புயல் சின்னம் ஆந்திராவை நோக்கி நகருகிறது-சென்னையில் கன மழை பெய்யும்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று தமிழக கடலோரப் பகுதியை ஒட்டிய இடத்தில் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றது. அது மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக வடக்கு கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும், மணிக்கு 50 முதல் 60கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளைத் தவிர பிற தமிழக கடலோரப் பகுதிகளில் மழையின்அளவு குறையத் தொடங்கியுள்ளது.

அதேசயம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் கன மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கன மழைக்கு வாய்ப்புண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த மூன்று மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் மழை நேற்றுதான் ஓய்ந்தது. இதையடுத்து அங்கு இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கத் தொடங்கியுள்ளன. பிற மழை நின்ற மாவட்டங்கலிலும் கல்வி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

கடல் சீற்றம் தொடர்கிறது:

இதற்கிடையே, சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர், நாகை மாவட்டம் வேதாரன்யம்உள்ளிட்ட சில பகுதிகளில் கடல் கொந்தளிப்பு தொடர்கிறது. இதனால் இங்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை.

14 மீனவர்கள் மாயம்-தேடுதல் வேட்டை தீவிரம்:

கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேர் காணவில்லை. இதையடுத்து அவர்களைக் கண்டுபிடிக்க மீனவர்கள் குழு கடலுக்குள் போயுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 271 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்த படகுகளில் 268 படகுகள் நேற்று கரைக்கு திரும்பி வந்து விட்டன.

சுமன் (29), கதிர்வேல் (45), கோட்டைமுத்து (22), கருப்பையா (24) அப்துல்ரகுமான் (35), அமீர் (40), இப்ராகிம் (37) கணேசன் (40), சந்தோஷ் (28), மகிமைராஜ் (30) ஆகிய 10 மீனவர்கள் சென்ற விசைப்படகுகளும் 10 மீனவர்களும் இன்னும் கரைக்கு திரும்பவில்லை.

இதுபற்றி கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சின்னஅடைக்கலத்திடம் மீனவர்கள் தகவல் தெரிவித்து அவர்களை தேடி கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்கள். உடனே அவர் 5 விசைப்படகுகளில் மீனவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் கடலுக்குள் சென்று தேடினர். ஆனால் இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபற்றி மணமேல்குடி கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் மகேஷிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் காணாமல் போன மீனவர்களை தேடி கண்டுபிடிப்பதற்கு 2 மீட்பு படகுகளை கடலுக்கு அனுப்பிவைத்தார். தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசாரும் படகுகளில் சென்று கடலில் மாயமான மீனவர்களை தேடி வருகிறார்கள். இவர்களைத் தவிர கடலோர காவல்படையினரும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களும் கரைக்கு திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதேபோல, சென்னை காசிமேடு இந்திராநகர் குடிசை பள்ளப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ரமேஷ் (35), தேசப்பன் (24), ராஜேஷ் (25), ஜெயக்குமார் (25) ஆகிய 4 பேரும் கடந்த 4-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

அன்று மாலை 4 மணிக்கு அவர்கள் 4 பேரும் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், கரை திரும்பவில்லை. மீனவர்கள் வைத்திருந்த செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டபோது, `சுவிச் ஆப்’ செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும், இதுகுறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் செய்தனர். மேலும், மீன் வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் கடலோர காவல் படையினர் கப்பல் மூலமும், ஹலிகாப்டர் மூலமும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனாலும், 4 மீனவர்களை கண்டுபிடிக்கவில்லை. 3 நாட்களாகியும் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. கடலில் அதிக அளவு காற்று வீசியதால் படகு திசை மாறி சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே மீனவர்களை காணாத அவர்கள் குடும்பத்தார், கண்ணீருடன் அழுது புலம்பியபடி உள்ளனர். மீட்புப் பணியில் அரசு மெத்தனம் காட்டி வருவதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள்.

நேற்று காலை அ.தி.மு.க. வடசென்னை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெயக்குமார், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடற்கரை கோவிலில் வெள்ளம்:

கன Buy Ampicillin மழையால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மாமல்லபுரத்தில் நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை.

இந்த மழை காரணமாக பிரசித்தி பெற்ற கடற்கரை கோவில் முழுவதும் வெள்ளநீர் சூழந்தது. 2 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் அதை கண்டுகளிக்க வந்த சுற்றுலா பயணிகள் மழை நீரில் நனைந்தபடியே சுற்றிப் பார்த்தனர்.

கடற்கரை கோவிலின் நுழைவு வாயிலில் சுரங்கப்பாதையில் அமைந்துள்ள பார்வையாளர் கட்டண கவுண்ட்டரில் மழை நீர் புகுந்தது. சுமார் 3 அடி ஆழத்திற்கு மழை நீர் தேங்கி கட்டண மையம் நீரில் மூழ்கியது. மழை நீர் உட்புகுந்ததால் டிக்கட் கவுண்ட்டரில் வைத்திருந்த நுழைவு சீட்டு கட்டுகள் ஆயிரக்கணக்கில் நனைந்து நாசமானது.

இதையடுத்து கடற்கரை கோவில் மெயின்கேட் அருகில் தற்காலிக நுழைவு கட்டண மையம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தற்காலிக மையத்தில் நுழைவு சீட்டு பெற்று கடற்கரை கோவிலை கண்டுகளித்து வருகின்றனர்.

மழை காரணமாக மாமல்லபுரம் பகுதி கடலில் கொந்தளிப்பு நிலவுகிறது. இதனால் 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தேவனேரி பகுதியில் கடல் நீர் 5 மீட்டர் அளவுக்கு ஊருக்குள் புகுந்ததால் படகு, வலை உள்ளிட்ட மீன் பிடிசாதங்கள் சேதமடைந்தன.

அகதிகள் வீடுகள் இடிந்து விழுந்தன:

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதி முகாம் உள்ளது. இங்கு 1057 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 741 தமிழர்கள் தங்கியுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் முகாமில் பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ராமலிங்கம், ஸ்டெல்லா, செல்வி, ஆறுமுகம், ரவி, இலங்கேஸ்வரி உள்பட 19 பேரின் வீடுகள் மழையால் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Add Comment