ஆந்திர அமைச்சரவை பதவியேற்பு-ஜெகன் சித்தப்பாவுக்கு பதவி

ஆந்திராவில் 39 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் முதலில் ரோசய்யா அரசுக்கும், பின்னர் காங்கிரஸ் தலைமைக்கும் பெரும் குடைச்சலைக் கொடுத்து வந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆப்பு வைக்கும் வகையில் ரோசய்யாவை நீக்கி விட்டு, கிரண் குமார் ரெட்டியை முதல்வராக்கியது கட்சி மேலிடம்.

இதனால் அதிருப்தி அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸிலிருந்து விலகினார். எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய தாயார் விஜயலட்சுமியும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இன்று கிரண் குமார் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. மொத்தம் 39 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். இவர்களில் 11 பேர் மட்டுமே புதுமுகங்கள். இவர்களில் விவேகானந்த ரெட்டி முக்கியமானவர்.

மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் தம்பிதான் விவேகானந்த ரெட்டி. ஜெகனின் சித்தப்பா.

இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்ததால்தான் கடுப்பாகி கட்சியை விட்டுவெளியேறினார் ஜெகன்.

குடும்பத்தில் பிளவு-சித்தப்பாவை தாறுமாறாக திட்டிய ஜெகன்:

முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டிக்கும், விவேகானந்த ரெட்டிக்கும் இடையே வீட்டில் வைத்து கடும் வாய்ச்சண்டை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது சித்தப்பாவை கடுமையான வார்த்தைகளால் ஜெகன் மோகன் ரெட்டி அர்ச்சித்ததாக கூறப்படுகிறது. பதிலுக்கு விவேகானந்த ரெட்டியும் சரமாரியாக திட்டித் தீர்த்து விட்டு வெளியேறினாராம்.

முன்னதாக கடப்பாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த விவேகானந்த ரெட்டியிடம், உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம் உங்களது மறைந்த சகோதரர் ராஜசேகர ரெட்டி குடும்பத்துக்கும், உங்களது குடும்பத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த சோனியா காந்தி முயற்சிப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த ரெட்டி, காங்கிரஸ் மேலிடத்துக்கும் ஜெகன்மோகனுக்கும் இடையேயான விரிசல் பெரிதானதும் நானாகத்தான் டெல்லிக்கு சென்றேன். சோனியா காந்தி உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்தேன்.

பிரச்னையை பெரிதாகவிடாமல் தடுக்க முயற்சித்தேன். ஆனால் எனது முயற்சி தோற்றுப்போனது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது என்ற துரதிருஷ்டவசமான முடிவை ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துவிட்டார்.

நான் அமைச்சர் பதவியை விரும்பவில்லை. எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படாவிட்டாலும் தொடர்ந்து காங்கிரஸில்தான் இருப்பேன் என்று கூறியிருந்தார்.

முன்னதாக ஜெகன் buy Levitra online மோகன் ரெட்டி சோனியா காந்திக்கு அனுப்பிய தனது விலகல் மற்றும் விளக்கக் கடிதத்தில் எனது சித்தப்பாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் எனது குடும்பம் பிளவுபடும். அதைத்தான் நீங்கள் (சோனியா)செய்ய விரும்புவதாக தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் நான் காங்கிரஸில் இருக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Add Comment