ரயில்பயணத்தில் கரப்பான்… மூட்டைபூச்சி… எலி

 பாதுகாப்பான பயணம், வசதியான பயணம், கட்டணமும் பரவாயில்லை  என பல நல்ல விஷயங்களை கொண்ட ரயில்பயணத்தில் இன்னும் ஒரு விஷயம் மட்டும் தீராத பிரச்னையாக உள்ளது. அது சுத்தம். பயணத்தின் போது மூட்டைபூச்சி, கரப்பான் முதல் எலி வரை படையெடுத்து  பயணிகளை அச்சுறுத்துகின்றன.சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் மெயிலின் ஏசிப் பெட்டியில்  செத்த எலியுடன் பயணம் செய்தனர். ரயில் புறப்பட்ட பல மணிநேரம் ஆனப்பிறகுதான் எலி என்று கண்டுபிடித்து அப்புறப்படுத்தி  நறுமண ஸ்பிரே அடித்து கூடவே பயணிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணன் என்பவர், Ôதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வகுப்பு ஏசிப் பெட்டியில் பயணம் செய்தோம். முதல்நாள் தூங்க தயாரான போது படுக்கைக்கு கீழ் எலி ஒன்று ஓடியது. போதாதற்கு அடிக்கடி எட்டிப்பார்த்த கரப்பான் பூச்சிகள் வேறு. அதைப்பார்த்த என் மகள் பயத்தில் ஊர் போய் சேரும் வரை தூங்கவில்லை. அடுத்த நாளும் அவளுடன் சேர்ந்து  நாங்களும் விழிக்க வேண்டிய நிலைமை. அவ்வளவு காசு கொடுத்து ரயிலில் சிரமப்படுவது இன்னும் கொஞ்சம் காசு செலவழித்து விமானத்தில் குறைந்த நேரத்தில் போய் சேர்ந்திருக்கலாம்Õ என்று வருத்தப்பட்டார்.
இப்படி சில எலி உதாரணங்கள் என்றால் கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி உதாரணங்கள் ஏராளம். சாப்பிட தயாரானால் நமக்கு முன்னால் வாசனை பிடித்து கரப்பான் பூச்சிகள் எட்டிப்பார்க்கின்றன. படுக்கச் சென்றால் மூட்டைப்பூச்சி தொல்லை. ஆங்காங்கே கறைகள்.  கழிவறை நாற்றத்தால் பயணமே நரகமாகிவிடுகிறது. பயணிகளால் ஏற்பட்ட கறைகளையும் சுத்தம் செய்வதில்லை. இந்தப்பிரச்னை எல்லா ரயில்களிலும் இல்லை என்றாலும் பல ரயில்களில் இதுதான் நிலைமை. சேரன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், அவுரா மெயில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், லக்னோ எக்ஸ்பிரஸ்,  அந்தமான்  எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் என பட்டியல் நீள்கிறது.

சென்னை சென்ட்ர லுக்கு வரும் ரயில்களின் பெட்டிகள் பேசின்பாலம் பணிமனையிலும், எழும்பூர் வரும் ரயில்களின் பெட்டிகள் கோபால்சாமிநகர் பணிமனையிலும் சுத்தம் செய்யப்படும், பாரமரிப்பும் செய்யப்படும். இதேபோல் தமிழகத்தில் மதுரை, நாகர்கோவில், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைகள் உள்ளன. இதில் மதுரை பணிமனையில் பராமரிக்கப்படும் ரயில்கள் குறித்து அதிக புகார் எழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் கோபால்சாமி நகர், பேசின்பாலம் பணிமனை எப்போதும் தூய்மையாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால் பெட்டிகளை சுத்தம் செய்தாலும் பலன் இருப்பதில்லை.  தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர், Ôரயில்வேயில் விதிகளை மாற்றிவிட்டனர். ஒரு ரயில் 3000கிமீக்கு அதிகமாக ஓடினால் மட்டுமே பராமரிப்பு செய்ய வேண்டும் என்கிறது ரயில்வே.  கோவையில் இருந்து சென்னை வரும் சேரன் எக்ஸ்பிரஸ் அடுத்த 2 மணிநேரத்தில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலாக அகமதாபாத்திற்கு புறப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில் அது சென்ட்ரலிலேயேதான் நின்றிருக்கும். இதேபோல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் மீண்டும் ஐதராபாத் எக்ஸ்பிரசாக புறப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளாலும் பராமரிப்பு செய்வதில் பிரச்னை இருக்கிறது. கரப்பானை ஒழிக்க நாங்களும் நவீன தொழில்நுட்பத்தையெல்லாம் பயன்படுத்துகிறோம். ஆனாலும் அவை எளிதில் ஒழிக்க முடிவதில்லை. வீரியமிக்க வேதிப்பொருட்களை பயன்படுத்தினால் அது பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. பாரமரிப்பின் போது கரப்பான் எலி ஒழிந்தாலும், ரயில்நிலையங்களில் சுத்தமில்லாமல் இருந்தால் பிரச்னைதான்.  ஆட்கள் பற்றக்குறை ரயில்வே பாலிசிÕ என்றார்.

கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்வது கிடையாது. பினாயீல் தெளிப்பதோடு நிறுத்தி விடுகின்றனர். தென் மத்திய ரயில்வேயில் நீண்ட தூர ரயில்கள் குண்டக்கல் உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்களுக்கு வரும்போது  கழிவறைகளை கழுவி விடுவது, பெட்டியின் தரைகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்கினறனர். ஆனால் தெற்கு ரயில்வேயில் பராமரிப்பு பணிமனையிலேயே முழுமையாக சுத்தம் செய்வது கிடையாது.  அதேபோல் ரயில்பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் விரிப்புகள், தலையணைகளும் முறையாக சுத்தம் செய்வதில்லை.  இது குறித்து சிபிஐ கூட விசாரித்து உண்மை என்று சொல்லியும் பலனில்லை. இப்படி ரயில்வே அலட்சியத்தால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.ஆனால் ரயில்வேயின் கண்டுக்கொள்ளாத இந்தப் போக்கு தொடரும் வரை பயணிகள் கரப்பானுடனும், எலியுடனும்தான் பயணம் செய்ய வேண்டிய அவலநிலையும் தொடரும்.

முறையான பராமரிப்பு இல்லை

தெற்கு ரயில்வே ஊழியர் சங்க(டிஆர்ஈயூ)  செயல்தலைவர் ஆர்.இளங்கோவன்: பேசின்பாலம், கோபால்சாமிநகர் பணிமனைகளில் ரயில்களில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் அன்றாடம் அகற்றப்படுவதில்லை. இந்த 2 இடங்களிலும் குப்பைகள் மூட்டை மூட்டையாக குவிந்துக் கிடக்கின்றன.  பராமரிப்பு பணிகள் நடைபெறும் பாதையிலும்(பிட்லைன்) குப்பைகள், மனிதக்கழிவுகள் அப்படியே இருக்கின்றன. ரயிலிலேயே மனிதக்கழிவுகள் மக்க வைக்கும் முறை உள்ள ரயில்பெட்டிகளில் அந்த வழிகளை வழியில் அகற்றாமல் பராமரிப்பு பணிமனையில் அகற்றுகின்றனர். இவற்றை அகற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால்தான் ரயில்களில் கரப்பான், எலி வருகின்றன.

எத்தனை பூச்சி மருந்து அடித்தாலும் பலன் இருக்காது. ஒரே ரயிலை பல்வேறு ஊர்களுக்கு ஓட்டுவதும் முறையான பாரமரிப்பு செய்ய முடியாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம். ரயில் பெட்டி, பணிமனை தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டுவிட்டு, அந்தப்பணிகளை ஒழித்து விட்டனர். தனியார் சரியாக செய்யாததால் மீண்டும் ரயில்வே ஊழியர்களிடம் கொடுத்து விட்டனர். அதற்கு ஏற்க ஆளை தருவதில்லை.  அதுமட்டுமின்றி சுத்தம் செய்ய தேவையான கிளினிங் பொருட்களை ரயில்வே தருவதில்லை. அதனால் தண்ணீர் ஊற்றி மட்டுமே கழுவ வேண்டிய நிலை. இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் எங்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் ரயில்வே கண்டுக் கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட காலத்தில் இதுபோன்ற கரப்பான், எலி தொல்லைகள் இருந்ததில்லை. ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம்தான் இப்போது பிரச்னைகளுக்கு காரணம்.

ரயில்வே மட்டும் காரணமா?

ரயில்களில்  எலி, கரப்பான் அதிகரிக்க ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் மட்டும் காரணமல்ல பயணிகளின் பொறுப்பற்ற தன்மையும்தான் காரணம். ரயிலில் சாப்பிடும் போது  பொறுப்பில்லாமல் கீழே சிந்தி விடுகின்றனர். ஆரஞ்சு, வாழை என பழத்தின் தோல்களை கீழே போட்டு விடுகின்றனர்.  இளைஞர்கள் உணவுப்பொருட்களை ரயிலில் எறிந்து விளையாடுகின்றனர். தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பல பயணிகளுக்கு இருப்பதில்லை. கீழே பொருட்கள் சிந்தும் போது அதை சரியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற நினைப்பதில்லை. Buy Doxycycline அதுமட்டுமல்ல கழிவறையை பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் ஊற்றுவதில்லை . ரயில்நிலையங்களில் ரயில் நிற்கும் போது கழிவறையை பயன்படுத்தக்கூடாது என்ற விதியையும் கடைபிடிப்பதில்லை.  இப்படி பயணிகளின் அலட்சியம் எலி, கரப்பான் பூச்சிகளுக்கு வசதியாக போய் விடுகிறது.  ரயில் பெட்டி சுத்தமில்லாமல் இருப்பதை பார்த்து முகம் சுளிப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

-dinakaran

Add Comment