகோள் என்பது புரிய வரும்.

எந்த கலாசாரத்திலும் தொன்மங்களும், புராணங்களும் பண்டைக் காலத்தைத் திறந்து காட்டும் சாளரங்கள் என்று கருதப் படுகின்றன தான். ஆனால், குமரிக் கண்டம் பற்றிய ஐதிகத்தை ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக (அதோடு சங்க இலக்கியங்களில் துளிக்கூட காணப்படாத பல மசாலா சமாசாரங்களையும் சேர்த்து) சித்தரிப்பது என்பது எப்படியிருக்கிறது என்றால், கிரகணத்தின் போது ராகு சூரியனை விழுங்குகிறது என்பது தான் வானியலில் சமீபத்தில் நிகழ்த்தப் பட்ட நவீன கண்டுபிடிப்பு என்று சொல்வது போன்று இருக்கிறது.

பின்னால் வரும் அத்தியாயங்களில் இன்னும் பல அபத்தமான தவறுகள் உள்ளன.”ஆன்மிக உயர்நிலையை அடைவதற்காக ஜைனர்கள் பட்டினி கிடந்தார்கள்” (jains starved), அது மட்டுமல்ல, “உடைகளை அகற்றினார்கள்” (they eliminated clothes) போன்ற அரிய உண்மைகளை நாம் அறிய வருகிறோம். எப்படியானாலும், இந்தப் பாடப்புத்தகத்தை எழுதியவர்களின் மிக மோசமான திறமையின்மையை விளக்குவதற்கு மேலே சொன்ன உதாரணங்களே போதுமானவை. பெரும்பாலான தமிழகப் பள்ளிகளில் இந்தக் குழப்படியான அவியலைப் படித்து மனப்பாடம் செய்தால் தான் அடுத்த வகுப்புக்கு மாணவர்களால் போகவே முடியும் என்ற கொடுமையான உண்மையையும் நினைவில் வையுங்கள்.

இதைவிட சிறப்பாக மத்திய அரசின் NCERT நிறுவனம் பதிப்பித்துள்ள பாடப்புத்தகங்கள் உள்ளன. ஆனால் அவற்றிலும் தப்புகளும், குழப்பங்களும், காலனிய பொதுப்படுத்தல்களும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்த இண்டர்நெட் யுகத்தில், முன்னோக்கு கொண்ட கல்வியாளர்கள் கூறுவது போல, பாடப்புத்தகத்தை மையமாகக் கொண்ட கல்வி முறைக்குப் பதிலாக பல்வேறு விதமான சாதனங்களையும் படைப்பூக்கத்துடன் பயன்படுத்தி கற்றும் தரும் முறையை நோக்கிச் செல்வதே சரியான வழி. அதிலும் சில தவறுகளும், சறுக்கல்களும் ஏற்படலாம். ஆனால் மேற்குறிப்பிட்டது போன்ற அவமானகரமான பாடங்களை விட ஒன்றும் அது மோசமானதல்ல.

michael_danino”வாழ்நாள் முழுவதும் இந்தியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கற்கும் மாணவன்” என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கட்டுரை ஆசிரியர் மிஷேல் டேனினோ வரலாற்று ஆய்வாளர். சில பல்கலைக் கழகங்களில் பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். பிரான்ஸ் நாட்டில் பிறந்து இளவயதிலேயே பாரதம் வந்து பாண்டிச்சேரி அரவிந்த ஆஸ்ரமத்தில் பயின்றவர். ஆரிய படையெடுப்பு கோட்பாட்டை மறுத்து இவர் எழுதிய The Invasion that never was என்ற நூல் இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. மறைந்த சரஸ்வதி நதி குறித்து சமீபத்தில் The Lost River: On the Trail of the Sarasvati என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.

மூலம்: மிஷேல் டேனினோ (இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை)
தமிழில்: ஜடாயு

Add Comment