20000 அரசு பேருந்துகளால் தினமும் ரூ. 2 கோடி நஷ்டம்

தமிழகத்தில் தினந்தோறும் இயக்கப்படும் 20,000 அரசுப் பேருந்துகளால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு வருபதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது நேரு கூறியதாவது:

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று இங்கே பேசிய உறுப்பினர் நரசிம்மன் கூறினார். அவர் பேசுவது அவரது பக்கம் இருந்து பார்த்தால் சரியாகத் தோன்றும். ஆனால், வரவு செலவை பார்க்கும்போது சாத்தியப்படாது.
புறநகர் பஸ்சுக்கு ரூ. 9,000 வசூல் இருக்க வேண்டும். நகர்ப்புற பகுதியில் ஓடும் பஸ்சுக்கு ரூ. 6,000 வசூலாக வேண்டும். ஆனால் போக்குவரத்து கழகத்தில் ஒரு பஸ்சுக்கு சராசரியாக ரூ. 2,000 நஷ்டம் எற்படுகிறது.

இப்படி 20,000 பஸ்கள் இயங்குகின்றன. இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.

ஆனாலும் மக்களின் நலன் கருதி பஸ்களை இயக்குகிறோம். தனியார் பஸ்களும் நகர்ப்புறங்களுக்கு வந்து விட்டதால் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு 2,000 புதிய வழித் தடங்களில் அரசு பஸ்களை இயக்குகிறது என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): அமைச்சர் நேருவுக்கு பிறந்த நாள் என்று பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டோம். பிறந்த நாள்செய்தியாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பாரா?.

நேரு: முன்னாள் முதல்வர் தெரிந்தே தொடர்ந்து ஒரே செய்தியை Amoxil No Prescription 4 ஆண்டுகளாக பேசி வருகிறார். திமுக ஆட்சியில் ஒருமுறை கூட பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஒரு சாதாரண பஸ்சுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 28 காசு, எக்ஸ்பிரஸ் பஸ்சுக்கு 32 காசு, விரைவு பஸ்சுக்கு 52 காசு, அல்ட்ரா டீலக்ஸ்சுக்கு 80 காசு, ஏ.சி. பஸ்சுக்கு ரூ.1. இதுதான் கட்டணம்.

தாழ்தள சொகுசு பஸ்சுக்கு மத்திய அரசு ரூ. 120 கோடி தருகிறது. ஒரு பஸ் விலை ரூ. 10 லட்சம் என்றால் தாழ்தள பஸ் ரூ. 22 லட்சம்.

சென்னையில் அதிமுக ஆட்சியில் 1500 பஸ்கள் இயங்கின. இன்று 3,000 பஸ்களை இயங்குகிறோம். இதுபற்றி விரிவான விவிரம் தர தயாராக உள்ளேன். விழாக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுகிறார்கள். முன்பதிவுக்காக ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படுவதோடு சரி. எல்லா விவரமும் தெரிந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சரான செங்கோட்டையன் சிரித்துக் கொண்டே ‘கம்’மென்று இருக்கிறார். அவராவது இவருக்கு விவரம் சொல்ல வேண்டும்.

செங்கோட்டையன்: அன்று எவ்வளவு பேர் பயணம் செய்தார்கள். இன்று எவ்வளவு பேர் பயணம் செய்கிறார்கள். அன்றைய வருமானம் எவ்வளவு?, இன்று 2 மடங்கு கூடுதல் வருமானம் வருகிறதே? அதைத் தான் மறைமுக கட்டணம் என்கிறோம்.

நேரு:-2006ல் 18,000 பஸ்கள் ஓடுவதாகக் கூறினீர்கள். ஆனால், இயக்கியது 16,000 பஸ்களைத் தான். சராசரியாக 64 லட்சம் கி.மீ. தூரத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 95 லட்சம் கி.மீ. இயக்கப்படுகின்றன.

அப்போது ஒரு கோடியே 64 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். திமுக ஆட்சியில் 2 கோடியே 5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கூடுதல் பஸ் இயக்கும்போது செலவும் கூடுகிறது. தூங்குபவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல நடிப்பவரை எப்படி எழுப்புவது?.

பன்னீர்செல்வம்: அதிமுக ஆட்சியில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இப்போது என்ன கட்டணம்?. பஸ்களின் கலரை மாற்றி புதிது புதிதாக வசூலிக்கிறீர்கள். எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நேரு: வெள்ளை அறிக்கை மட்டுமல்ல, எந்தக் கலரில் வேண்டுமானாலும் அறிக்கை வைக்க தயார். ஆனால் ஒன்றை உறுதியாக கூறுகிறேன். நாங்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதிமுக ஆட்சியில்தான் 2 முறை கட்டணத்தை உயர்த்தினீர்கள்.

பாலபாரதி (சிபிஎம்): பஸ் கட்டணம் உயரவில்லை என்று அமைச்சர் சொன்னால் உயர்ந்துள்ளது என்று அர்த்தம். ஒரே வழித்தடத்தில் 4 வித பஸ்கள் ஓடுகி்ன்றன. திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு ரூ. 17 தான் கட்டணம். இப்போது ரூ. 24 வாங்குகிறார்கள். எனவே உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை, இல்லை இல்லை உயராத பஸ் கட்டணத்தை குறைக்க அமைச்சர் பரிசீலிப்பாரா?.

நேரு: நாங்கள் சொல்வது அன்றைக்கு பாலபாரதிக்கு சரி எனபட்டது. இப்போது அவர் இருக்கும் இடம் மாறி இருப்பதால் இப்படி பேசுகிறார். ஒரே வழித்தடத்தில் பலவித பஸ்கள் ஓடுவது தவறு இல்லை. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை இயக்குகிறோம். சென்னை தாம்பரத்தில் இருந்து ஹைகோர்ட்டுக்கு பல வகையான பஸ்கள் வருகின்றன. ஏ.சி. பஸ்சும் செல்கிறது. பலர் ஏ.சி. பஸ்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.

ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை): இலவச பஸ் பாஸ் பெற்றுள்ள கிராமப்புற மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பஸ்களில் ஏற முடியாமல் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலை உருவாகிறது.

நேரு: இது குறித்து முதல்வர் கருணாநிதி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து சென்னையில் எந்தெந்த சாலைகளில் பள்ளிகள் உள்ளன. எந்தப் பகுதியில் அதிக மாணவர்கள் பஸ் பயணம் செய்கிறார்கள் என்று கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 50 பஸ்கள் சென்னையில் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்து தருமாறு கேட்டுள்ளோம். அண்ணா பல்கலைக்கழகத்தினர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கணக்கெடுப்பு விவரம் தந்த பிறகு இதே போல் பஸ்கள் விடப்படும் என்றார் அவர்.

Add Comment