ஸ்பெக்ட்ரம் ஊழல்…. அப்டின்னா……?

ஊழலை நியாயப் படுத்தத் தொடங்கினால் ஒவ்வொருவரும் ஒரு நியாயத்தை சொல்லுவார்கள். அது நமது நேர்மையையே சந்தேகிக்கும் ஒரு சூழலுக்கு இட்டுச் செல்லும்.

நாம் அந்தத் தவறை செய்யக் கூடாது. ஊழல் யார் செய்தாலும் ஊழலே… அது பார்ப்பனரா, பனியாவா என்ற பாரபட்சம் கூடாது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எழுந்த குற்றச் சாட்டுகள் என்ன ? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1) 2008ம் ஆண்டில் 2001ம் ஆண்டில் இருந்த விலைகளுக்கு பத்து மடங்கு விலை உயர்ந்து விட்டது என்பதை பொருட்படுத்தாமல், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது.

2) தொலைத் தொடர்பு பிசினசில் இல்லாத கட்டுமானக் கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியது.

3) ஏலத்தில் லைசென்ஸ் வழங்காமல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முறையை கடைபிடித்தது.

4) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை திடீரென்று மாற்றி, பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பிப்பதை தவிர்த்தது

5) விண்ணப்பிக்க கடைசி நாளை திடீரென்று மாற்றியதன் மூலம் 575 விண்ணப்பங்களில் 122 பேருக்கு மட்டும் மொத்த அலைக்கற்றையையும் வழங்கியது.

6) ட்ராய் பரிந்துரைகளை மீறியது

7) தொலைத் தொடர்புத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல், அத்துறையில் இல்லாத நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததன் மூலம், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் தொகைக்கு அலைக்கற்றையை மறு விற்பனை செய்ய வழி கோலியது. (ப்ளாக் டிக்கட் மாதிரி)

8) சட்டத்துறை அமைச்சகம் மற்றும் அமைச்சரவை அதிகாரக் குழுவின் பரிந்துரைகளை மீறியது.

9) ரோல் அவுட் ஆப்ளிகேஷன் எனப்படும், ஒதுக்கீடு பெற்ற குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை தொடங்க வேண்டும் என்ற விதிமுறையை லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் மீற அனுமதித்தது.

இதுதான் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக இருக்கக் கூடிய முக்கிய குற்றச் சாட்டுகள்.

ஒவ்வொன்றாக பார்ப்போம். மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுரைகள் ஒவ்வொரு முறையும் மீறப் பட்டது என்பதை சிஏஜி அறிக்கையில் நிதி அமைச்சகமே சுட்டிக் காட்டியுள்ளது. தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத போது, அமைச்சரவையை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

1.10.2007 வரை தொலைபேசி அலைக்கற்றை லைசென்சு வேண்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவிக்கிறது. அதன் படி, 537 நிறுவனங்கள் லைசென்சு வேண்டி விண்ணப்பிக்கின்றன. திடீரென்று ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்ட ஆ.ராசாவின் அமைச்சகம் 25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப் படும் என்று ஒரு குண்டை தூக்கிப் போடுகிறது. இதில் வந்திருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் உங்களுக்கு இந்த சதிச் செயல் விளங்கும். 25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 232. 25.09.2007 முதல் 30.09.2007 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 76. 01.10.2007 அன்று விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 267. இந்த கடைசி நாளன்று தான், விண்ணப்பங்கள் அதிகம். மொத்தத்தில் 122 நிறுவனங்களுக்கு மட்டுமே லைசென்சுகள் வழங்கப் பட்டிருக்கின்றன.

இந்த 122 நிறுவனங்களுக்கும் இருந்த மொத்த ஸ்பெக்ட்ரமும் ஒதுக்கீடு செய்து முடித்தாகி விட்டது. இனி ஒதுக்கீடு செய்ய ஸ்பெக்ட்ரமே இல்லை என்பதால் தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கிடைக்காத மற்ற நிறுவனங்கள், ஆர்டர் பெற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனனங்களுக்கு விற்ற விபரங்களை வெளியிடத் தொடங்குகின்றன.

ட்ராய் நிறுவனத்தின் மற்றொரு விதி, லைசென்ஸ் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், ஆர்டர் பெற்ற நாளிலிருந்து மெட்ரோ நகரங்களில் முதல் ஆண்டுக்குள்ளாகவும், மற்ற நகரங்களில் முதல் ஆண்டுக்குள் 50 சதவிகிதமும், மீதமுள்ள 50 சதவிகிதத்தை மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவும், செயல்படுத்த வேண்டும் என்று ட்ராய் ஆணையிட்டுள்ளது. இதை Roll Out Obligation என்று அழைக்கிறார்கள்.

ஆனால் ராசாவின் அமைச்சகம், 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில் ஆர்டர் பெறும் நாளிலிருந்து என்ற வரையறையை ஸ்பெக்ட்ரம் வழங்கப் பட்ட நாளிலிருந்து என்று மாற்றுகிறது. இந்த மாற்றம், அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதற்காகவே என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

ட்ராய் அமைப்பின் மற்றொரு முக்கியமான விதி லைசென்சு பெற்ற ஒரு நிறுவனம் அது தொடர்பான வேலைகள் அத்தனையும் (Roll out obligation) முடியும் வரை அதன் பங்குகளை விற்கவோ, வேறு நிறுவனத்தை வாங்கவோ கூடாது என்பது. எதற்காக இந்த விதி என்றால், ஒரு நிறுவனம் லைசென்சு பெற்றுக் கொண்ட பின், லைசென்சு கிடைக்காத வேறு ஒரு நிறுவனத்துக்கு அதை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விடக் கூடாது என்பதற்காகத் தான்.

ஆனால் ராசாவின் அமைச்சகம், தனது 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில், “எல்லா வேலைகளும் முடிக்கும் வரை (Roll out obligation) ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தோடு இணையக் கூடாது. ஆனால் இதற்கான கோரிக்கை பரிசீலிக்கப் படலாம்“ எப்படி இருக்கிறது ?

இந்த விதிவிலக்கை பயன்படுத்தித் தான் 1537.01 கோடிக்கு 16 வட்டங்களுக்கு லைசென்ஸ் பெற்ற ஸ்வான் நிறுவனம் தனது 45 சதவிகித பங்குகளை மட்டும் 9400 கோடிக்கு விற்க முடிந்தது.

அதே போல 1658.57 கோடிக்கு 22 வட்டங்களுக்கு லைசென்ஸ் பெற்றிருந்த யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவிகித பங்குகளை 11,600 கோடிக்கு விற்க முடிந்தது.

இவ்வாறு பங்குகளை விற்ற இந்த இரண்டு நிறுவனங்களும், ஒரு டவரை கூட நிறுவவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

அதாவது தொழில் தொடங்கும் முன்பாகவே லாபம். அடுத்த முறைகேடு ஸ்பெக்ட்ரம் இருப்பு தொடர்பானது. ராசா அமைச்சகத்தின் அக்டோபர் 2007 பத்திரிக்கை செய்திக்குப் பிறகு, மன்மோகன், ராசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அனைவருக்கும் ஸ்பெக்ட்ரம் இருக்கிறதா என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இருப்பை பொறுத்து வழங்க வேண்டும் என்றும் கூறுகிறார். ராசா மன்மோகனுக்கு ஒரு பதில் கடிதத்தை எழுதுகிறார். அக்கடிதத்தில், இப்போது 122 பேருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அறிவிக்கிறார். ஆனால் அவ்வாறு பிரதமருக்கு மறுமொழி எழுதும்போதே, மீதம் உள்ளவர்களுக்கு ஒதுக்க ஸ்பெக்ட்ரம் இல்லை என்பது ராசாவுக்கு தெரியும்.

இந்த ஒதுக்கீட்டிலும், கடைசி தேதியை மாற்றுவதிலும் உள்ள தவறுகளை இரண்டு தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டி நோட் எழுதுகிறார்கள். ஒருவர் டி.எஸ்.மாத்தூர் இவர் தொலைத் தொடர்பு துறை செயலர். இவர் கடைசி தேதியை மாற்றக் கூடாது என்று எழுதிய கோப்பை ராசா ஓரமாக வைத்து விட்டு, வேறொரு கோப்பில் நடவடிக்கை எடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார். மற்றொருவர் தொலைத் தொடர்பு நிதி உறுப்பினர் மஞ்சு மாதவன். இவர் ஆ.ராசாவின் நெருக்கடி பொறுக்க முடியாமல் விருப்ப ஓய்வில் செல்லுகிறார். இதற்கு நடுவே, கடைசித் தேதியை 1.10.2007ல் இருந்து 25.09.2007க்கு மாற்ற சட்ட அமைச்சகத்தின் சம்மதத்தை பெற, ராசா சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். சட்ட அமைச்சர், இதை அமைச்சரவை அதிகாரக் குழுவிற்கு அனுப்பிய பிறகு முடிவெடுக்கலாம் என்று கூறுகிறார். இதற்கு பதிலாக ராசா என்ன செய்கிறார் தெரியுமா ? 1.11.2007ல் பிரதமருக்கு, சட்ட அமைச்சர் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கடிதம் எழுதுவதாக தெரிவிக்கிறார்.

தாமதமாக விழித்துக் கொண்ட ட்ராயும் தன் பங்குக்கு, ராசாவை தடுக்க முயற்சி செய்கிறது. ட்ராய் வழிகாட்டுதல்களில் சந்தேகம் இருந்தால், மீண்டும் ட்ராயை அணுக வேண்டும் என்ற சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டி, 15.10.2007 அன்று, ட்ராய் ராசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதத்தில் சட்டத்தில் உள்ளவாறு மறு வழிகாட்டுதலுக்கு ஒரு கடிதம் எழுதும் படியும், அவ்வாறு எழுதவில்லையென்றாலோ, உதாசீனப்படுத்தினாலோ, கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டது.

19.10.2007 அன்று ஆ.ராசா வெளியிட்ட பத்திரிக்கை செய்தி வந்த பிறகு, உடனடியாக மறு ஆலோசனைக்கு கடிதம் எழுதுமாறு வற்புறுத்தியுள்ளது. அப்போதும் ராசா அசையவில்லை. 14.01.2008 அன்று மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறது. இந்தக் கடிதத்தையும் ராசா நிராகரித்தார்.

இதன் நடுவே, இப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் அப்போதைய நிதித் துறைச் செயலர் சுப்பாராவ், 22.11.2007 அன்று, வெறும் 1658 கோடி ரூபாய்க்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்திருப்பதை கடுமையாக கண்டித்து ஒரு கடிதம் எழுதுகிறார். இந்தக் கடிதத்தையும் ராசா குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டார்.

“முதலில் வருபவருக்கே முன்னுரிமை“ என்ற கொள்கையை எனக்கு முன் இருந்த அமைச்சர்கள் கடைபிடித்தார்கள், அதனால் நானும் கடைபிடித்தேன் என்று ராசா சொல்லும் காரணத்திலும் வலு இல்லை. ஏனெனில் 2003ல் முதன் முறையாக முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று அறிவிப்பு வெளியிட்ட போது 200 லைசென்சுகள் வழங்க அரசு வசம் அலைக்கற்றை இருந்தது. ஆனால் விண்ணப்பம் செய்ததோ வெறும் 51 நிறுவனங்கள் தான். 2003ல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறை கடைபிடிக்கப் பட்ட போது இருந்த விதி, முதலில் விண்ணப்பம் செய்பவர் முதலில் வந்தவராக கருதுப்படுவார் என்பது. ஆனால் ராசா இந்த விதியையும் மாற்றுகிறார். என்னவென்றால், முதலில் லைசென்சு வழங்கியதற்கான தகுதிகளை பூர்த்தி செய்பவருக்கே ஸ்பெக்ட்ரம் என்று. அதாவது என்னவென்றால், லைசென்சு உங்களுக்கு வழங்கப் பட்டால், லைசென்சுக்கான மொத்த தொகையையும் வங்கி வரைவோலை மூலமாக செலுத்துபவருக்கே ஸ்பெக்ட்ரம் என்பது. இவ்வாறு விதியை மாற்றி 10.01.2008 அன்று பத்திரிக்கை செய்தி மூலமாக அறிவிப்பு வெளியிடுகிறார் ஆ.ராசா.

எளிதாக சொல்ல வேண்டுமென்றால்.2003ல் அமலில் இருந்த முறை. விண்ணப்பம் ↓ லைசென்சுக்கான கடிதம் ↓ தொகை செலுத்துவதற்கு 15 நாட்கள். ↓ லைசென்சுகள் ↓ அலைக்கற்றைக்கான வரிசையில் முதலிடம். 10.01.2008 அன்று ராசா புகுத்திய புதிய திட்டம். 122 விண்ணப்பங்கள் பரிசீலனை ↓ தொகை செலுத்த வேண்டும். ↓ லைசென்சுகள் ↓ அலைக்கற்றைக்கான வரிசையில் முதலிடம்.

இது போல வழிமுறையை திடீரென்று மாற்றியதால் பல நிறுவனங்கள் தொகையை வரைவோலையாக செலுத்த முடியாமல் திணறின. தொகை என்றால் ஆயிரம் ஐநூறு கிடையாது நண்பர்களே. 1500 கோடி, 2000 கோடி என்ற அளவில். அரை நாளுக்குள் 2000 கோடிக்கு, நீங்கள் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி…. வரைவோலை எடுத்து விடுவீர்களா ?

ஆனால், ராசா ஒதுக்கிய ஸ்பெக்ட்ரம் திட்டத்தின் படி, 13 விண்ணப்பதாரர்கள் வரைவோலையோடு தயாராக அலுவலகத்திற்குள்ளேயே இருந்தார்கள். எப்படி இருக்கறது ?

ஆக முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையையும் ராசா சரிவர பின்பற்றவில்லை.

மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில், அரசுக்கு ஏராளமான வருமானம் வந்து குவிந்தவுடன், ஆ.ராசா சொன்ன பதில் ஞாபகம் இருக்கிறதா ? “3ஜி பாஸ்மதி அரிசி போல… அதனால் விலை அதிகம். 2ஜி கருணாநிதி போடும் ஒரு ரூபாய் அரிசி போல. “ மேலும் ராசா சொன்ன மற்றொரு காரணம், போட்டியிடும் நிறுவனங்கள் விலையை அதிகம் கொடுத்தால், அது வாடிக்கையாளரின் தலையில்தான் விடியும். அதனால்தான் குறைந்த விலைக்கு கொடுத்தோம் என்பது.

ராசாவின் கூற்றுப் படியே பார்த்தாலும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து 10 மடங்கு விலை கொடுத்து வாங்கிய வெளிநாட்டு நிறுவனம் எப்படி குறைந்த விலைக்கு கொடுக்க முடியும் ? மேலும், டாடா நிறுவனம் 2ஜிக்கு கொடுத்த தொகை 12 கோடி. 3ஜிக்கு கொடுத்த தொகை 152 கோடி. ஆனால் 3ஜிக்கு டாடா நிறுவனம் நிர்ணயித்துள்ள தொகை என்ன தெரியுமா ? ஒரு வினாடிக்கு 66 காசுகள். இந்தத் தொகையும் போகப் போக குறையவே வாய்ப்பு உள்ளது.

1995ம் ஆண்டு, இதே போல ஏலம் விட்ட போது, இந்தியாவில் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பலர் முன்வரவில்லை என்ற வாதமும் சொத்தையானது. ஏனெனில், இந்தியாவில் 1995ல் தான் செல்பேசி என்ற விஷயமே அறிமுகம் ஆகிறது. யாருக்கும் அனுபவம் இல்லை. இன்கமிங் 18 ரூபாய் அவுட்கோயிங் 30 ரூபாய் என்ற தொகை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் 2007ல் பல ஆபரேட்டர்கள் உள்ளனர். அவுட் கோயிங் 10 காசு என்ற வரை ரேட் குறைந்து விட்டது. இப்போது 1995ல் உள்ள நிலையை ஒப்பீடு செய்யும் ராசாவின் தந்திரம் அயோக்கியத்தனமானது.

அடுத்து ராசா எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் இந்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு குழுவைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதை உடைக்கவே புதிய நிறுவனங்களை அனுமதித்தேன் என்பது. இவர் சொல்லும் அந்தக் குழுவில் கூட அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல்லும், எம்.டி.என் எல்லும் இருந்தனவே ? இதே கூற்றை ஏற்றுக் கொண்டாலும் கூட, திறந்த முறை ஏலத்தில் மேலும் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ளத்தானே வாய்ப்பு அதிகம் ? கடைசி தேதியை மாற்றி வைப்பதால் குழுவாகச் செயல்பட்டவர்களை உடைத்தேன் என்று ராசா சொல்லுவது சோற்றுக்குள் பூசணிக்காயை மறைப்பதே தவிர வேறொன்றும் இல்லை.

ஏலத்தில் விடுவதன் மூலமாக மக்களுக்கு விரைவாக சேவை கிடைக்கவே வாய்ப்பு அதிகம். ஏனென்றால் பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், முதலில் வாடிக்கையாளரைக் கவருவதற்காக வேக வேகமாக வேலையை துவக்கி முதலில் வாடிக்கையாளரை யார் பிடிப்பது என்று முனைப்பாக இருக்கும்.

உதாரணத்திற்கு சொல்லப் போனால், டாடா நிறுவனம், 3ஜி ஏலத்தில் எடுத்த 4 மாதத்தில் தனது 3ஜி சேவையை துவக்கி விட்டது. இதையே 2ஜியோடு ஒப்பிட்டீர்கள் என்றால், ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியும், இன்னும் 85 நிறுவனங்கள் வேலையை தொடங்காமல் இருக்கின்றன, அதனால் அவற்றின் லைசென்சுகளை ரத்து செய்யப் போகிறோம் என்பதுதான் ட்ராய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு.

மேலும் 2ஜி லைசென்சுகளைப் பெறுவதற்கென, கடுமையான தகுதிகளை ட்ராயும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகமும் விதித்திருக்கின்றன. வழங்கப் பட்டுள்ள 2ஜி லைசென்சுகளை பெற்ற 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் தகுதியே இல்லாத நிறுவனங்கள் என சிஏஜி தனது அறிக்கையைல் தெரிவித்திருக்கிறது.

ராசாவின் கண்ணசைவு இன்றி இத்தனை தகுதியில்லாத நிறுவனங்கள் லைசென்சுகள் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதா என்பது சந்தேகமே…. லைசென்சு பெற்ற நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களின் பினாமி நிறுவனங்களாகவே இருப்பது இன்னொரு பெரிய முரண்பாடு.

உதாரணத்திற்கு அலையன்ஸ் இன்ப்ராடெக் நிறுவனம் என்ற நிறுவனம் 6.9.2007ல் மத்திய பிரதேசத்துக்கும் பீகாருக்கும் லைசென்சுகளைப் பெற்றது. இந்த நிறுவனத்தில் ஆஷிஷ் தியோரா என்பவர் 25 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். க்ளாரிட்ஜெஸ் இன்போடெக் என்ற நிறுவனம் 50 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. இந்த க்ளாரிட்ஜெஸ் நிறுவனத்தின் பங்குகளை யார் வைத்திருக்கிறார் என்று பார்த்தால் ஆஷிஷ் தியோரா 99.77 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். இப்போது அலையன்ஸ் இன்ப்ராடெக் நிறுவனத்தில் 75 சதவிகித பங்குகளை வைத்திருப்பது யார் என்பது புரிகிறதா ?

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு பெரிய பங்கு இருக்கும் செய்திகள் வெளிவந்ததும், ராசாவின் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் அதை மறுத்து, விண்ணப்பம் செய்யும் நேரத்தில் அதாவது 2 மார்ச் 2007 அன்று உள்ளபடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வெறும் 10 சதவிகித பங்குகள் தான் உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா ? ஸ்வான் நிறுவனத்தில் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு 9.90 சதவிகித பங்குகள். டைகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு 90.09 சதவிகித பங்குகள். 90.09 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் டைகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பது யார் தெரியுமா ? தலா 25 சதவிகிதம் வீதம் 75 சதவிகித பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆஷிஷ் கரேகர், தினேஷ் மோடி மற்றும் பரேஷ் ராதோட். இவர்கள் மூன்று பேரும் அனில் அம்பானி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.

இப்போது ஸ்வான் நிறுவனம் யாருக்குச் சொந்தம் என்று புரிகிறதா ?

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டம் என்று எப்படி சொல்ல முடியும் ? 3ஜி ஏலத்திலேயே 67 ஆயிரம் கோடிதானே வந்தது என்று buy Lasix online சில அறிவாளிகளும் அறிவு ஜீவிகளும் கேள்வி எழுப்புகிறார்கள். 2ஜி ஏலம் நடந்திருக்க வேண்டிய ஆண்டு ஜனவரி 2008. அப்போது செல்பேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 250 மில்லியன். இந்தியாவின் மொத்த ஜனத்தொகையையும் கணக்கில் வைத்துப் பார்த்தால் இன்னும் 750 மில்லியன் இணைப்புகள் வர வாய்ப்பு உள்ளது என்று நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் எடுக்கும். 3ஜி ஏலம் நடக்கையில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 600 மில்லியனை தொட்டு விட்டது. எவ்வளவு தொகைக்கு எடுத்தாலும் இன்னும் 400 மில்லியன் இணைப்புகள் தான் வளர்ச்சியின் அளவு எனும் போது எப்படி அதிக தொகைக்கு ஏலம் எடுப்பார்கள். அதனால் தான் 3ஜி ஏலம் வெறும் 67 ஆயிரம் கோடிக்குப் போனது.

சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்பது மிகையல்ல. இப்போது சொல்லுங்கள்.

ராசா நல்லவரா… கெட்டவரா…….

Add Comment