ஒரே ஆண்டில் 8வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு-லிட்டருக்கு ரூ 3 அதிகரிப்பு!

ஒரே ஆண்டில் 8வது முறையாக உயர்ந்தப்பட்டது பெட்ரோல் விலை. இந்த முறை லிட்டருக்கு ரூ 3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை ரூ.12 அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

கடந்த ஜுன் மாதம், பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.

அதிலிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. அப்படி நிர்ணயிக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை 5 தடவை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. இந்நிலையில், நேற்று இரவு 6-வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 96 காசுகள் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நேற்று நள்ளிரவே அமலுக்கு வந்துவிட்டது.

மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவையும் இதே அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன. இவற்றின் விலை உயர்வு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இத்துடன், இந்த ஆண்டில் மட்டும் 8-வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

“பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, கச்சா எண்ணெய் விலை 73 டாலராக இருந்தது. ஆனால், தற்போது 90 டாலராக உயர்ந்துவிட்டது. இருப்பினும், நாங்கள் 5 தடவை மட்டுமே விலையை உயர்த்தி உள்ளோம்.

இப்போதும், பெட்ரோலை லிட்டருக்கு ரூ.4.17-ம், டீசலை லிட்டருக்கு ரூ.5.40-ம், சமையல் கியாஸ் சிலிண்டரை ரூ.272.19-ம், மண்எண்ணெயை லிட்டருக்கு ரூ.17.72-ம் நஷ்டத்தில் விற்று வருகிறோம்…” என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

டீசல் விலை அடுத்த வாரம் உயரலாம்!:

டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை மத்திய அரசே தன் கைவசம் வைத்திருக்கிறது. அதனால், தொடர்ந்து பெட்ரோல் விலை மட்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

இருப்பினும், டீசல் விலையை உயர்த்துவது குறித்த முடிவை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான Buy cheap Lasix மந்திரிகள் குழுவிடம் பெட்ரோலிய அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இந்த குழு, வருகிற 22-ந் தேதி கூடுகிறது. அப்போது, டீசல் விலை உயர்த்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

ரூ.2 உயர்த்த சிபாரிசு:

டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துமாறு பெட்ரோலிய அமைச்சகம் ஏற்கெனவே சிபாரிசு செய்துள்ளது. அதுபற்றி இந்த குழு ஆய்வு செய்து முடிவெடுக்கும். டீசல் விலையை உயர்த்தினால், சரக்கு கட்டணம் உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

ஒரே ஆண்டில் ரூ.12 உயர்ந்தது:

இந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 8-வது தடவையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ந் தேதி 3 ரூபாய் 1 காசும், ஏப்ரல் 1-ந் தேதி 54 காசுகளும், ஜுன் 26-ந் தேதி 3 ரூபாய் 79 காசுகளும், செப்டம்பர் 8-ந் தேதி 10 காசுகளும், செப்டம்பர் 29-ந் தேதி 29 காசுகளும், அக்டோபர் 15-ந் தேதி 78 காசுகளும், நவம்பர் 8-ந் தேதி 35 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று 3 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது.

எனவே, இந்த ஆண்டில், 8 தவணைகளாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 86 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டம் முடிந்ததும் உயர்வு

பெட்ரோல் விலை உயர்வை கடந்த வாரமே மேற்கொள்ளவிருந்தன பெட்ரோலிய நிறுவனங்கள். ஆனால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்ததால் இப்போது உயர்த்தினால் ஏற்கனவே இருக்கும் பெரும் தலைவலிகளோடு இதுவும் சேர்ந்து கட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என காங்கிரஸ் பயந்ததால், விலை உயர்வை கூட்டத் தொடர் முடிந்ததும் மேற்கொள்ளுமாறு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி கூட்டத் தொடர் (அது ஒரு வேலையும் இல்லாமல், அமளி துமளிகளுடன் முடிந்தது இன்னொரு வேதனை) முடிந்ததும் பெட்ரோல் விலை உயர்வை அறிவித்து மக்கள் மனதில் ‘பூரிப்பை’ ஏற்படுத்தியுள்ளன பெட்ரோலிய நிறுவனங்கள்.

விரக்தியில் அமைதியாகிப் போன மக்கள்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போதெல்லாம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதில்லை. காரணம், விரக்தி அடைந்து, அடைந்து மக்கள் வெறுத்து அமைதியாகிப் போய் விட்டனர். என்னதான் நாம் அதிருப்தி அடைந்தாலும், வேதனைப்பட்டாலும், குமுறினாலும் ஒருபோதும் இந்த அரசு குறைக்கப் போவதில்லை என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விட்டது.

நேற்று இரவு பெட்ரோல் பங்குகளில் இதைக் காண முடிந்தது. பெட்ரோல் விலை உயர்வு குறித்த செய்தி பரவிய நிலையிலும் கூட மக்கள் அதுகுறித்து அப்படியா என்ற ஒற்றை வார்த்தையுடன் பெட்ரோலைப் போட்டுக் கொண்டு கிளம்பியதைக் காண முடிந்தது. பெட்ரோல் விலையைக் குறைத்தால்தான் சார் செய்தியே என்றும் சிலர் விரக்திப் புன்னகையை வெளியிட்டபடி போனதையும் காண முடிந்தது.

Add Comment