ஹர்பஜன் அசத்தல் சதம்* மீண்டும் கைகொடுத்தார் லட்சுமண்* முதல் டெஸ்ட் “டிரா’ ஆனது

இரண்டாவது இன்னிங்சில் எட்டாவது வீரராக களமிறங்கிய ஹர்பஜன் சிங், முதன் முறையாக சதம் அடித்து அசத்தினார். லட்சுமணும் தன்பங்கிற்கு அரைசதம் அடித்து கைகொடுக்க, முதல் டெஸ்ட் “டிரா’ ஆனது. எளிதாக வெல்ல நினைத்திருந்த, நியூசிலாந்து அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆமதாபாத்தில் முதல் டெஸ்ட் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ரன்களும், நியூசிலாந்து 459 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில், மார்டின் புயலில் சிக்கிய இந்திய அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது. லட்சுமண் (34), ஹர்பஜன் (12) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

புயலில் மீண்டது:நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வழக்கம் போல இரண்டாவது இன்னிங்சில் கைகொடுக்கும் லட்சுமண், நேற்றும் அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 47 வது அரைசதம் கடந்தார். இவருக்கு ஹர்பஜன் நல்ல “கம்பெனி’ கொடுக்க, மார்டின் வேகப் புயலில் சிக்கி தத்தளித்த, இந்திய அணி பின் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டது.
லட்சுமண் பரிதாபம்:
இந்த ஜோடியை பிரிக்க கேப்டன் வெட்டோரி எடுத்த முயற்சிகள் வீணானது. லட்சுமண், ஹர்பஜன் சிங் இணைந்து, ஏழாவது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தனர். லட்சுமண் (91) சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அம்பயரின் தவறான தீர்ப்பினால் வெளியேறினார். வெட்டோரியின் அடுத்த பந்திலேயே, ஜாகிர் கானும் (0) அம்பயரின் தவறான “அவுட்’ காரணமாக வெளியேறினார்.

ஹர்பஜன் அசத்தல்:இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்திருந்த ஹர்பஜன், நேற்று இரண்டாவது இன்னிங்சிலும் ஜொலித்தார். எட்டாவது வீரராக களமிறங்கிய இவர், நியூசிலாந்து அணியின் பவுலிங்கை “ஒரு கை’ பார்த்தார். தொடர்ந்து மிரட்டிய ஹர்பஜன், வெட்டோரியின் பந்தில் “சூப்பர்’ சிக்சர் அடித்து. சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை எட்டினார்.
ஹர்பஜன் 115 ரன்கள் (3 சிக்சர், 11 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். பின் ஸ்ரீசாந்த் 4 ரன்களில் திரும்ப, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரக்யான் ஓஜா (9) அவுட்டாகாமல் இருந்தார்.

ஆட்டம் டிரா:பின் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. முதல் இன்னிங்சில் ஜாகிர் கான் பந்தில் “டக்’ அவுட்டான மெக்கின்டோஸ், மீண்டும் இவரிடமே “டக்’ அவுட்டானார். அடுத்து மெக்கலம், வாட்லிங் இணைந்து மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டனர். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில், ஒரு விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்த போது, போட்டி “டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது.

எளிதாக வெற்றி பெற்று விடலாம் என நினைத்திருந்த நியூசிலாந்து அணியின் கனவு, லட்சுமண், ஹர்பஜன் சிங்கின் அபார ஆட்டத்தினால் தகர்ந்து போனது. ஆட்டநாயகன் விருதை ஹர்பஜன் தட்டிச் சென்றார்.
இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், வரும் 12 ம் தேதி, ஐதராபாத்தில் நடக்கிறது.

ஹர்பஜன் புதிய சாதனை
நேற்று நியூசிலாந்துக்கு எதிராக ஹர்பஜன், பேட்டிங்கில் புதிய சாதனை படைத்தார். முதல் இன்னிங்சில் 69 ரன்கள் எடுத்த இவர், இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் எட்டாவது வீரராக களமிறங்கி, இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த உலகின் நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார்.

மோசமான தீர்ப்பு
நேற்று லட்சுமண் (91), ஜாகிர் கான் (0) இருவருக்கும், அம்பயர் ஸ்டீவ் டேவிஸ் அடுத்தடுத்து தவறான எல்.பி.டபிள்யு., அவுட் வழங்கினார். “டிவி’ ரீப்ளேயில் பார்த்த போது, பந்து பேட்டில் பட்டு, பின் பேடில் பட்டது நன்கு தெரிந்தது. இதனால் லட்சுமண் சதம் வாய்ப்பு நழுவியது. இந்திய கிரிக்கெட் போர்டுடன் (பி.சி.சி.ஐ.,) சேர்ந்து, அம்பயர் மறுபரிசீலனை முறைக்கு (யு.டி.ஆர்.எஸ்.,) எதிர்ப்பு தெரிவித்து வரும் தோனி, இதுபோன்ற சம்பவங்களை பார்த்து, தனது மனதை மாற்றிக்கொள்வாரா?

கனவிலும் நினைக்கவில்லை
லட்சுமண், ஹர்பஜன் சிங் இருவரும் இணைந்து 4 மணி நேரம் 10 நிமிடம் களத்தில் இருந்தனர். இவர்கள் 328 பந்துகளை சந்தித்து 163 ரன்கள் எடுத்து, நியூசிலாந்துக்கு எதிராக 7வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெருமை பெற்றது. தவிர, ஹர்பஜன் தனது முதல் சதம் அடித்து அசத்தினார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியது:
நேற்று முன்தினம் போட்டியில் தோற்கும் நிலையில் இருந்தோம். இந்நிலையில் சதம் அடித்ததை விட, போட்டியை “டிரா’ செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நேரம் பேட்டிங் செய்ததால், கைகள் வேதனையில் உள்ளது. இதனால் சதத்தை நான் கொண்டாட போவதில்லை.
பேட்டிங்கில் ஆட்டநாயகன் விருது, ஒரு வேளை எனக்கு ஒருநாள் போட்டியில் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் டெஸ்ட் போட்டியில், இப்படி வெல்வேன் என கனவிலும் நினைத்தில்லை. இதற்கு லட்சுமணுக்குத் தான் அதிக நன்றி சொல்லவேண்டும். அவர் இல்லை என்றால் என்னால் சதம் அடித்திருக்க முடியாது. ஒவ்வொரு ஓவர் முடிந்த பின்னும் எனது தோள்களை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
அதேபோல, சச்சின், சேவக்கிற்கும் நன்றி சொல்லவேண்டும். ஏனெனில் அவர்கள் தான் டெஸ்டில் சதம் அடிக்க என்னால் முடியும் என, உறுதியாக கூறுவார்கள். தற்போது அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றி விட்டேன்.
இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

தொடரும் சாதனை
ஆமதாபாத், சர்தார் படேல் மைதானத்தில் கவாஸ்கர் 10,000 ரன்களை கடந்தது, கபில் தேவ் 432, கும்ளே 350 வது விக்கெட் வீழ்த்தியது, சச்சின் முதல் இரட்டை சதம் அடித்தது என, பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன. இவ்வரிசையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அறிமுக வீரராக களமிறங்கிய வில்லியம்சன், ஹர்பஜன் ஆகியோர் டெஸ்ட் அரங்கில் முதல் சதம் கடந்தனர். டெஸ்ட், ஒருநாள், “டுவென்டி-20′ மற்றும் முதல் தரம் என மொத்தம் 462 போட்டிகளில் பங்கேற்ற நியூசிலாந்தின் மெக்கலம், நேற்று முதன் முறையாக பவுலிங் செய்தார். ரோஸ் டெய்லர் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா 487
நியூசிலாந்து 459

இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா
காம்பிர்(கே)ஹாப்கின்ஸ்(ப)மார்டின் 0(3)
சேவக்-ரன் அவுட்(கப்டில்/வெட்டோரி) 1(1)
டிராவிட்(கே)ஹாப்கின்ஸ்(ப)மார்டின் 1(16)
சச்சின்(ப)மார்டின் 12(25)
லட்சுமண்–எல்.பி.டபிள்யு.,(ப)வெட்டோரி 91(253)
ரெய்னா(கே)டெய்லர்(ப)மார்டின் 0(4)
தோனி(ப)மார்டின் 22(72)
ஹர்பஜன்(கே)வாட்லிங்(ப)டெய்லர் 115(193)
ஜாகிர்–எல்.பி.டபிள்யு.,(ப)வெட்டோரி 0(1)
ஓஜா-அவுட் இல்லை- 9(37)
ஸ்ரீசாந்த்(கே)ஹாப்கின்ஸ்(ப)டெய்லர் 4(11)
உதிரிகள் 11
மொத்தம் (102.4 ஓவரில் ஆல் அவுட்) 266
விக்கெட் வீழ்ச்சி: 1-0(காம்பிர்), 2-1(சேவக்), 3-2(டிராவிட்), 4-15(சச்சின்), 5-15(ரெய்னா), 6-65(தோனி), 7-228(லட்சுமண்), 8-228(ஜாகிர்), 9-260(ஹர்பஜன்), 10-266(ஸ்ரீசாந்த்).
பந்துவீச்சு: மார்டின் 27-8-63-5, வெட்டோரி 38-8-81-2, ஜீதன் படேல் 23-1-72-0, வில்லியம்சன் 4-0-18-0, ரோஸ் டெய்லர் 4.4-2-4-2, மெக்கலம் 6-1-18-0.

நியூசிலாந்து
மெக்கின்டோஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(6)
மெக்கலம்-அவுட் இல்லை- buy Doxycycline online 11(28)
வாட்லிங்-அவுட் இல்லை- 2(26)
உதிரிகள் 9
மொத்தம் (10 ஓவரில் ஒரு விக்.,) 22
விக்கெட் வீழ்ச்சி: 1-4(மெக்கின்டோஸ்).
பந்துவீச்சு: ஜாகிர் கான் 4-2-7-1, ஸ்ரீசாந்த் 1-0-4-0, பிரக்யான் ஓஜா 3-2-1-0, ரெய்னா 1-0-1-0, தோனி 1-0-5-0.

Add Comment