கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு-ஒரு குறுங் கலைக்களஞ்சியம்

நூல் மதிப்புரை :

கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு
ஒரு குறுங் கலைக்களஞ்சியம்

மதிப்புரை செய்தவர் :
செ. சீனி நைனா முஹம்மது
ஆசிரியர்
உங்கள் குரல் மாத இதழ்

கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு’ என்னும் அருநூலைப் பெருமுயற்சி செய்து, தொடர்புடைய எல்லாத் தரப்பினரின் ஒத்துழைப்புடன், சிறப்பாக வெளியிட்டிருக்கிறது, கடையநல்லூர் சிராஜும் முனீர் நற்பணி மன்றம் இடங்கள், காட்சிகள், நிகழ்ச்சிகள், குழுக்கள் பற்றிய 150 படங்கள், 30 ஆவணப்படிகள், பல்வகைச் சிறப்புக்கு உரியவர்களின் நூற்றுக்கு மேற்பட்ட படங்கள், துளிகள் எனும் பெயரில் 41 அரிய குறிப்புகள் ஆகியவற்றுடன் 95 தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளுடன் 924 பக்கங்களில், ஒரு குறுங் கலைகளஞ்சியம் போன்று அமைந்திருக்கிறது இந்த நூல். இதில் இடம் பெற்றிருக்கும் விளம்பரங்கள்கூட விவரங்கள் கூறுகின்றன. கடைய நல்லூரிலேயே வாழ்வோரை மட்டுமன்றி, புலம்பெயர்ந்து பல தலைமுறைகள் கண்டு பிறநாட்டுக் குடிமக்கள் ஆகிவிட்டவர்களையும் உள்ளடக்கிய உலகளாவிய ஒரு வரலாற்று நூலாக இது திகழ்கிறது.

தமிழகத்துக்கு இஸ்லாம் வந்த வரலாறு, அந்நெறியை ஏற்ற மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடையநல்லூருக்குக் குடி வந்த வரலாறு அங்கிருந்து பிற பகுதிகளுக்கும் பிற நாடுகளுக்கும் குடியேறிய வரலாறு எனத் தொடங்கி அம் மக்களிடையே கடந்த இருநூறு ஆண்டுக் காலமாக வாழ்வின் பல்வேறு தளங்களில் படிப்படியாக நிகழ்ந்த மாற்றங்களையும் பதிவு செய்கிறது இந் நூல்.

சமயம், கல்வி, தொழில், வாழக்கைத்தரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், பெருநாள்கள், விழாக்கள், பொழுதுபோக்கு, பொதுத்தொண்டு, சமூக சிந்தனை, அரசியல், கலை, இலக்கியம், மற்ற சமுதாயங்களுடன் நல்லிணக்கம் என எல்லாத் துறைகளையும் ஒன்று விடாமல் ஆராய்ந்து அரிய செய்திகள் இதில் திரட்டித் தரப்பட்டுள்ளன.

Viagra online style=”text-align: justify;”>கடையநல்லூரில் நான்கு வகைத் தரீக்காக்களின் அடிப்படையில் சமுதாயக் குழுக்கள் உருவான வரலாறு, அவற்றுக்குப் பின்னணியான சமயச் சான்றோரின் தலைமுறை வரிசை, மன்னர்களும் குறுநிலக் கிழார்களும் வழங்கிய கொடைகள் போன்றவை ஆவணச் சான்றுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களும் மதராசக்களும் கல்வி நிலையங்களும் உருவாகி வளர்ந்த வரலாறும் அவற்றை உருவாக்கப் பாடாற்றிய பெருமக்களின் அரும்பணியும் நன்றியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மக்களிடையே தொழிலிலும் வாழ்க்கை முறையிலும் வழங்கிய கலைச்சொற்கள், பழமொழிகள், மரபு தொடர்கள், சமுதாய சங்கங்களின் வாழ்த்துப் பாடல்கள் (பைத்துகள்) ஆகியவை பயனும் சுவையும் மிகுந்த பதிவுகள். கடையநல்லூர் விழாக்களில் தமிழகத்தின் பல்வேறு நிலைசார்ந்த தலைவர்களின் பங்கேற்புப் பற்றியும், அவ்வூர் மக்கள் பல்வேறு துறைகளில் பெற்ற வெற்றிகளைப் பற்றியும், அவர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆற்றியுள்ள அரும்பணிகள் பற்றியும் இடம்பெற்றுள்ள செய்திகள் சிறப்புக்குரிய குறிப்புகள், கடையநல்லூர் முஸ்லிம் சமுதாயத்துக்குப் பல்வேறு வகையில் உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய மற்ற சமயப் பெருமக்களைப் பற்றிய விவரங்களையும் இந் நூலில் இடம்பெறச் செய்திருப்பது பாராட்டுக்குரிய பண்பாகும்.

ஆங்காங்கே பளிச்சிடும் நபிமொழிகள் படிப்போர் பார்வைக்கு வெளிச்சம் தருகின்றன. பொருந்தும் இடங்களில் புறநானூறு, சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற பழைய நூல்களிலிருந்தும் பிற்கால படைப்புகளிலிருந்தும் கவிதை வரிகளைச் சேர்த்திருப்பது இவ் வரலாற்று நூலுக்கு இலக்கியச் சுவையைத் தருகிறது.

செய்திகளைப் பொருத்தமாக வரிசைப்படுத்தியிருக்கும் அறிவார்ந்த வைப்புமுறையும், சிறுசிறு கட்டுரைகளாகத் தொகுத்திருக்கும் அமைப்பு முறையும், எளிய இனிய எழுத்து நடையும், இடையிடையே காணும் நபிமொழிகள், கவிதைவரிகள், செய்தித் துளிகள், அரிய படங்கள், குறிப்புகள் ஆகியவையும் ஒன்றுசேர்ந்து, பாகும் பருப்பும் கலந்த பாலைப்போன்ற சுவையை இந் நூலுக்கு வழங்கியுள்ளன. செய்திகளின் அருமையும் புதுமையும் 924 பக்கங்கள் கொண்ட இப் பெருநூலைச் சோர்வு தோன்றாமல் சுவை குன்றாமல் படிக்க உதவுகின்றன.

பல்கலைக் கழகமோ, அரசு சார்ந்த ஆய்வுத் துறையோ பல்துறை வல்லுநர்களைப் பணியமர்த்தப் பல்லாண்டு முயன்று, பாடும் பணமும் செலவிட்டுச் செய்வதற்குரிய ஓர் அரும்பெரும் பணியைச் சிறிய ஆசிரியர் குழுவைக் கொண்டு நிறைவு செய்வதில் வெற்றி பெற்றுள்ள கடையநல்லூர் சிராஜுல் முனீர் நற்பணி மன்றத்தினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் இதன் ஆசிரியர் குழுவைச் சார்ந்த பெருமக்களின் ஆற்றலும் திறமும் மட்டுமன்றி, உண்மையும் உழைப்பும் போற்றுவதற்குரிய பொதுநல நோக்கும் ஒளிவிடுகின்றன. ஆசிரியர் குழுவினருக்கும் வெளியீட்டார்களுக்கும் இப்பணியில் ஒத்துழைத்த அனைத்துத் தரப்புகளையும் சார்ந்த அனைத்துப் பெருமக்களுக்கும் அல்லாஹ் அழகிய பரிசுகளை வழங்கியருள்வானாக !

நன்றி : நம்பிக்கை மாத இதழ், மே 2010

Add Comment