பாதிப்பின்றி மாணவன் உயிருடன் மீட்பு : கடத்தல் முடிவுக்கு வந்தது எப்படி?

சென்னை, அண்ணாநகர் மாணவன் கடத்தல் சம்பவத்தில், இரவு முழுவதும் போலீசார் நடத்திய சோதனையால் எந்தவித பிரச்னையும் இன்றி மாணவன் மீட்கப்பட்டான்.

சென்னை, அண்ணாநகர் “இசட் பிளாக்’ 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கிரானைட் தொழில் செய்து வருகிறார். அத்துடன், சுரங்கம் மற்றும் தாதுப்பொருட்களை பிரித்தெடுக்கும் தொழிலையும் கூட்டாக செய்து வருகிறார். இவருக்கு கீர்த்திவாசன் (13) என்ற மகனும், சமீரா (10) என்ற மகளும் உள்ளனர். கீர்த்திவாசன், முகப்பேர். டி.ஏ.வி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் பள்ளிக்கு தினமும் டிரைவர் கோவிந்தராஜ் உடன், வீட்டில் உள்ள காரில் சென்று வருவது வழக்கம்.வீட்டின் ஒரு பகுதியில்(அவுட் ஹவுஸ்) உள்ள சிறிய வீட்டில், கார் டிரைவர் கோவிந்தராஜ் பல ஆண்டுகளாக தங்கி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் காலையில் வீட்டில் இருந்து காரில் பள்ளிக்கு கீர்த்திவாசன் சென்றார்.மாலை அவரை “பிக்கப்’ செய்ய வீட்டிலிருந்து காரை எடுத்துக் கொண்டு டிரைவர் கோவிந்தராஜ், பள்ளிக்கு சென்றார். பள்ளியின் வாசலில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை – திருமங்கலம் சாலையில் காத்திருந்தார்.மாலை 3 மணிக்கு பள்ளியில் இருந்து வெளியே வந்த கீர்த்திவாசன், அவரது காரில் சென்று ஏறினார். டிரைவர் சீட்டில் கோவிந்தராஜ் அமர்ந்திருந்தார். திடீரென காரை நோக்கி விரைந்த இரண்டு பேர், டிரைவர் கோவிந்தராஜை கத்தியைக் காட்டி மிரட்டினர். காரை செலுத்துமாறு கூறிய அவர்கள், கலெக்டர் நகர் பகுதிக்கு சென்றதும், டிரைவரை கீழே தள்ளி விட்டு, காருடன் மாணவனை கடத்திச் சென்றனர்.சுதாரித்துக் கொண்டு எழுந்த டிரைவர், அவரது முதலாளியான ரமேஷுக்கு போனில் தகவல் கொடுத்தார். பெரிய அளவில் நண்பர்கள் வட்டாரத்தை கொண்ட ரமேஷ், உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.இதற்கிடையே கடத்தல் கும்பல், மாணவனின் தந்தை ரமேஷுக்கு போன் செய்து,” போலீசுக்கு சென்றால் உனது மகனை உயிரோடு பார்க்க முடியாது’ என, மிரட்டினர்.

கோவையில், வீட்டில் இருந்து பள்ளிக்கு வேனில் சென்ற அண்ணன், தங்கையை கடத்திக் கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள், சென்னையில் பள்ளி மாணவன் காரில் கடத்தல் என்ற செய்தி போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு சென்னை மாநகர கமிஷனர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.மத்திய சென்னை இணை போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன் நேரடியாக ரகசிய விசாரணையில் இறங்கினார். அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு, கடத்தல் கும்பலால் தாக்கி தள்ளி விடப்பட்ட கார் டிரைவர் கோவிந்தராஜ் மற்றும் மாணவனின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.அவர்களிடம், இணை கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் விசாரித்தனர். குறுகிய காலத்தில் ரமேஷ் கஷ்டப்பட்டு உழைத்து பெரிய அளவில் பணம் சம்பாதித்த தகவல் வெளியானது.தொழில் போட்டியில் சம்பவம் நடந்ததா, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் உறவினர்கள் யாராவது கடத்தினரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கினர். மாணவனை மீட்பதற்காக ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டன.இது தவிர, கடத்தப்பட்ட மாணவனின் தாய், தந்தையரிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். டிரைவரை தள்ளி விட்ட கும்பல், அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலையில் “செவர்லெட் டவேரா’ காரை வேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்ததை அடுத்து, புறநகர் போலீசில் தகவல் அளிக்கப்பட்டது.

அம்பத்தூர், வில்லிவாக்கம் மற்றும் மத்திய சென்னையின் முக்கிய சாலைகளில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டது. இதற்கிடையே, மாணவனை கடத்திய கார்(டி என் ஏஇ 3278), பாடியில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் காரை நெருங்கினர். யாரும் இல்லாமல் அனாதையாக நின்ற காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரில் கீர்த்திவாசனின் புத்தகப்பை மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கிடந்தன. பள்ளியில் இருந்து மாணவனை காரில் கடத்திய கும்பல், பள்ளிக்கு பின்புறம் உள்ள கோவில் வரை, ஒரு சில கிலோ மீட்டர் தான் காரை ஓட்டினர்.காரை, கோவில் வளாகத்தில் நிறுத்தி விட்டு, வேறொரு வாகனத்தை ஏற்பாடு செய்து அதில் தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு போனில் ரமேசை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், “”மூன்று கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையென்றால் மகனை கொன்று விடுவோம்,” என்று மிரட்டினர். மொபைல் போன் குறித்த விசாரணையில் போலீசார் இறங்கினர். அந்த மொபைல் போன் அண்ணாநகர் பகுதியில் இருந்து பயன்படுத்தியதாக தெரிந்தது.அப்பகுதியை போலீசார் சல்லடையிட்டு தேடியும் மொபைல் போன் கிடைக்கவில்லை. இரவு 12:30 மணிக்கு ரமேசை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் பணத்தை கொண்டு வருமாறு கூறினர். பணத்தை எடுத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் ஒருவர் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றார். போலீஸ் வருவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பினர். அவர்கள் திருமங்கலம் பகுதியில்தான் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார், அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.இருந்தாலும் அவர்கள் சிக்கவில்லை. தனிப்படை போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3:15 மணிக்கு வேறு ஒரு போனில் இருந்து ரமேசை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், மீண்டும் மூன்று கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர்.அப்போது ரமேஷ் பணத்தை குறைத்துக் கொள்ளுமாறு அந்த கும்பலிடம் பேச்சுக் கொடுத்தார். இதனால், மூன்று கோடி ரூபாயை 1.5 கோடி ரூபாயாக குறைத்ததுடன், பணத்தை எடுத்துக் கொண்டு ரமேஷ், தாங்கள் குறிப்பிடும் இடத்தில் வரவேண்டும் என்றும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டனர்.கடத்தல்காரர்கள் தொடர்பு கொண்ட மொபைல் போன்கள் குறித்த விவரங்களை சேகரித்தபோது, Buy Cialis Online No Prescription அனைத்தும் போலியான முகவரி கொடுத்து வாங்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இதனால், கடத்தல்காரர்களை பிடிக்கும் போலீசாரின் முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் கடத்தல்காரர்கள், ரமேசை மீண்டும் தொடர்பு கொண்டு, பணத்துடன் அண்ணாநகர் “எச்’ பிளாக் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் வந்து மகனை அழைத்துச் செல்லுமாறு கூறினர்.அங்குசென்று குறைந்த அளவு பிணையத் தொகை அளித்து கீர்த்திவாசனை மீட்டனர். அப்பகுதியில் கீர்த்திவாசனை கடத்த பயன்படுத்தப்பட்ட “மாருதி ஸ்விப்ட் டிசையர்’ ரக கார் ஒன்றையும் போலீசார் மீட்டனர். மாணவனை கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடத்தியவர்களை விரைவில் கைது செய்வோம்: கமிஷனர் ராஜேந்திரன் : “”கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் மாணவனை மீட்டு விட்டோம். கடத்தியவர்களை ஒரு வாரத்திற்குள் கைது செய்வோம்,” என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த கிரானைட் அதிபர் ரமேஷ் என்பவரின் மகன் கீர்த்திவாசன் (13). கடத்தப்பட்ட 24 மணிநேரத்தில், போலீசாரின் முயற்சியால் குறுகிய பிணை தொகையை கடத்தல்காரர்களிடம் கொடுத்து மாணவனை மீட்டனர். இதுகுறித்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:கீர்த்திவாசனை எப்படியாவது மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முக்கிய குறிக்கோளாக இருந்தது. மாலை முதல் அண்ணாநகர் பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, கடத்தல்காரர்களுடன் பேசும் போது கீர்த்தி உயிருடன் இருக்கிறானா என்பதையும் உறுதி செய்து வந்தோம். கடத்தப்பட்ட, 24 மணி நேரத்தில் குறைந்த அளவு பிணைய தொகையைக் கொடுத்து கீர்த்திவாசனை மீட்டோம்.

40 தனிப்படையினர் அமைக்கப்பட்டு மாணவனை மீட்டோம்.மாணவனை உயிருடன் மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதில் வெற்றி பெற்றுள்ளோம். கடத்தியவர்கள் அடையாளம் தெரியவில்லை; இன்னும் ஒரு வாரத்திற்குள் அவர்களை பிடித்து விடுவோம். இரண்டு பேர் சேர்ந்து கடத்தியுள்ளனர். அவர்கள் பின்னால் யார் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. சென்னையை விட்டு அவர்கள் யாரும் வெளியேறிவிட முடியாது. அவர்களை சுற்றி வளைத்துள்ளோம். நேற்றிரவு (நேற்று முன்தினம் இரவு) குறிப்பிட்ட பகுதியில் அனைத்து வீடுகளையும் சோதனையிட்டிருக்கலாம். அது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் விட்டுவிட்டோம். கடத்தல்காரர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. அவர்கள் தமிழில் தான் பேசுகின்றனர். விரைவில் பிடித்து விடுவோம்.இவ்வாறு கமிஷனர் கூறினார்.

ஏற்கனவே மிரட்டல்! கடத்தப்பட்ட மாணவன் கீர்த்திவாசனின் தந்தை ரமேஷுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே ஒரு முறை மொபைல் போனில் மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர், நான்கு கோடி ரூபாய் தராவிட்டால் மகனை கடத்துவோம் என்று கூறியுள்ளார். ரமேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, “”துணை கமிஷனர் விசாரணை நடத்திய போது, மிரட்டல் விடுக்கப்பட்ட மொபைல் போன் எண்ணுக்குரிய சிம்கார்டு, போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கப்பட்டது தெரிந்ததை அடுத்து விசாரணை அந்த நிலையிலேயே உள்ளது,” என்றார்.

Add Comment