ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது

ஆசிய விளையாட்டு, ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவிடம் “கோல்டன் கோல்’ முறையில் 3-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதையடுத்து பைனல் வாய்ப்பை பரிதாபமாக இழந்தது.

சீனாவின் குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஹாக்கி இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, மலேசிய அணிகள் மோதின. இதில், இந்தியா மிக எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மலேசிய அணி எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் மலேசியாவின் அப்துல் ஜலில் “பீல்டு’ கோல் அடித்து அசத்தினார். இதற்கு “பெனால்டி கார்னர்’ மூலம் இந்தியாவின் சந்தீப் சிங்(35வது நிமிடம்) ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதியில், போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் எழுச்சி கண்டனர். 37வது நிமிடத்தில் துஷார் கண்டேகர் “பீல்டு’ கோல் அடிக்க, 2-1 என முன்னிலை பெற்றது. 49வது நிமிடத்தில் “பெனால்டி கார்னர்’ மூலம் மலேசியாவின் அஸ்லான் மிஸ்ரான் அருமையான ஒரு கோல் அடிக்க, போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் “பெனால்டி கார்னர்’ மூலம் கேப்டன் ராஜ்பால் சிங் ஒரு “சூப்பர்’ கோல் அடிக்க, இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது. கடைசி கட்டத்தில் கிடைத்த “பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் மலேசியாவின் அமின் ரஹிம்(67வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, போட்டி 3-3 என சமநிலையை எட்டியது.

வாய்ப்பு வீண்:இரண்டாவது பாதி முடிய ஒரு நிமிடம் இருக்கும் போது, நான்காவது “பெனால்டி கார்னர்’ வாய்ப்பு இந்தியாவுக்கு கிட்டியது. இதனை இந்திய வீரர்கள் வீணாக்க, போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. இதில், முதலில் கோல் அடிக்கும் அணி, “கோல்டன் கோல்’ முறையில் வெற்றி பெறும். இதனால் “டென்ஷன்’ எகிறியது. ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் கிடைத்த “பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் அமின் ரஹிம் மீண்டும் கோல் அடித்து மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தார். மலேசிய அணி “கோல்டன் கோல்’ முறையில் இந்தியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியது.

இரண்டாவது பாதியில், கழுத்து வலி காரணமாக சந்தீப் சிங் சுமார் 20 நிமிடங்கள் பங்கேற்காதது, தற்காப்பு பகுதி வீரர்களின் மந்தமான ஆட்டம், இரண்டு “பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளை வீணாக்கியது போன்றவை இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
நாளை நடக்கும் பைனலில் பாகிஸ்தான்-மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில், தங்கம் வெல்லும் அணி 2012, ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். வெண்கலப்பதக்கத்துக்கான மோதலில் நாளை இந்தியா, தென் கொரிய அணிகள் மோதுகின்றன.

பாக்., வெற்றி:முன்னதாக நடந்த முதலாவது அரையிறுதியில் “சடன் டெத்’ முறையில் பாகிஸ்தான் அணி, தென் கொரியாவை வீழ்த்தியது. நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை. பின் “பெனால்டி ஷூட் அவுட்டிலும்’ இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து போட்டி “சடன் டெத்’ முறைக்கு சென்றது. இதில், முதலில் முன்னிலை பெறும் அணி வெற்றி பெறும். இதன்படி தென் கொரியாவின் ஜாங் ஜோங் அடித்த பந்தை பாகிஸ்தான் கீப்பர், சல்மான் அக்பர் அருமையாக தடுத்து அணிக்கு வெற்றி தேடி தந்தார். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் ஆசிய விளையாட்டு பைனலுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது.

பயிற்சியாளர் ராஜினாமா
இந்திய அணியின் தேசிய பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திரா சிங் ராஜினாமா செய்தார். இது குறித்து இவர் கூறுகையில்,””ஆசிய விளையாட்டு Bactrim No Prescription அரையிறுதியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று தேசிய பயிற்சியாளர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்,”என்றார்.

ஒலிம்பிக் வாய்ப்பு கடினம்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோஸ் பிராசா கூறுகையில்,””ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று, 2012ல் லண்டனில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதே இலக்காக இருந்தது. இந்தக் கனவு, தற்போது தகர்ந்து விட்டது. இனி ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும். மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றம் அளித்தது,”என்றார்.

Add Comment