கொலை மிரட்டலால் பாக்., வீரர் ஓய்வு ! * சூதாட்டத்தில் ஈடுபட மறுத்ததால் சிக்கல்

கிரிக்கெட் சூதாட்ட கும்பலின் கொலை மிரட்டலுக்கு பயந்து, கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார் இளம் பாகிஸ்தான் வீரர் ஜல்கர்னைன் ஹைதர். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இவர், இங்கிலாந்தில் தஞ்சம் அடைய திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் சூதாட்ட சர்ச்சை தொடர்கிறது. லார்ட்ஸ் டெஸ்டில் “ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோரை ஐ.சி.சி., “சஸ்பெண்ட் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹைதரும் (24), சூதாட்ட கும்பலின் பிடியில் சிக்கியுள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்கு மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டியின் போது, சூதாட்டத்தில் ஈடுபடும்படி இவரை சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
லண்டன் பயணம்:
இதை ஹைதர் ஏற்க மறுத்ததால், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. buy Lasix online இதையடுத்து தனது அணி மானேஜரிடம், புதிய “சிம் கார்டு வாங்க வேண்டும் என கூறி, தன்னுடைய பாஸ்போர்ட்டை சில நாட்களுக்கு முன் வாங்கினார். பின் 5 வது ஒரு நாள் போட்டி துவங்க சில மணி நேரங்கள் இருந்த போது, மர்மமான முறையில் துபாயில் இருந்து கிளம்பிச் சென்றார். பின் லண்டன், ஹீத்ரு விமானநிலையம் வந்திறங்கியுள்ளார். அங்கு ஸ்காட்லாந்து போலீசார் மற்றும் ஐ.சி.சி., ஊழல் தடுப்பு பிரிவினர் இவரிடம் விசாரணை நடத்தினர். தற்போது, அங்குள்ள ஓட்டலில் தங்கியிருக்கும் ஹைதர், சர்வதேச போட்டிகளில் இருந்து, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதர் கூறியது:
ஒரு மாத “விசாவில், எனது சொந்த செலவில் லண்டன் வந்துள்ளேன். இங்குள்ள ஓட்டலில் தங்க முடிவு செய்துள்ளேன். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4 மற்றும் 5 வது போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்னை ஒருவர் அணுகினார். இதற்கு சம்மதித்தால் அதிக பணம் தருவதாக தெரிவித்தார். ஒருவேளை சம்மதிக்கவில்லை எனில், அணியில் நீடிக்க முடியாது. பின் அதிக பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
இதில் உடன்பட எனக்கு விருப்பமில்லை. தேசம் நமது தாய் போன்றது. யாரும் எதற்காகவும் தாயை காட்டிக்கொடுக்க மாட்டார்கள். அதுபோல எனது தேசத்துக்கு துரோகம் செய்ய எனக்கு மனமில்லை. அதற்குப் பதிலாக அணியில் இருந்து சென்று விடலாம் என முடிவெடுத்தேன். இது தான் சிறந்த முடிவாகத் தெரிந்தது. இதில், யார் ஈடுபட்டது என்பதை சொல்லவிரும்பவில்லை.
இங்கிலாந்தில் தஞ்சம்:
ஏனெனில், பாகிஸ்தானில் உள்ள எனது குடும்பத்துக்கு இப்போது வரையிலும் மிரட்டல் வந்து கொண்டுதான் உள்ளது. எனக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க முடியவில்லை. வேறு வழியின்றி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என்னுடைய இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.பி.,) தெரிவித்து விட்டேன். இங்கிலாந்தில் தஞ்சம் அடைவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை.
இவ்வாறு ஹைதர் தெரிவித்தார்.
புதிய வீரர்:
ஹைதர் ஓய்வை அடுத்து, விரைவில் துவங்கும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு, விக்கெட் கீப்பராக அத்னன் அக்மல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அணியில் உள்ள கம்ரான் அக்மல், உமர் அக்மலின் இளைய சகோதரர் ஆவார்.

————

மந்திரவாதி அல்ல
ஹைதர் முடிவு குறித்து பாகிஸ்தான் அணி மானேஜர் இன்திகாப் ஆலம் கூறுகையில்,”” புதிய “சிம் கார்டு வாங்கப் போகிறேன் என்று தான் ஹைதர் சொன்னார். அடுத்தவர் மனதில் என்ன உள்ளது என்பதை கண்டுபிடிக்க நான் ஒன்றும் மந்திரவாதி அல்ல. என்ன நடந்தது என, என்னிடமோ அல்லது அணி நிர்வாகத்திடம் அவர் தெரிவிக்கவில்லை. எங்களது உதவியையும் அவர் கேட்கவில்லை, என்றார்.

ஐ.சி.சி., கவலை
ஹைதர் விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,”ஹைதர் மிகவும் பயந்து போயுள்ளார். போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. சூதாட்ட கும்பலுக்கு பின் இருக்கும் கிரிமினல்கள், வீரர்களின் குடும்பத்துக்கு குறிவைப்பது வருந்தத்தக்கது. பி.சி.பி., இதில் சரியான நடவடிக்கை எடுத்து, அவரையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும், என தெரிவித்துள்ளது.

Add Comment