முதல்’ தங்கம் வென்றார் பங்கஜ் அத்வானி: வரலாறு படைத்தார் அலோக் குமார்

ஆசிய விளையாட்டில், இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பங்கஜ் அத்வானி பெற்று தந்தார். “இங்கிலிஷ்’ பில்லியர்ட்சில் அசத்திய இவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்று சாதித்தார். பில்லியர்ட்ஸ் “8 – பால் பூல்’ பிரிவில் பதக்கம் வெல்லும் முதலாவது இந்தியர் என்ற வரலாறு படைத்தார் அலோக் குமார். துப்பாக்கி சுடுதலில் ஒரு வெள்ளி, வெண்கலம் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6 பதக்கங்களுடன் இந்தியா 5வது இடத்தில் நீடிக்கிறது.
சீனாவில் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. முதல் நாளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் இரண்டு வெள்ளி வென்றார். நேற்று நடந்த “இங்கிலிஷ்’ பில்லியர்ட்ஸ் தனிநபர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் பங்கஜ் அத்வானி பட்டையை கிளப்பினார். அரையிறுதியில் மியான்மரின் கியாவை வீழ்த்திய இவர், சுலபமாக பைனலுக்கு முன்னேறினார்.
“விறுவிறு’ ஆட்டம்:
பைனலில் அத்வானி, மியான்மிரின் மற்றொரு வீரரான நை தைவேயை சந்தித்தார். இதில், முதல் மற்றும் மூன்றாவது “பிரேமில்’ தோல்வி அடைந்த அத்வானி 1-2 என பின்தங்க, பரபரப்பு ஏற்பட்டது. பின் கடைசி இரண்டு “பிரேம்களில்’ அசத்திய இவர், 33-100, 100-61, 12-101, 101-4, 100-45 என்ற கணக்கில் வென்றார். அத்வானி 3-2 என்ற செட்களில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு முதல் தங்கம் தேடித் தந்தார். கடந்த 2006 ஆசிய விளையாட்டில், இதே பிரிவில் தங்கம் கைப்பற்றிய இவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாதித்துள்ளார். தைவே வெள்ளியுடன் ஆறுதல் அடைந்தார்.
இது குறித்து அத்வானி கூறுகையில்,””நாட்டுக்கு முதல் தங்கம் பெற்று தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதனை நிறைவேற்றிய தருணம் மிகவும் உணர்ச்சிமயமானது. ஒலிம்பிக்கில் பில்லியர்ட்ஸ் இல்லை. எனவே, ஆசிய போட்டி தான் எனக்கு ஒலிம்பிக் போன்றது. நடப்பு சாம்பியன் என்பதால், நான் தங்கம் வெல்ல வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். இதன் காரணமாக நெருக்கடி அதிகரித்தது. இதனால் தான் சில தவறுகளை செய்ய நேர்ந்தது. எப்படியோ கடைசியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது,”என்றார்.
அலோக் அசத்தல்:
பில்லியர்ட்ஸ் “8 -பால் பூல்’ பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் அலோக் குமார். அரையிறுதியில் இவர் சீன தைபேயின் குவா செங்கிடம் 5-7 என தோல்வி அடைந்தார். ஆனாலு<ம், போட்டி விதிமுறைப்படி அரையிறுதியில் தோல்வி அடைந்தவர்களுக்கு வெண்கலம் அளிக்கப்படும். இதன் அடிப்படையில் 42 வயதான தேசிய சாம்பியன் அலோக் குமார் வெண்கலம் கைப்பற்றினார்.
பெண்கள் அபாரம்:
துப்பாக்கி சுடுதலில் இரண்டு பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 10 மீ., “ஏர் பிஸ்டல்’ குழு பிரிவில் ஹீனா சித்து(381 புள்ளி), அனு ராஜ் சிங்(380), சோனாய் ராய்(379) ஆகியோர் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை தவற விட்டனர். இவர்கள் 1,140 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றனர். கொரியாவின் யன்மி, கிம், லீ கூட்டணி 1141 புள்ளிகளுடன் தங்கம் கைப்பற்றினர். சீன குழுவினர் வெண்கலம்(1139) பெற்றனர்.
விஜய் வெண்கலம்:
துப்பாக்கி சுடுதல் 10 மீ., “ஏர் பிஸ்டல்’ தனிநபர் பிரிவில் இந்தியாவின் விஜய் குமார் வெண்கலம் வென்றார். இவர் ஒட்டுமொத்தமாக 680.4 புள்ளிகள் பெற்றார். தென் கொரியாவின் லீ டாம் யாங்(685.8) தங்கம் வென்றார். இப்பிரிவின் தகுதிச் சுற்றில் குர்பரீத் சிங்(20வது இடம்), ஓம்கார் சிங்(28வது இடம்)ஏமாற்றம் அளித்தனர்.
நீச்சல் ஏமாற்றம்:
நீச்சலில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரேகன் போன்ச்சா, விர்தவால் காதே ஆகியோர் ஆண்களுக்கான 100 மீ., பட்டர்பிளை பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற தவறினர். இதே போல buy Ampicillin online 200 மீ., பிரிஸ்டைல் பிரிவில் ரோகித் ராஜேந்திரா, ஆரன் டிசோசாவும் தகுதி பெறவில்லை.
காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற ஜூடோ வீராங்கனை கரிமா சவுத்ரி(63 கி.கி.,) இம்முறை சொதப்பினார். இவர் காலிறுதியில் ஜப்பானின் யோஷியிடம் 0-100 என்ற கணக்கில் வெறும் 28 நிமிடங்களில் தோல்வி அடைந்தார்.
சோம்தேவ் அபாரம்:
டென்னிசில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெண்கலம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்திய ஆண்கள் குழுவினர் தாய்லாந்தை 2-1 என வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினர். முதல் போட்டியில் சனம் சிங், தாய்லாந்தின் கிட்டிபாங்கை 6-1, 6-4 என வீழ்த்தினார். அடுத்த போட்டியில் சோம்தேவ் தேவ்வர்மன், உடோம்சோக்கை 7-5, 7-5 என்ற கணக்கில் போராடி வென்றார். பின் நடந்த இரட்டையரில் ரஸ்தோகி, விஷ்ணுவர்தன் ஜோடி, சன்ச்சாய், சோன்ச்சாட்டிடம் 6-3, 3-6, 2-6 என்ற செட்களில் தோல்வி அடைந்தனர்.
செஸ் போட்டி:
செஸ் போட்டியில் இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, சசிகிரண் தலா 3 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளனர். நேற்றைய நான்காவது சுற்று போட்டியில் கங்குலி, வியட்நாமின் லீ காங்கிடம் வீழ்ந்தார். சசிகிரண் மற்றும் உஸ்பெகிஸ்தானின் பிலிப்போவ் இடையிலான ஆட்டம் “டிரா’ ஆனது. பெண்கள் பிரிவில் இந்தியாவின் தானியா சச்தேவ், சீனாவின் ஜாவிடம் தோல்வி அடைந்தார். ஹரிகா, கசகஸ்தானின் குல்மிராவை வென்றார். தற்போது தானியா, ஹரிகா தலா 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
பளுதூக்குதல் 62 கி.கி., பிரிவில் இந்தியாவின் ரஸ்தம் சாரங்(9வது இடம்), ஓம்கார் அடாரி(11வது இடம்) ஏமாற்றம் அளித்தனர்.
ஹேண்ட்பால் “ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, கத்தாரிடம் 28-37 என்ற கணக்கில் வீழ்ந்தது. முதல் போட்டியில் சீனாவிடம் தோல்வி அடைந்த நிலையில், இனி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினம்.
டேபிள் டென்னிஸ் ஏமாற்றம்:
டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்திய ஆண்கள் குழுவினர், ஜப்பானிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர். இந்திய பெண்கள் குழு காலிறுதியில், சீனாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
வாலிபால் வெற்றி:
வாலிபால் “பி’ பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, கசகஸ்தானை 3-1(24-26, 25-23, 25-18, 25-21) என்ற கணக்கில் போராடி வென்றது. முதல் “கேமில்’ இந்தியா கோட்டை விட்ட போதும், அடுத்த “கேம்’களில் அபாரமாக ஆடி வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா சார்பில் பிரதீப், நவீன் மணிதுரை, நவஜித் சிங் ஆகியோர் தலா 13 புள்ளிகள் எடுத்து, அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர்.
கிரிக்கெட் டிக்கெட் மோசடி
ஆசிய விளையாட்டில், இம்முறை “டுவென்டி-20′ கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சீனா-மலேசியா மோதிய முதல் போட்டியை காண மிகச் சில ரசிகர்களே அரங்கில் காணப்பட்டனர். இதனால், டிக்கெட் விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து ஆசியன் கிரிக்கெட் கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஷாரியார் கான் கூறுகையில்,””நிறைய பேர் என்னிடமே டிக்கெட் கேட்டனர். காலி அரங்கை கண்ட போது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இப்பிரச்னை பற்றி விசாரிக்க உள்ளோம்,”என்றார்.
இதற்கிடையே வரும் 2014ல் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் போட்டி நீடிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவு விழாவில் “ஜெய் ஹோ’
ஆசிய விளையாட்டு நிறைவு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஜெய் ஹோ’ பாடல் ஒலிக்க உள்ளது. இதனை இந்தியாவை சேர்ந்த ரவி திரிபாதி என்ற இளம் பாடகர் பாட உள்ளார். ஏற்கனவே இவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு “கவுன்ட் டவுண்’ நிகழ்ச்சியில் ஹாலிவுட் நட்சத்திரம் ஜாக்கி சானுடன் சேர்ந்து அசத்தியுள்ளார்.
இது குறித்து ரவி கூறுகையில்,””ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் “ஜெய் ஹோ’ மற்றும் ஒரு சீனப் பாடலை பாடுகிறேன். இதனை வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன்,”என்றார்.
சீனா ஆதிக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில், இதுவரை 37 தங்கம் வென்றுள்ள சீன அணி, மொத்தம் 63 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா, 6 பதக்கங்களுடன் 5வது இடத்தில் தொடர்கிறது.
இவ்வரிசையில் “டாப்-5′ நாடுகள்:
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 37 14 12 63
தென் கொரியா 13 10 13 36
ஜப்பான் 8 20 15 43
ஹாங்காங் 2 2 2 6
இந்தியா 1 3 2 6

Add Comment