கோப்பை வென்றது இந்தியா* நாக்பூர் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி* நியூசிலாந்து அணி ஏமாற்றம்

ஹர்பஜன், இஷாந்த் பந்து வீச்சில் மிரட்ட, நாக்பூர் டெஸ்டில் இந்திய அணி, நியூசிலாந்தை ஒரு இன்னிங்ஸ், 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி, கோப்பை வென்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகள் “டிராவில்’ முடிந்தன. மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நாக்பூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 193, இந்தியா 566 ரன்கள் எடுத்தன. தொடர்ந்து 2 வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி, 3 ம் நாள் ஆட்ட நேர முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.

சுழல் மிரட்டல்:நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. ஹர்பஜன், ஓஜா கூட்டணி சுழலில் மிரட்டியது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்க, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். சற்று நேரம் தாக்குப் பிடித்த மெக்கலம் (25), ஓஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இத்தொடரில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்த ஹாப்கின்ஸ் (8), நேற்றும் சொதப்பினார். அணிக்கு கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கப்டில், டக்-அவுட்டானார்.

டெய்லர் ஏமாற்றம்: பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர் டெய்லர், பெரிய அளவில் சோபிக்க வில்லை. 29 ரன்களுக்கு ஹர்பஜனிடம் சரணடைந்தார். மிடில் ஆர்டரில் ரைடரும் (22) ஏமாற்ற, நியூசிலாந்து அணி, தோல்வியின் பாதையில் பயணிக்க துவங்கியது.

இஷாந்த் அசத்தல்:நியூசிலாந்து அணியின் பின்வரிசை வீரர்களை, தனது மின்னல் வேகப்பந்து வீச்சால் மிரட்டினார் இஷாந்த் சர்மா. இவரது துல்லிய வேகத்தில் வில்லியம்சன் (8) வெளியேறினார். கேப்டன் வெட்டோரியும் (13), நம்பிக்கை அளிக்க வில்லை. அடுத்து வந்த சவுத்தி, ஹர்பஜன் ஓவரில் 2 சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். ஆனால் இவரது அதிரடி நீண்ட நேரம் நிலைக்க வில்லை. 31 ரன்கள் (3 சிக்சர்) சேர்த்த இவர், இஷாந்த் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்த பந்திலேயே மார்டினையும் (0) வெளியேற்றி, நியூசிலாந்து ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இஷாந்த்.

உணவு இடைவேளைக்குப் பின் நியூசிலாந்து அணி, 2 வது இன்னிங்சில் 175 ரன்களுக்கு “ஆல்-அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. இப்போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இந்திய அணி, இன்னிங்ஸ், 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் இஷாந்த், ஹர்பஜன் தலா 3, ஓஜா, ரெய்னா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்தியா 1-0 என கைப்பற்றியது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக டிராவிட் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ஹர்பஜன் தட்டிச் சென்றார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வரும் 28 ம் தேதி கவுகாத்தியில் நடக்க உள்ளது.

ரெய்னாவுக்கு தோனி ஆதரவு
நாக்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய வீரர் ரெய்னா பெரிய அளவில் சோபிக்க வில்லை. 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், வெறும் 26 ரன்கள் எடுத்துள்ளார்.
இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது: இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெய்னா, தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த 6 மாதங்களாக அவருக்கு ஓய்வு இல்லை. இதனால் தான் நியூசிலாந்து தொடரில் பெரிய அளவில் சாதிக்க வில்லை. கடந்த மே மாதம் ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு தொடரில், எனக்கு கூட ஓய்வு கிடைத்து விட்டது. ஆனால் அவருக்கு ஓய்வு கிடைக்க வில்லை. தற்போது தென் ஆப்ரிக்க தொடருக்கு முன், முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 முதல் 15 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளார் ரெய்னா. இதனால் மனதளவில் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது அடுத்து வரும் தொடர்களில் அவர் 100 சதவீத திறனை வெளிப்படுத்த முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள 3 ஒரு நாள் போட்டிகளில், ரெய்னாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். ரெய்னா, இந்திய அணியின் முன்னணி வீரர். தவிர, நல்ல பீல்டரும் கூட. இதனால் அவருக்கு சரியான இடைவெளியில் ஓய்வு தேவை. இது எனது விருப்பம் தான். ஆனால் இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தான் முடிவு எடுக்க வேண்டும்.

திருப்தி இல்லை: நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி, முழுத் திறமையை வெளிப்படுத்த வில்லை. நாக்பூர் போட்டியில் 60 சதவீதம் மட்டுமே, சிறப்பாக செயல்பட்டோம். முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 40 சதவீத திறமை கூட வெளிப்படுத்த வில்லை. நாக்பூர் போட்டியின் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இஷாந்த், ஹர்பஜன் உள்ளிட்ட இந்திய அணி பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தினர். பேட்டிங்கில் ராகுல் டிராவிட், சேவக், காம்பிர், சச்சின் ஆகியோர் கைகொடுத்தனர். இதனால் மிகப் பெரிய வெற்றியை எட்ட முடிந்தது. இவ்வாறு தோனி தெரிவித்தார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றியுடன், அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனின் பிறந்த நாளையும் கொண்டாடினர். இந்திய வீரர்கள் அணியின் வெற்றி பயிற்சியாளராக வலம் வரும் கிறிஸ்டனுக்கு (43 வயது), சச்சின், தோனி, சேவக் உள்ளிட்டோர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.

மிகப் பெரிய வெற்றி
நாக்பூர் டெஸ்டில், இன்னிங்ஸ், 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் தனது 3 வது மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன், வங்கதேசம் (இன்னிங்ஸ், 239 ரன், buy Lasix online 2007, தாகா) மற்றும் ஆஸ்திரேலிய (இன்னிங்ஸ், 219 ரன், 2010, கோல்கட்டா) அணிகளுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

சேவக் முதலிடம்
நியூசிலாந்து, இந்திய அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த “டாப்-5′ வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம் அரைசதம்
சேவக் (இந்தியா) 3 398 1 3
மெக்கலம் (நியூசி.,) 3 370 1 1
டிராவிட் (இந்தியா) 3 341 2 0
ஹர்பஜன் (இந்தியா) 3 315 2 1
ரைடர் (நியூசி.,) 3 274 1 2

வெட்டோரி அசத்தல்
இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய “டாப்-5′ பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
வெட்டோரி (நியூசி.,) 3 14
ஓஜா (இந்தியா) 3 12
ஹர்பஜன் (இந்தியா) 3 10
மார்டின் (நியூசி.,) 3 9
ஸ்ரீசாந்த் (இந்தியா) 3 8

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
நியூசிலாந்து 193
இந்தியா 566

இரண்டாவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து
மெக்கின்டோஸ் எல்.பி.டபிள்யு., (ப) ஹர்பஜன் 8 (30)
மெக்கலம் எல்.பி.டபிள்யு., (ப) ஓஜா 25 (38)
ஹாப்கின்ஸ் (கே) காம்பிர் (ப) ஹர்பஜன் 8 (35)
கப்டில் எல்.பி.டபிள்யு., (ப) ஓஜா 0 (1)
டெய்லர் (கே) புஜாரா (ப) ஹர்பஜன் 29 (41)
ரைடர் (கே) இஷாந்த் (ப) ரெய்னா 22 (53)
வில்லியம்சன் (ப) இஷாந்த் 8 (25)
வெட்டோரி எல்.பி.டபிள்யு., (ப) ரெய்னா 13 (20)
சவுத்தி (ப) இஷாந்த் 31 (25)
மெக்கே -அவுட் இல்லை- 20 (39)
மார்டின் (ப) இஷாந்த் 0 (1)
உதிரிகள் 11
மொத்தம் (51.2 ஓவரில் “ஆல்-அவுட்’) 175
விக்கெட் வீழ்ச்சி: 1-18 (மெக்கின்டோஸ்), 2-38 (மெக்கலம்), 3-38 (கப்டில்), 4-62 (ஹாப்கின்ஸ்), 5-93 (டெய்லர்), 6-110 (வில்லியம்சன்), 7-123 (ரைடர்), 8-124 (வெட்டோரி), 9-175 (சவுத்தி), 10-175 (வெட்டோரி).
பந்து வீச்சு: ஸ்ரீசாந்த் 7-3-25-0, இஷாந்த் 6.2-2-15-3, ஓஜா 17-2-67-2, ஹர்பஜன் 19-4-56-3, ரெய்னா 2-1-1-2.

Add Comment