இந்திய வெற்றி தொடருமா?* நியூசி., யுடன் இன்று கடைசி மோதல்

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி, இன்று சென்னையில் நடக்க உள்ளது. இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 5-0 என அப்படியே வெல்ல காத்திருக்கிறது இந்திய அணி. மறுபுறம் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் களமிறங்குகிறது நியூசிலாந்து.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 4-0 கணக்கில் தொடரை வென்று விட்டது. தொடரின் 5 வது மற்றும் கடைசி போட்டி, இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.

இளமை எழுச்சி: சேவக், சச்சின், தோனி, ரெய்னா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில், காம்பிர் தலைமையிலான இளம் இந்திய அணி அசத்தி வருகிறது. கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் கலக்கி வருகிறார் காம்பிர். இவருடன் இணைந்து விராத் கோஹ்லி மிரட்டுகிறார். பெங்களூருவில் நடந்த 4 வது போட்டியில், பார்த்திவ் buy Ampicillin online படேல் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். முன்னணி வீரர் யுவராஜ், ரன் குவிக்க வேண்டியது அவசியம்.

யூசுப் அதிரடி: பெங்களூரு போட்டியில், அதிரடியில் மிரட்டினார் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான். தனி ஆளாகப் போராடிய இவர், சதம் அடித்து அணிக்கு சூப்பர் வெற்றி தேடித் தந்தார். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய இவர், இன்றும் அசத்துவார் என எதிர்பார்க்கலாம். ரோகித் சர்மா, சவுரப் திவாரி ஆகியோரும் ஆறுதல் அளிப்பது கூடுதல் பலம்.

பவுலிங் ஆறுதல்:இந்திய அணியின் பவுலிங், ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் கடந்த போட்டியில், செய்த தவறுகளை பவுலர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். ஜாகிர், நெஹ்ரா, பிரவீண் இன்று விக்கெட் வேட்டை நடத்தும் பட்சத்தில், இந்தியா எளிதில் வெற்றி பெறலாம். சொந்த ஊரில் சுழற் பந்துவீச்சாளர் அஷ்வின், முத்திரை பதிக்க காத்திருக்கிறார். கடந்த போட்டியில், இடம் பெறாத துவக்க வீரர் முரளி விஜய், சொந்த ஊரில் நடக்கும் போட்டி என்பதால் வாய்ப்பு பெறலாம்.

இன்றைய போட்டி குறித்து கேப்டன் காம்பிர் கூறுகையில்,”” தொடரை கைப்பற்றி விட்டாலும், இன்றைய போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இதிலும் வெற்றி பெற்று 5-0 என தொடரை வெல்வோம். தென் ஆப்ரிக்க தொடருக்கு முன்பாக, இவ்வெற்றி உற்சாகம் அளிப்பதாய் அமையும்,” என்றார்.

நியூசிலாந்து ஏக்கம்: நியூசிலாந்து அணிக்கு, இந்திய தொடர் படு ஏமாற்றம் அளித்துள்ளது. பிரண்டன் மெக்கலம், கப்டில், ரோஸ் டெய்லர், வெட்டோரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருந்தும் வெற்றி பெற தடுமாறி வருகிறது. ஆல்-ரவுண்டர் பிராங்க்ளின், சூப்பர் பார்மில் உள்ளார். கடந்த போட்டியில் 98 ரன்கள் விளாசிய இவர், இன்றும் நியூசிலாந்து அணிக்கு கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மில்ஸ், சவுத்தி, மெக்கே, ஸ்டைரிஸ் உள்ளிட்ட பவுலர்கள், விக்கெட் வேட்டை நடத்த வேண்டும். ஏற்கனவே ஒரு நாள் தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணி, இன்று ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. இது குறித்து வெட்டோரி கூறுகையில்,”” இன்று நடக்க உள்ள கடைசி போட்டியில், வெற்றியை எட்ட கடுமையாகப் போராடுவோம். தொடரை பறிகொடுத்து விட்டோம். இருப்பினும் நம்பிக்கையுடன் விளையாடுவோம்,” என்றார்.

இயற்கை ஒத்துழைக்குமா?
சென்னையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இருப்பினும் கடந்த 2 நாட்கள் மழை பெய்ய வில்லை. இதனால் போட்டியை நடத்த மைதானம் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் சிக்கல் நீடிக்கிறது.

மைதானத்தில் இதுவரை…
* இன்றைய போட்டி நடக்க உள்ள சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இதுவரை இந்திய அணி, 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், 2 வெற்றி 3 தோல்விகளை பெற்றுள்ளது. 2 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டன.
* இம்மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 292 (எதிர்-பாகிஸ்தான், 1997). குறைந்த பட்ச ஸ்கோர் 221 (எதிர்-இங்கிலாந்து, 2002).
* இங்கு அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2 அரை சதம் உட்பட 188 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவின் தோனி, டிராவிட் ஆகியோர் இம்மைதானத்தில் சதம் அடித்துள்ளனர்.
* இம்மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள இந்திய வீரர், அகார்கர். இவர், 3 போட்டிகளில் 7 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

Add Comment