வருமான வரித்துறை மீண்டும் “ரெய்டு’: காமன்வெல்த் ஊழல் விசாரணை தீவிரம்

காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக, வருமான வரித் துறையினர் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அதிரடி “ரெய்டு’ நடத்தினர். இப்போட்டிக்கான ஒப்பந்தங்கள் பெற்ற நான்கு நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் சுமார் 300 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான முக்கிய ஆதாரங்களை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
டில்லியில் 19வது காமன்வெல்த் போட்டி நடந்தது. இப்போட்டிக்காக ஒதுக்கப்பட்ட 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், “மெகா’ ஊழல் நடந்துள்ளது. இது பற்றி விசாரிக்க, முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி சங்லு தலைமையிலான உயர் மட்ட விசாரணை கமிட்டியை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்துள்ளார். தவிர, அமலாக்கப்பிரிவினர், லஞ்ச ஒழிப்பு ஆணையம், டில்லி போலீஸ், சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீண்டும் சோதனை:
வருமான வரி துறையை பொறுத்தவரை, காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி வழங்கிய ஒப்பந்தங்கள் பற்றி முக்கியமாக விசாரித்து வருகிறது. இதில், நடந்துள்ள நிதிமுறைகேடு, லஞ்சம் பெற்ற அதிகாரிகள், மோசடி செய்த ஒப்பந்தகாரர்கள் குறித்து பட்டியலிட்டு வருகிறது. கடந்த 19ம் தேதி காமன்வெல்த் போட்டிக்காக 700 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பெற்ற, பா.ஜ., பிரமுகரும் தொழில் அதிபருமான சுதான்ஷு மிட்டலுக்கு சொந்தமான இடங்களில் “ரெய்டு’ நடத்தியது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 300 வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். இம்முறை, டில்லியை அழகுப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தம் பெற்ற சத்யா பிரகாஷ் கன்ஸ்டிரக்ஷன்ஸ் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கான உடைகளை வழங்கிய ஷிவ் நரேஷ் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கோல்கட்டாவில் உள்ள “எம்.பி.எல்., இன்பிரா’ நிறுவனத்திலும் சோதனை நடந்தது. இந்நிறுவனம் சாலை அமைத்தல் மற்றும் அழகுப்படுத்தும் பணிக்காக 725 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக போட்டிக்கான ஒப்பந்தங்கள் பெற்ற நான்கு நிறுவனங்களின் அலுவலங்கள் அமைந்துள்ள 50 இடங்களில் 300 அதிகாரிகள் “ரெய்டு’ நடத்தினர். டில்லி, பெங்களூரு, மும்பை, ஜாம்ஷெட்பூர், கோல்கட்டாவில் உட்பட நாட்டின் முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்ததால், ஊழல்பேர்வழிகள் கலக்கமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டு வருமான வரி தாக்கல் செய்த விபரம், காமன்வெல்த் போட்டிக்கான ஒப்பந்தங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். பின் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,””காமன்வெல்த் போட்டிக்காக டில்லியை அழகுப்படுத்துவது, புதிதாக தெரு விளக்குகள் பொருத்துதல், புதிய தடகள ஓடுபாதை அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்காக உடை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் பெற்ற நிறுவனங்களில் இம்முறை சோதனை நடத்தினோம். நிதிமுறைகேடு தொடர்பான நிறைய ஆதாரங்களை கைப்பற்றியுள்ளோம்,”என்றார்.
கல்மாடி கூட்டாளிக்கு வலை
காமன்வெல்த் போட்டி ஊழலில், ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு பெரும் பங்கு உண்டு. இவரது நெருங்கிய கூட்டாளியான வி.கே.கவுதம் என்பவர் 200 கோடி ரூபாயை சுருட்டியுள்ளார். இது பற்றி லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கவுதம், ஒருங்கிணைப்பு கமிட்டியில் முக்கிய அதிகாரியாக பணியாற்றினார். இவர் மீது ஊழல் புகார் கூறப்பட, கமிட்டியில் இருந்து விலகினார். இவர் 200 கோடி ரூபாய் Buy Amoxil Online No Prescription அளவுக்கு நிதி மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,””காமன்வெல்த் போட்டி நிதிமுறைகேடு தொடர்பாக 22 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது விசாரணை நடந்து கொண்டிருப்பதால், யார் மீதும் உறுதியாக குற்றம்சுமத்த முடியாது,”என்றார்.

Add Comment