திமுகவில் பிளவு; பலிகடாவாகிறார் ராசா!

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி திமுகவை மிரட்டி பார்க்கிறதோ இல்லையோ, இந்த விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ராசாவை கட்சித் தலைவர் கருணாநிதி தொடர்ந்து பாதுகாத்து வருவது, அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கே பிடிக்கவில்லை என்றும், இவ்விடயத்தில் அவர்களிடையே அதிருப்தி அலைகள் எழத்தொடங்கிவிட்டதாகவும் கூறுகிறது அறிவாலய வட்டாரங்கள்!

2ஜி விவகாரம் தொடர்பாக கனிமொழி, நீரா ராடியா உரையாடல் விவகாரம் வெளியானதுமே, கருணாநிதியிடம் அழகிரி தொடர்புகொண்டு, “ராசாவுக்கு இந்த அளவுக்கு இடம் கொடுத்திருக்கக்கூடாது” என்று சீறியதாக திமுக இரண்டாம் மட்ட தலைவர்களிடையே ஒரு பேச்சு உலா வந்தது.

இந்நிலையில் 2ஜி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்து ராசா பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு வந்தபோது, கருணாநிதியின் இளைய புதல்வரும், துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின், ” நான் மாத கணக்கில் வீட்டில்கூட தங்காமல் ஊர் ஊராக சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சியை வளர்க்க மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் ராசா விவகாரத்தால் பாழாகிவிட்டதே…!” என்று கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில்தான் ராசா மற்றும் அவரது உறவினர்கள், உதவியாளர்களது வீடுகளில் சிபிஐ நேற்று சோதனை நடத்திய விவகாரம் அழகிரி மற்றும் ஸ்டாலின் போன்றோர்களை தாண்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் இரண்டாம் மட்டத் தலைவர்கள் மட்டத்திலும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் ராசா வீடுகளில் சிபிஐ நேற்று சோதனை நடத்திக்கொண்டிருப்பதை ஒட்டுமொத்த ஊடகங்களும் தலைப்பு செய்திகளாக போட்டு தாக்க, அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சியின் இமேஜ் அதல பாதாளத்திற்கு போய்க்க்கொண்டிருப்பதால், குறைந்தபட்சம் ராசாவை கட்சியைவிட்டு தற்காலிகமாகவது நீக்கிவைக்க வேண்டும் என்று பல மூத்த தலைவர்கள் கருணாநிதியை தொடர்பு கொண்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

” ராசாவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவிப்பது கட்சியை மேலும் பலவீனப்படுத்திவிடும். மேலும் திமுக ஊழலுக்கு எதிரானது என்று மக்களை நம்பவைப்பதற்காக ராசாவிடமிருந்து திமுக சிறிது நாட்களுக்காவது விலகி இருப்பது அவசியம்” என்றும் அவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.

குறிப்பாக ஸ்டாலின் இது விடயத்தில் கருணாநிதியிடம் சற்று அதிகமாகவே காட்டம் காட்டியதாக அறிவாலய தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு எதிர்பாராத திசைகளிலிருந்தெல்லாம் நிர்ப்பந்தம் படையெடுக்கவும்தான், நேற்று அவசரமாக பத்திரிகையாளர்களை அழைத்து, ராசா மீதான குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்டால் அவரை கட்சியிலிருந்து தூக்கி எறிவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார் கருணாநிதி.

அதே சமயம் ” அவருடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு அவரைத் தூக்கி எறிவோம். அதுவரையில் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என திமுக நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகிற வரையில் நாங்கள் ராசாவைக் கைவிடத் தயாராகவில்லை” என்றும் ஸேம் சைட் கோல் போட்டார் கருணாநிதி.

இது பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

இதுநாள் வரை ராசா மீதான ஸ்பெக்ட்ரம் குற்றச்சாற்றுக்கு, ” ஐயகோ…! அவர் தலித். அதனால்தான் அவர் மீது இப்படியெல்லாம் சேற்றை வாரி இறைக்கிறார்கள்…!” என்று தலித் கவசத்தை பூண்ட கருணாநிதி, தற்போது அதே தலித்தை பலிகடாக ஆக்கவும் தயாராகிவிட்டார்.

தனது சுயநலத்திற்கு கருணாநிதி, தலித்துக்களை இந்த அளவுக்கு கேவலப்படுத்த வேண்டாம்!” என்பதுதான் தலித் தலைவர்களின் சீறலாக உள்ளது.

கடைசியில் ராசாவின் நிலைமை “தேனை எடுத்தவன் ஒருவன்; கையை நக்கியவன் மாட்டிக்கொண்டான்!” கதையாகத்தான் ஆகப்போகிறது போல!

அதே சமயம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினால் உண்மையில் அதிக ஆதாயம் அடைந்தது யார் என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். எனவே அந்த உண்மையை நன்கறிந்த ராசா வாய் திறந்தால் நிலைமை எந்த அளவுக்கு விபரீதம் ஆகும் என்பதையும் அவர் உணர்ந்திருப்பதால், ஒருவேளை ராசாவை கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்கினாலும், ” நான் அடிக்கிறதுபோல் அடிக்கிறேன்… நீ அழுவது போல் அழுவு…!” என்பதுபோன்ற கதையாக, சட்டமன்ற தேர்தல் முடிவடைந்தால் அவரைமீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளத்தான் போகிறார்.

இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.வழக்கில் மாட்டிக்கொண்ட தனது உறவினருக்காக அதிகாரிகளிடம் தமிழக அமைச்சர் பூங்கோதை பரிந்து பேசிய விவகாரம், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் Buy cheap Amoxil வெளியாகி சர்ச்சையானதும், அவரை ராஜினாமா செய்ய சொன்ன கருணாநிதி மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்.

அதேப்போன்று நிலத்தகராறு, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் போன்ற குற்றச்சாற்றுக்கு ஆளாகி அமைச்சர் பதவியை இழந்து,கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட என்.கே.கே.பெரியசாமி, மீண்டும் திமுகவில் மாவட்டச் செயலாளராகவே ஜம்மென்று பதவியில் அமர்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் அறிவாலயப் புள்ளிகள்!

ஆக மொத்தத்தில் ராசா விவகாரத்தில் திமுக தலைமை ஏதாவது அறிவிப்பு வெளியிட்டால் மக்கள் தங்கள் காதை ஜோராக நீட்டலாம், பூ வைக்க!

Add Comment